ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

மீண்டும் காசநோய் மரணங்கள்... பிரச்னையை கிளப்பிய கொரோனா.. அதிர்ச்சி புள்ளிவிவரம்!

மீண்டும் காசநோய் மரணங்கள்... பிரச்னையை கிளப்பிய கொரோனா.. அதிர்ச்சி புள்ளிவிவரம்!

காசநோய்

காசநோய்

ஊரடங்கு காலத்தில் வீட்டுக்கு உள்ளேயே முடங்கிக் கிடந்தபோது சாதாரண மக்களுக்கே மன அழுத்தம், உடல் பருமன் போன்ற பலவித பிரச்சினைகள் ஏற்பட்டன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கொரோனா காலகட்டத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. 2019ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கிய இந்த பெருந்தொற்று வைரஸ் பாதிப்பு, ஏறத்தாழ 2 ஆண்டுகள் நீடித்தது. அவ்வப்போது தொற்று பாதிப்புகள் குறைவதும், பின்னர் மளமளவென அதிகரிப்பதுமாக மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வந்தது.

குறிப்பாக, முழு ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் பல மாதங்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கியிருக்கும் நிலை ஏற்பட்டது. கொரோனா ஏதோ முழுவதுமாக ஓய்ந்து விட்டதைப் போல தோன்றினாலும், அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீண்ட கால பக்கவிளைவுகள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றன.

குறிப்பாக, அண்மைக்காலங்களில் இல்லாத அளவுக்கு காச நோய் பாதிப்பு மற்றும் மரணங்கள் அதிகரித்துள்ளன என்று இந்த நோய் தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் இந்த ஆண்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்கொல்லி நோய் இது :

காசநோய் என்பது ஒருவகை பாக்டீரியாவால் வருகிறது. இது பிரதானமாக நமது நுரையீரலை பாதிக்கிறது. கொரோனாவுக்கு அடுத்தபடியாக, உலகின் மாபெரும் உயிர்கொல்லி நோயாக இது கருதப்படுகிறது. பாதிப்படைந்த நபரிடம் இருந்து மற்றொரு நபருக்கு காற்று மூலமாக பரவுகிறது. அதாவது, பாதிக்கப்பட்ட நபர் இருமும்போது, தும்மும்போது இது பரவுகிறது. ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களை பாதிக்கிறது.

கொரோனா கட்டுப்பாடுகளின் தாக்கம் : 

ஊரடங்கு காலத்தில் வீட்டுக்கு உள்ளேயே முடங்கிக் கிடந்தபோது சாதாரண மக்களுக்கே மன அழுத்தம், உடல் பருமன் போன்ற பலவித பிரச்சினைகள் ஏற்பட்டன. அதிலும், வெளியே சென்றால் தொற்று ஏற்பட்டு விடும் என்று பயந்து, வழக்கமான சிகிச்சைகளையும் தவிர்த்த காச நோயாளிகள் இன்னும் கூடுதலாகப் பாதிக்கப்பட்டனர்.

காசநோய் பாதிப்பு அதிகரிப்பு : 

கொரோனா காலகட்டத்தில், பொதுமக்கள் மருத்துவ பரிசோதனைகளை கைவிட்ட நிலையில், காசநோய் பாதிக்கப்பட்ட பலர், தங்களை அறியாமலேயே சுற்றியுள்ள மக்களுக்கும் அதை பரப்பி வந்தனர். குறிப்பாக மருத்துவ வசதிகள் குறைவாக உள்ள பின்தங்கிய நாடுகளில் காசநோய் பாதிப்பு மிகுதியாக இருந்தது.

புள்ளிவிவரங்கள் : 

கடந்த 2021ஆம் ஆண்டில் உலகெங்கிலும் 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் காசநோயால் பாதிக்கப்பட்டனர் என்று உலக சுகாதார ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது. அதற்கு முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் இது 4.5 சதவீதம் அதிகமாகும். ஏறக்குறைய 1.6 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளனர் என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Also Read : Tuberculosis : காசநோய் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்..!

மோசமான நிலையில் பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் : 

கிழக்கத்திய ஐரோப்பிய பிராந்தியத்தில் பல நாடுகள் இடையே தற்போது நடைபெறுகின்ற போர், ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் உள்நாட்டு குளறுபடிகள் போன்றவை காரணமாக அங்கெல்லாம் காசநோயை கண்டறிவதற்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை நடவடிக்கைகள் மோசமான நிலையில் உள்ளன என்று உலக சுகாதார ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது.

Published by:Josephine Aarthy
First published:

Tags: Covid-19, Disease, Tuberculosis