ஒரே நேரத்தில் கொரோனா தொற்றின் பல வேரியன்ட்களால் பாதிக்கப்படும் அபாயம் யாருக்கு அதிகம்?

கொரோனா

பெண் மருத்துவர் ஒருவர் கோவிட் -19 வைரஸின் வேரியன்ட்களான ஆல்பா மற்றும் டெல்டா ஆகிய 2 வகைகளால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

  • Share this:
ஆல்பா, டெல்டா , டெல்டா பிளஸ் உள்ளிட்ட பல கொரோனா வைரஸின் வேரியன்ட்கள் உலகை தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றன. உலக நாடுகள் தங்கள் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில், சில வேரியன்ட்களுக்கு எதிராக தற்போதுள்ள தடுப்பூசிகள் பயனுள்ளதாக இருக்குமா என்ற கேள்விகள் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனிடையே அசாம் மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் மருத்துவர் ஒருவர் கோவிட் -19 வைரஸின் வேரியன்ட்களான ஆல்பா மற்றும் டெல்டா ஆகிய 2 வகைகளால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

மூன்றாம் அலை எப்போது வேண்டுமானாலும் வீரியமாக பரவலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், ஒரே நேரத்தில் ஆல்பா மற்றும் டெல்டா வேரியன்ட்களால் மருத்துவர் ஒருவரே பாதிக்கப்பட்ட சம்பவம் சக மருத்துவர்கள் மற்றும் மக்களிடையே மிகுந்த கவலை மற்றும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனினும் மூத்த நிபுணர் ஒருவர் இது பற்றி கூறுகையில், ஒரே நேரத்தில் 2 வேரியன்ட்களால் பாதிக்கப்படுவது கடுமையான நோயுடன் தொடர்புடையதாக இருக்காது என்று கூறி ஆறுதல் அளித்துள்ளார். 

இதை உறுதிப்படுத்தும் விதமாக இரட்டை நோய் தொற்றால் பாதிக்கபட்டுள்ள சில நோயாளிகளுக்கு லேசான தொண்டை வலி, உடல் வலி மற்றும் தூக்கமின்மை உள்ளிட்ட பிரச்சனைகள் மட்டுமே இருந்ததாகவும், இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமல் குணமடைந்துள்ளதாகவும் அசாம் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ஒரே நேரத்தில் பல வேரியன்ட்கள் மூலம் ஒருவர் பாதிக்கப்படுவது சாத்தியம் என்பது இதன் மூலம் உறுதியாகி உள்ள நிலையில், இதன் அதிகபட்ச தாக்கம் என்ன விளைவுகளை ஏற்படுத்தும், இறப்புடன் இதற்கு தொடர்பு இருக்குமா என்பது பற்றி எல்லாம் இன்னும் அறியப்படவில்லை.

ஏனென்றால் எந்த ஒரு உறுதியான தரவுகளை சொல்ல கூடிய அளவிற்கு இரட்டை தொற்று பாதிப்புகள் குறைவாகவே காணப்படுகின்றன. எனவே இது தொடர்பான தகவல்களை சேகரிக்கும் பணியில் நிபுணர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை இரட்டை தொற்று கண்டறியப்பட்ட நோயாளிகளில் முற்றிலும் தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்கள் மற்றும் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் அடக்கம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.தடுப்பூசி போடாதவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்களா?

ஒரே நேரத்தில் இரட்டை வேரியன்ட்களால் பாதிக்கப்படுவது முக்கியமாக தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களுக்கு பெரிய பிரச்சனையாக இருக்க கூடும். எடுத்துக்காட்டாக இங்கிலாந்தில் டெல்டா மற்றும் ஆல்பா வேரியன்ட் வைரஸ்கள் மிகவும் பரவலாக இருக்கின்றன. ஆனால் அங்கு இரட்டை தொற்று பெருமளவு கண்டறியப்படவில்லை. இதற்கு காரணம் அங்குள்ள பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர். இதனால் அங்கு மீண்டும் தொற்று ஏற்படுவது அல்லது கடுமையான தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று நிபுணர்கள் சுட்டி காட்டி உள்ளனர்.வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது அவசியமா?

இந்தியாவை பொறுத்த வரை, தற்போது வரை 40% மக்கள் கூட 2 டோஸ் முழு தடுப்பூசியை போட்டு கொள்ளவில்லை. ஒரு டோஸ் கூட போட்டு கொள்ளாத மக்கள் இன்னும் பலர் உள்ளனர். இதை கவலைக்குரிய விஷயமாக பார்க்கும் நிபுணர்கள், இது மீண்டும் தொற்று ஏற்படுவது மற்றும் ஒரே நேரத்தில் பல வேரியன்ட் தொற்றுகள் ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம் என்கிறார்கள். இந்த ஆபத்து இருப்பதால் தடுப்பூசி போட்டு கொண்டிருந்தாலும், போட்டு கொள்ளாவிட்டாலும்தொற்று தடுப்பு நடவடிக்கைகளையும், வழிகாட்டுதல்களையும் பின்பற்ற வேண்டும்.

ஏற்கனவே கோவிட்டால் பாதிக்கப்பட்டு தற்போது குணமடைந்துள்ளவர்களும் தடுப்பூசி போட்டு கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். காற்றோட்டமான அறையை பயன்படுத்துவது, நெரிசலான இடங்களுக்கு செல்லாமல் தவிர்ப்பது மற்றும் தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களுடனான சந்திப்பை பாதுகாப்பானதாக மாற்றுவது உள்ளிட்ட வழிமுறைகளையும் பின்பற்றுவது நல்லது.

டிப்ஸ்:

* வெளியே எங்கு சென்றாலும் மாஸ்க் கட்டாயம் அணிந்து செல்லுங்கள்

* உங்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே குறைந்தபட்சம் 6 அடி தூரத்தை பராமரியுங்கள்

* இன்னும் தடுப்பூசி போட்டு கொள்ளாமல் இருந்தால் விரைவில் எடுத்து கொள்ளுங்கள்

* உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்து கொள்ளுங்கள்

* கதவுகள், குழாய்கள் மற்றும் மொபைல் ஸ்கிரீன்போன்ற அடிக்கடி தொடப்படும் மேற்பரப்புகளை அவ்வப்போது கிருமி நீக்கம் செய்ய மறவாதீர்கள்

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published: