உடலில் ஆங்காங்கே இருக்கும் கொழுப்பு கட்டிகளால் பயம் இல்லை என்றாலும் அதன் உற்பத்தி அதிகமாகும்போது பலருக்கும் ஒருவித பீதியை உண்டாக்கும். இதை அகற்றலாமா வேண்டாமா என்கிற குழப்பமும் பலருக்கு இருக்கும். இப்படி உங்களின் பல கேள்விகளுக்கு விடையளிக்கிறார் மருத்துவர் சிவக்குமார் (தோல் நோய் நிபுணர் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்) . இவர் அண்ணாநகரில் உள்ள டிசைர் ஏஸ்தெடிக் கிளினிக்கின் தலைமை அறுவை சிகிச்சை நிபுணராக இருக்கிறார்.
கொழுப்பு கட்டி என்றால் என்ன..?
”கொழுப்பு கட்டி என்பது உடலில் சேரும் கொழுப்பு ஓர் இடத்தில் குவிந்து கட்டியாக தோன்றும். பின் அது மெல்ல மெல்ல வளர ஆரம்பிக்கும். இந்த கொழுப்பு கட்டி, உடல் எடையை குறைக்க கொழுப்பை கறைப்பது போல் கரைக்க முடியாது. அது தானாகவே வளரக்கூடிய கட்டி. இந்த கட்டிகள் எதனால் உருவாகிறது, ஏன் உருவாகிறது என்பதற்கு இதுவரை சரியான மருத்துவ சான்றுகள் கிடையாது” என்கிறார் சிவக்குமார்.
இது பரம்பரை நோயா..?
சிலருக்கு இது பரம்பரை நோயாகவும் தொடரும். அதாவது ஒருவருக்கு சிறு வயதிலிருந்தே உடல் முழுவதும் ஆங்காங்கே கொழுப்பு கட்டிகள் அதிகரிக்கிறது எனில் அது பரம்பரை நோயாக இருக்கலாம். எதிர்கால சந்ததிகளுக்கு வரலாம் அல்லது வராமலும் போகலாம். இதை மல்டிபல் லைஃபோமா ( multiple lipoma ) என்று அழைப்பார்கள்.
கொழுப்பு கட்டி எங்கெல்லாம் உருவாகும்..?
கொழுப்பு உடலில் எங்கெல்லாம் சேர்ந்துள்ளதோ அங்கெல்லாம் கொழுப்பு கட்டி உருவாகும். சில கட்டிகள் நரம்புகளில் வரும். மூளையின் வெளிப்புறத்தில் கட்டிகள் உருவாகும். சிலருக்கு தலையில் கூட வரும்.
அதேசமயம் அப்படி இருக்கும் எல்லாமே கொழுப்பு கட்டிகள் என்று நினைத்துக்கொள்வதும் தவறு. சிலருக்கு எண்ணெய் சுரப்பி காரணமாக கட்டிகள் உருவாகும். அவை கொழுப்பு கட்டிகள் கிடையாது. இவை நரம்புகளிலிருந்து உருவாகக் கூடியது. இதை நியூரோ ஃபைப்ரோமா ( neurofibroma ) என்று அழைப்பார்கள். சில கட்டிகள், புற்றுநோய் கட்டிகளாகவும் இருக்கலாம். எனவே உங்களுக்கு கட்டிகள் உருவாகிறது எனில் அதை அசாதாரணமாக விடக்கூடாது. அது என்ன கட்டி என்பதை உறுதி செய்துகொள்வது அவசியம். இதற்கு மருத்துவரை அணுக வேண்டும்.
Also Read : பெரும்பாலும் அதிகாலையில் மாரடைப்பு வர என்ன காரணம்..? விளக்கும் இதய நோய் நிபுணர்...
இந்த கட்டிகளை அகற்றலாமா..?
உடலில் உருவாகும் கட்டி வேகமாக வளர்கிறது, அலர்ஜியை உண்டாக்குகிறது. சீழ் பிடிக்கிறது, நீர் கசிகிறது, தொட்டாலே வலிக்கிறது, தொந்தரவாக இருக்கிறது உள்ளிட்ட பிரச்சனைகளை அனுபவிக்கிறீர்கள் எனில் உடனே மருத்துவரை அனுகுவது அவசியம். அதை தேவைப்பட்டால் அகற்றுவதும் அவசியம். குறிப்பாக கொழுப்புக் கட்டி 5 செ.மீட்டருக்கு மேல் பெரிதாகிறது எனில் அதை நீக்கிவிடுவது நல்லது.
கொழுப்புக்கட்டி முகத்தில் அல்லது கையில் அசிங்கமாக இருக்கிறது எனில் காஸ்மெடிக் காரணங்களுக்காக நீக்கலாம். புற்றுநோயாக மாறும் அபாயம் உள்ளது எனில் அதை கட்டாயம் நீக்கிவிடுவது நல்லது.
கொழுப்பு கட்டி ஒன்றை எடுத்தால் உடல் முழுவதும் அதிகமாக பரவுமா..?
கொழுப்புக் கட்டியை அகற்றுவதால் அது பரவாது. அப்படி அந்த கொழுப்புக் கட்டியை அகற்றினால் மீண்டும் வேறொரு இடத்தில் உருவாகலாம். அதற்காக இதை எடுத்ததால்தான் அது உருவானது என்று அர்த்தமில்லை. கொழுப்புக் கட்டி வந்துவிட்டாலே அது மீண்டும் உடலில் எங்கு வேண்டுமென்றாலும் வரும். நீங்கள் அகற்றுவதால் மீண்டும் உருவாகாமல் இருக்காது என்று சொல்ல முடியாது. அதேசமயம் எடுக்காமல் விட்டாலும் மீண்டும் புதிதாக உருவாகாமல் இருக்காது என்றும் சொல்ல முடியாது.
எப்போது கொழுப்புக்கட்டியை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை..?
கொழுப்பு கட்டியால் எந்த தொந்தரவும் இல்லை. அதனால் எந்த பாதிப்பு, வலி இல்லை, வளரவில்லை எனில் அந்த கொழுப்புக் கட்டிகளை நீக்க வேண்டிய அவசியமில்லை.
கொழுப்புக்கட்டியை கரைக்க முடியுமா..? புதிதாக உருவாகாமல் தடுக்க முடியுமா..?
கொழுப்பு கட்டியை கரைப்பது என்பது சாத்தியமற்றது. அதை சிகிச்சை மூலம் அகற்றிதான் எடுக்க முடியுமே தவிர தானாக கரைக்க முடியாது. இதற்காக எந்தவித மாத்திரைகளும் இல்லை.
இதை வாழ்க்கை முறை மற்றங்கள் , உடற்பயிற்சிகள் மூலமாகவும் சரி செய்ய முடியாது. எதிர்காலத்தில் வராமல் தடுக்கவும் முடியாது. எனவே இது நம் வாழ்க்கை முறையையோ, உணவையோ அல்லது உடற்பயிற்சியையோ சார்ந்து உருவாவது கிடையாது.
யாருக்கெல்லாம் கொழுப்புக்கட்டி வரும் அபாயம் உள்ளது..?
உடல் பருமன் அல்லது வயதானவர்களுக்கு கொழுப்பு கட்டி உருவாவதற்காக வாய்ப்புகள் உண்டு. இந்த கொழுப்பு கட்டிகளால் எந்தவிதமான நோயோ, பக்கவிளைவுகளோ வராது. அந்த கட்டிகள் புற்றுநோயாக மாறுமே தவிர அதனால் எந்த பாதிப்பும் இல்லை. எனவே அதை நினைத்து பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. கட்டிகள் சின்னதாக இருக்கும்போதே அதை நீக்கிவிடுவது நல்லது. பெரிதானபின் அகற்றினால் அதன் வடு பெரிதாக இருக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Lipoma, Skin Disease, டாக்டர் ஒரு டவுட்