விவேக் மரணத்தின் உண்மை காரணம் என்ன? தடுப்பூசிக்கும் இருதய அடைப்புக்கும் தொடர்பு உண்டா?

விவேக் மரணத்தின் உண்மை காரணம் என்ன? தடுப்பூசிக்கும் இருதய அடைப்புக்கும் தொடர்பு உண்டா?

நடிகர் விவேக்

இதுவரை கோவாக்ஸின் ஊசி செலுத்தி கொண்ட 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இது போன்ற பக்க விளைவு ஒருவருக்குக் கூட ஏற்படவில்லை.

  • Share this:
அப்துல்கலாமின் சிந்தனைகளை வாழ்க்கையில் பின்பற்றியவர் விவேக். வாழ்க்கை பயணத்தையும் அவரைப்போலவே எதிர்பாராத விதமாக மாரடைப்பால் சட்டென முடித்துக்கொள்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

தடுப்பூசிகளால் மக்களுக்கு நன்மை உள்ளது என்று எடுத்துக் கூறி அவர்களை கோவிட் நோயிலிருந்து காக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் ஏப்ரல் 15 தடுப்பு ஊசி எடுத்துக்கொண்டார்.  ஏப்ரல் 16 வீட்டில் நாள்தோறும் செய்யக்கூடிய வேலைகளை செய்து கொண்டிருக்கும் போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  தடுக்க முடியாத , இறுதி பயணத்தை துவங்கிவிட்டார்.

தடுப்பூசி போட்ட ஒரே நாளுக்குள் இதுபோன்று நடந்துள்ளதால் தடுப்பூசிக்கும் இருதய மாரடைப்புக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமா என்ற எண்ணம் நம் எல்லோருக்கும் வருவது நியாயம்.

இருதய அடைப்பு மாரடைப்பு எப்படி ஏற்பட்டிருக்கலாம்?
என்ன காரணம்?

விவேக் மருத்துவமனைக்கு வந்த உடனே இருதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாய்களில் ஏதேனும் அடைப்பு இருக்கிறதா என்று ஆன்ஜியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டு அதில் முக்கியமான
ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விவேக்கிற்கு ரத்த கொதிப்பும் இருந்திருக்கிறது. அதோடு ரத்தக்குழாயில் கண்டுபிடிக்கப்பட்ட அடைப்பு புதியதாக உருவானதல்ல. நாட்பட்டதாகவும் பொதுவாக இந்த வயதில் இருதய ரத்தக்குழாயில் ஏற்படக்கூடிய ஒரு அடைப்பாகவுமே இருந்திருக்கிறது. அது நீக்கப்பட்டு ( ஆன்ஜியோப்ளாஸ்டி) எக்மோ கருவி பொருத்தப்பட்டுள்ளது.

பொதுவாக மாரடைப்பு ஏற்படக் கூடிய வயது 55 இல் இருந்து 65 வரை.

ஒரு மருந்தினுடைய பக்க விளைவு இருதயத்தில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பு வித்தியாசமாக இருக்கும். மற்றும் மிகச் சமீபத்தில் உண்டான பாதிப்பிற்குரிய அறிகுறிகளும் இருக்கும்.

தடுப்பூசிகள் உண்டாகும் பக்க விளைவுகள்

1 . நேரடியான பக்க விளைவுகள்

2. தயாரிப்பில் உண்டாகக் கூடிய பிரச்சனைகளால் பக்கவிளைவுகள்

3 தடுப்பூசி செலுத்தும் இடம் செலுத்துபவர்கள் செலுத்தக் கூடிய பொருட்கள் இவற்றால் உண்டான பக்க விளைவுகள்

4.தற்செயலாக உண்டாகும் பக்க விளைவுகள்

மருந்துகளால் அதீதமாக உண்டாகக்கூடிய (அலர்ஜி) ஒவ்வாமையால் இருதயம் பாதிக்கப்படலாம் . ஆனால் அப்படி உண்டாகும் ஒவ்வாமை ஊசி செலுத்திய சில நிமிடங்களிலேயே தொடங்கிவிடும். பல மணி நேரங்கள் கழித்து அலர்ஜி உண்டாவது மிகவும் அரிது.

தடுப்பூசி போட்டு ரத்தம் உறைவதால் மாரடைப்பு உண்டாக சாத்தியம் உண்டா?

தடுப்பூசி போட்டு ,எதிர்ப்பு அணுக்கள் உண்டாகி பின்னர் அது ரத்தத்தில் கட்டிகளை உருவாக்குவதற்கு குறைந்தது மூன்றிலிருந்து நான்கு நாட்கள் தேவைப்படும் . ஊசி செலுத்தி 24 மணி நேரத்திற்குள் ரத்த கட்டி உண்டாக வாய்ப்புகள் இல்லை.

இவரோடு ஊசி செலுத்திக் கொண்ட மற்ற எவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.

இதுவரை கோவாக்ஸின் ஊசி செலுத்தி கொண்ட 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இது போன்ற பக்க விளைவு ஒருவருக்குக் கூட ஏற்படவில்லை.

இந்த அறிவியல் உண்மைகளில் இருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் விவேக்கிற்கு ஏற்பட்ட மாரடைப்பு தற்செயலானது. துரதிஷ்டவசமானது. தடுப்பூசிக்கு எந்தவிதமான தொடர்பும் இருப்பதற்கு வாய்ப்பில்லை.

விவேக் சமூக அக்கறை கொண்ட மனிதர் .  அப்துல்கலாமின் கனவுகளை நனவாக்க வேண்டுமென்று அவருடைய கொள்கைகளை பின்பற்றி வாழ்ந்தவர். மரம் நடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இறப்பதற்கு முதல் நாள் கூட சமூக அக்கறை கொண்ட மனிதராக முன்மாதிரியாக தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

அதன் மூலம் பல ஆயிரம் மக்களை தடுப்பூசி செலுத்துவதற்கு முன் வர வைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் செயல்பட்டார்.

அவருடைய நல்ல முயற்சி வீணாகி விடக்கூடாது.
தடுப்பூசி செலுத்தி கொண்டு எந்த பிரச்சனைகள் வந்தாலும் பலரும் அதை தடுப்பூசியோடு தொடர்புபடுத்தி பயப்படுகிறார்கள். பீதி அடைகிறார்கள்.  ஆனால்அதில் உள்ள அறிவியல் உண்மைகளை ஆராயும் பொழுது தான் நமக்கு உண்மையான காரணம் புலப்படுகிறது.

தடுப்பூசிகளை தைரியமாக முன்வந்து செலுத்தி கொள்வது நம்மை கோவிட் நோயிலிருந்து பாதுகாப்பதுடன் விவேக் அவர்களுக்கு நாம் செய்யும் அஞ்சலியாகவும் இருக்கும்.
Published by:Arun
First published: