இந்த ஆண்டு அன்னையர் தினம் பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவர் நிக் ஜொனாஸ் ஆகியோருக்கு மிகவும் உணர்ச்சிகரமானது மற்றும் மறக்க முடியாதது. ஏனென்றால் பிறந்ததில் இருந்து ஏறக்குறைய 100 நாட்களுக்கு மேல் மருத்துவமனையின் NICU care-ல் சிகிச்சை பெற்று வந்த தங்களுக்கு புதிதாக பிறந்த பெண் குழந்தையை இறுதியாக பத்திரமாக வீட்டிற்கு அழைத்து வந்தனர் இருவரும்.
குழந்தை பிறந்ததில் இருந்து தான் எதிர்கொண்ட மாதங்களை "ரோலர்கோஸ்டர்" என்று இன்ஸ்டாவில் குறிப்பிட்டுள்ள பிரியங்கா சோப்ரா, சவாலான சில மாதங்களை எதிர் கொண்ட போதிலும், பின்னோக்கிப் பார்த்தால், ஒவ்வொரு கணமும் எவ்வளவு மதிப்புமிக்கது என்பது புரிவதாக குறிப்பிட்டுள்ளார். லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ராடி சில்ட்ரன்ஸ் லா ஜோல்லா மற்றும் சிடார் சினாய் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டுள்ளார் பிரியங்கா சோப்ரா.
உங்களுக்கு ICU கவனிப்பு பற்றி தெரிந்திருக்கும். ஆனால் NICU care பற்றி உங்களுக்கு தெரியுமா.? இல்லை என்றால் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்..
புதிதாக பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவு தான் NICU. புதிதாக பிறந்த குழந்தையை NICU-வில் (Neonatal intensive care unit) அனுமதிப்பது பெற்றோருக்கு கடினமான மற்றும் இதயத்தை உடைக்கும் அனுபவமாக இருக்கும் என்கிறார் ஃபோர்டிஸ் மெமோரியல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், இயக்குனர் மற்றும் ஹெச்ஓடி-யான டாக்டர் டி.ஜே. ஆண்டனி. NICU என்பது மருத்துவமனையில் "மிகவும் நோய்வாய்ப்பட்ட" மற்றும் "கண்காணிப்பு மற்றும் சிகிச்சை அவசியம்" என்ற தீவிர நிலை தேவைப்படும் புதிதாகப் பிறந்த குழந்தைகளை கவனிப்பதற்கான வசதிகளை கொண்ட பிரிவாகும்.
உயிருக்கு ஆபத்தான பிரச்சனைகள் உள்ள புதிதாக பிறந்த குழந்தைகளை NICU கவனித்துக் கொள்கிறது. NICU-வில் அட்மிட் செய்யப்படும் குழந்தைகளில் பெரும்பாலானோர் ப்ரீமெச்சூர் அதாவது எதிர்பார்க்கும் பிரசவ தேதிக்கு முன்பே பிறந்தவர்கள். கர்ப்பம் சுமார் 40 வாரங்கள் நீடிக்கும். எனவே 37-40 வாரங்களுக்கு இடையில் பிறக்கும் குழந்தைகளுக்கு பெரும்பாலும் தீவிர பாதிப்பிற்கு உள்ளாவதில்லை. ஆனால் 37 வாரங்களுக்கு முன்பு பிறக்கும் குழந்தைகளுக்கு சிலநேரம் NICU கவனிப்பு தேவைப்படும். சிலருக்கு 28 வாரங்களுக்குள் குழந்தை பிறக்கும். இவ்வளவு சீக்கிரம் பிறக்கும் குழந்தைகளுக்கு நீண்ட நாள் NICU கவனிப்பு தேவைப்படும் என்கிறார் டாக்டர் டி.ஜே. ஆண்டனி.
Also Read : தாய்மார்களே உஷார்... குழந்தையை குப்புற படுக்க வைத்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்..
வெகு சீக்கிரமே பிறக்கும் குழந்தைகளுக்கு முக்கிய உள்ளுறுப்புகள் சரியாக வளர்ச்சியடையாமல் இருப்பது போன்ற பல மருத்துவப் பிரச்சனைகள் இருக்கும். அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு கண்காணிப்பு மற்றும் சிகிச்சை தேவைப்படும். நுரையீரல் முதிர்ச்சியடையாமல் இருந்தால் வென்டிலேட்டர்கள் அல்லது வேறு வழியில் அவர்களுக்கு செயற்கை சுவாசம் கொடுக்க வேண்டும். முன்கூட்டி பிறந்த குழந்தைகளைத் தவிர நோய்த்தொற்று, பிறவி அசாதாரணங்கள் போன்ற மருத்துவ அல்லது அறுவை சிகிச்சை பிரச்சனைகளுடன் பிறக்கும் குழந்தைகளும் NICU-வில் அட்மிட் செய்யப்படுவார்கள். NICU-வில் குழந்தைகளின் இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், ஆக்ஸிஜன் அளவுகள் மற்றும் வெப்பநிலை தீவிரமாக கண்காணிக்கப்படும். குழந்தையின் நிலையில் ஏதேனும் மாற்றத்தை கண்டால் அவர்களது ஆரோக்கியத்தை உறுதி செய்ய விரைவான முடிவுகளை அங்கிருக்கும் சீனியர் டாக்டர்கள் எடுப்பார்கள்.
பெரும்பாலும் செயற்கை சுவாசமின்றி இயற்கையாக சுவாசிக்கும் அளவிற்கு உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணும் போது, மூச்சுத் திணறல் இல்லாமல் மற்றும் வாய்வழி உணவுகள் எடுத்து கொள்ளும் நிலை ஏற்பட்டவுடன் பெற்றோருடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கபடுவார்கள் NICU-வில் அட்மிட்டான குழந்தைகள். சில சந்தர்ப்பங்களில் வீட்டிலேயே சுவாச ஆதரவு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு பின் குழந்தைகள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்றார் டி.ஜே. ஆண்டனி.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.