கண்களில் ஏற்படும் மிக தீவிரமான நோய்கள் மற்றும் குறைபாடுகளில், ரெடினோபதி என்பது ஒன்றாகும். சுருக்கமாக சொல்வது என்றால், ரெடினோபதி என்பது விழித்திரை என்னும் ரெடினாவை பாதிக்கும் நோய் ஆகும். நமது கண்களுக்கு உள்ளே ஒளியை உணர்வதற்கான மிக முக்கியமான பகுதி ரெடினா ஆகும். ரெடினாவில் எண்ணற்ற ரத்த நாளங்கள் இடம்பெற்றிருக்கும். அதில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுவதை தான் ரெடினோபதி என சொல்கிறோம்.
ஒரு நபருக்கு ரெடினோபதி ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. ரெடினோபதி பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு பகுதி அளவு அல்லது முழுமையாக பார்வை பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ரெடினோபதி பாதிப்பு மெதுவாக அல்லது திடீரென ஏற்படக் கூடிய ஒன்றாகும். ஆனால், கவனிக்காமல் விட்டால் நிரந்தரமாக பார்வை இழப்பை ஏற்படுத்தி விடும்.
ரெடினோபதி வகைகள் இவை
டயபடிக் ரெடினோபதி
நீரிழிவு என்னும் டயபடிக் குறைபாடு இருப்பவர்களுக்கு நாளடைவில் ரெடினோபதி தாக்கக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ரெடினாவில் உள்ள மிக மென்மையான திசுக்களில் உள்ள ரத்த நாளங்கள் பாதிக்கப்படும்போது இந்த குறைபாடு ஏற்படுகிறது. தொடக்க காலத்தில் டயபடிக் ரெடினோபதி குறைபாடுகளுக்கு எந்தவித அறிகுறியும் இருக்காது அல்லது லேசான பார்வை கோளாறு மட்டும் ஏற்படும். ஆனால், குறிப்பிட்ட சிலருக்கு நிரந்தர பார்வை இழப்பு ஏற்படக் கூடும். டைப் 1 நீரிழிவு மற்றும் டைப் 2 நீரிழிவு பாதிப்பு கொண்டவர்களை இந்த ரெடினோபதி குறைபாடு தாக்கக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. மிக நீண்ட காலமாக நீரிழிவு பாதிப்பு மற்றும் கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை அளவை கொண்டவர்களுக்கு ரெடினோபதி பாதிப்பு ஏற்படலாம்.
ரெடினோபதி ப்ரீமெட்சூரிட்டி
குறை பிரசவத்தில் பிறக்கக் கூடிய குழந்தைகள் அல்லது குறைவான உடல் எடையுடன் பிறக்கக் கூடிய குழந்தைகளுக்கு ரெடினோபதி ப்ரீமெட்சூரிட்டி என்ற குறைபாடு ஏற்படலாம். குழந்தைகள் முன்கூட்டியே பிறக்கும்போது, அவர்களது கண்களில் உள்ள திசுக்களில் ரத்த நாளங்கள் போதிய வளர்ச்சியை கண்டிருக்காது. தொடக்க நிலையில் இது பெரிய அளவுக்கு அறிகுறிகளை காட்டாது. ஆனால், சிறிது நாட்களில் ரெடினா நிரந்தரமாக விலகி, பார்வை இழப்பு ஏற்படலாம்.
Also Read : டைப் - 3 நீரிழிவு நோய் என்றால் என்ன..? அல்சைமர் நோய்க்கும் இதற்கும் என்ன தொடர்பு..?
ஹைபர்டென்சிவ் ரெடினோபதி
நீண்ட காலத்துக்கு உயர் ரத்த அழுத்தம் அல்லது மன அழுத்தம் உள்ளவர்களுக்கு ஹைபர்டென்சிவ் ரெடினோபதி பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களுக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்தால் ரெடினாவில் உள்ள ரத்த நாளச் சுவர்கள் தடிமண் ஆகிவிடும். இதனால், ரெடினாவுக்கு போதிய ரத்த ஓட்டம் கிடைக்காது. இதன் காரணமாக பார்வை கோளாறு ஏற்படக் கூடும்.
Also Read : இதய நோயாளிகள், நீரிழிவு நோயாளிகள் சீத்தாப்பழத்தை தவிர்க்க வேண்டுமா? கட்டுக்கதைகளை உடைக்கும் உண்மைகள்!
செண்ட்ரல் செரஸ் கோரிரெடினோபதி
ரெடினாவுக்கு பின்புறம் சேரும் சில வகை திரவங்கள் காரணமாக, ரெடினா லேயர்களுக்கு இடையே படிந்து, அவை ரெடினாவை பிரித்து விடும். இதனால், மங்களான பார்வை அல்லது இரவில் கண் பார்வை தெரியாத சூழல் ஏற்படும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.