Home /News /lifestyle /

குழந்தை பிறந்த பெண்கள் அலுவலகத்தில் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகள்!

குழந்தை பிறந்த பெண்கள் அலுவலகத்தில் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகள்!

பெண்கள் நலம்

பெண்கள் நலம்

வேலை பார்க்கும் பெண்கள் அடுத்த கட்டத்துக்கு முன்னேறிச் செல்வது, கேரியரில் வளர்ச்சி மற்றும் நீடித்திருப்பது ஆகிய அனைத்துமே பெண்களுக்கு ஒரு தடையாக இருக்கிறது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
பெண்கள் வேலைக்கு போகலாமா போகக்கூடாதா, திருமணமான பெண்கள் பணியில் இருக்கலாமா என்பதெல்லாம் மிகப்பெரிய பிரச்சனையாக ஒரு காலத்தில் பேசப்பட்டு வந்தது. அவை எல்லாம் மாறி, பெண்களுமே படித்து பெரும்பாலானவர்கள் பணியில் இருக்கும் நிலை உள்ளது. ஆனால் காலம் எவ்வளவு மாறினாலும் இப்போது கூட பெண்கள் வேலைக்கு செல்வது என்பது மிகப் பெரிய விவாதத்துக்குரிய ஒரு பொருளாகத்தான் இருக்கிறது.

குறிப்பாக, குழந்தை பிறந்த பிறகு பெண்கள் வேலைக்கு செல்லும்போது பலவித தடைகளையும் பிரச்சனைகளையும் எதிர்கொள்கிறார்கள். ஆண்களுக்கு இருப்பது போல பெண்களுக்கு திருமணம், கர்ப்பம், குழந்தை பேறு சார்ந்த விஷயங்கள் எதுவுமே அலுவலக ரீதியாக சுமூகமான ஒரு மாற்றமாக காணப்படுவதில்லை.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவிட் தொற்று பாதிப்பால் பணியில் இருக்கும் பெண்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய கூடிய சூழல் உருவாகி இருந்தாலும், வீட்டு வேலை, அலுவலக வேலை இரண்டையும் சரிவர நிர்வகிக்க முடியாமல் அதிகப்படியான வேலைப்பளுவால் பல பெண்களும் வேலையை நிரந்தரமாக விட்டுவிட்டனர் என்று பல்வேறு ஆய்வுகள் மற்றும் கணக்கெடுப்புகள் அதிர்ச்சியூட்டும் முடிவுகளை தெரிவிக்கின்றன.

கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது கோவிட் தொற்று பாதிப்பு தவிர்த்து அலுவலகத்திற்கு சென்று வேலை செய்யும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது என்ற ஆய்வு முடிவுகளும் உள்ளன. இந்நிலையில் குழந்தை பெற்ற தாய்மார்கள் அலுவலகத்துக்கு சென்று வேலை செய்யும் பொழுது எதிர்கொள்ளக்கூடிய பல்வேறு இடர்கள் அவர்களை எப்படி பாதிக்கின்றன அல்லது அவர்கள் என்ன மாதிரியான பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை புரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

குழந்தை பெற்ற பிறகு அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்கள் என்ன பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.



எந்த காலமாக இருந்தாலும் பெண்களுக்கென்று ஒரு சில பொறுப்புகள் இருக்கின்றன. குழந்தைகளை பார்த்துக் கொள்வது, பாடம் சொல்லித் தருவஹ்டு, வீட்டு வேலைகளை செய்வது, வீட்டில் இருக்கும் பெரியவர்களை கவனித்துக் கொள்வது என்று பல விதமான பொறுப்புகள் பெண்களை சார்ந்தே இருக்கின்றன . காலமாற்றத்தால் வீட்டில் இருக்கும் பலரும் வீட்டு வேலைகளை, மற்றவர்களை கவனித்து கொள்வதை பகிர்ந்து கொண்டு செய்யும் பொழுது பெண்களுக்கான வேலைப் பளு குறையும். ஆனால் பெரும்பாலான இல்லங்களில் எல்லா பொறுப்புகளுமே பெண்களை சார்ந்த தான் இப்போது வரை இருக்கின்றன என்பது கசப்பான உண்மையாகும்.

ஆண்கள்தான் குடும்பத்தலைவன், ஆண்கள் தான் குடும்பத்துக்காக சம்பாதிக்க வேண்டும் என்றும், வீட்டு அன்றாட வேலைகளை, வீட்டு பொறுப்புகளை பெண்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற நிலை தற்போது வரை மாறாமல், ஒரு எழுதப்படாத விதியாகவே இருக்கிறது. இதில் பெண்கள் வேலைக்கு சேர்ந்து சம்பாதிக்க வேண்டும் குடும்பத்திற்காக பணம் ஈட்ட வேண்டும் என்ற பொருளாதார சூழலில் கூட பெண்களுக்கான கூடுதல் பொறுப்புகள் குறையவே இல்லை.

48 வயதிலும் இளமையாகத் தோன்றும் நடிகை கஜோல் - ரகசியம் இதுதான்..!

இதனால், வேலை பார்க்கும் பெண்கள் அடுத்த கட்டத்துக்கு முன்னேறிச் செல்வது, கேரியரில் வளர்ச்சி மற்றும் நீடித்திருப்பது ஆகிய அனைத்துமே பெண்களுக்கு ஒரு தடையாக இருக்கிறது.

கர்ப்பம், குழந்தை, அம்மாவாக பொறுப்பு – மிகப்பெரிய தடை

தான் பார்க்கும் வேலையில் முன்னேற வேண்டும் பெரிய பதவிகளுக்கு செல்ல வேண்டும் என்ற முனைப்போடு உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கும் மிகப்பெரிய தடையாக பின்வரும் சூழல் காணப்படுகிறது.

  • கர்ப்பமாக இருப்பதை அறிவிக்கும் போது

  • மகப்பேறு விடுப்பில் இருந்து மீண்டும் அலுவலகம் வரும் போது

  • தன்னுடைய தேவைக்கு ஏற்ப ஃபிளெக்சிபிலான அலுவலக நேரத்துக்கு மாற்றிக் கொள்ளும் போது


இந்த மூன்று சூழல்களிலுமே ஒரு பெண்ணுடைய திறமை குறைவாக மதிப்பிடப்படுகிறது. அது மட்டுமில்லாமல் தன்னுடைய கேரியரில் முன்னேற்றம் அடைவது மற்றும் கற்றுக் கொள்ளும் வாய்ப்புகளுக்கான முக்கியத்துவத்தை பெண்கள் கொடுக்க மாட்டார்கள், குழந்தை வளர்ப்பு தான் முக்கியம் என்று நினைப்பார்கள் என்று பலரும் தவறான கண்ணோட்டத்தில் இருக்கிறார்கள். ஒருவேளை அதை தேர்வு செய்தாலும் அந்த பெண்கள் குற்ற உணர்ச்சிக்கு உள்ளாகும் அளவுக்கு குழந்தையைவிட கேரியர் முக்கியமா என்ற கேள்வி கேட்கப்படுகிறது. எனவே திருமணம் ஆகாத பெண்கள் மற்றும் ஆண்களை ஆண்களுடன் ஒப்பிடும் பொழுது குழந்தை பிறந்த பெண்களுக்கு சவால் அதிகம்.



 

குழந்தை பராமரிப்பு சார்ந்த சிக்கலான கண்ணோட்டம்

குழந்தை பெற்ற பிறகு பெண்ணுக்கு மட்டும் தான் குழந்தையை வளர்ப்பதில் அதிக பொறுப்பும் இருக்கிறது என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். ஒரு சிக்கலான ப்ராஜெக்ட் அல்லது சவாலான வேலையை, அதை செய்வதற்கு முழு திறன் இருக்கும் ஒரு பெண்ணுக்கு கொடுப்பதற்குக் கூட ஒருசில அலுவலகத்தில் தயக்கமாக உணர்வார்கள். அந்த பெண்ணுக்கு சிறிய குழந்தை இருக்கிறது அவர் எப்படி இந்த வேலையை செய்வார் என்பது போன்ற தவறான கண்ணோட்டத்தில் வாய்ப்பு கிடைக்காமல் போகிறது. மேலும், இந்தப் பெண் இப்போது தான் மகப்பேறு விடுப்பு முடிந்து வந்திருக்கிறார், இவருக்கு பதவி உயர்வு கொடுக்க முடியாது, இவர் புதிய பதவியை வகிப்பதற்கு தயாராக இருக்கமாட்டார் என்று மற்றவர்களின் தவறான கண்ணோட்டத்தில் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

தலைவலியிலிருந்து விடுபட உதவும் சில முக்கிய பிரஷர் பாயிண்ட்ஸ்..

மெனோபாஸ் கால பாதிப்பு

இளம் வயதில் குழந்தை பிறப்பு, மகப்பேறு என்று பெண்கள் அலுவலகத்தில் பிரச்சனைகளை எதிர் கொண்டாலும், 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவருமே மெனோபாஸ் பாதிப்பால் உடல் ரீதியாக, மன ரீதியாக பின்னடைவை சந்திக்கிறார்கள். இதனால் தான் 40 களில் அல்லது 50 தொடக்கத்தில் இருக்கும், பெரிய பதவிகளில் வகிக்கும் பெண்கள் கூட நிறுவனத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.



இதற்கான தீர்வுகள்:

பெண்கள் சந்திக்கும் இந்த இடர்களை தவிர்ப்பதற்கு நிறுவனங்கள் அவர்களுக்குத் தேவைப்படும் அளவுக்கு ஃபிளெக்ஸிபிலான அலுவலக சூழலை, பணி நேரத்தை மாற்றி அமைக்கும் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். அது மட்டுமல்லாமல் குழந்தை பராமரிப்புக்கான வசதி அல்லது செலவுகளுக்கான அலொவன்ஸ் தரவேண்டும். மேலும், பெண்களுக்கு குடும்பப் பொறுப்புகள், வயது என்ற காரணத்தால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு, ஊதியம், உள்ளிட்டவற்றை தடுக்கக் கூடாது. திறமை அடிப்படையில், பெண்கள் என்ற பாலின பாகுபாடு இருக்கக் கூடாது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Office, Women

அடுத்த செய்தி