ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

டாக்டர் ஒரு டவுட் : உடல் எடையை குறைக்க மாத்திரைகள் உட்கொள்வது எவ்வளவு ஆபத்து..? மருத்துவர் ஆலோசனை ஏன் அவசியம்..?

டாக்டர் ஒரு டவுட் : உடல் எடையை குறைக்க மாத்திரைகள் உட்கொள்வது எவ்வளவு ஆபத்து..? மருத்துவர் ஆலோசனை ஏன் அவசியம்..?

உடல் எடையை குறைக்க மாத்திரைகள்

உடல் எடையை குறைக்க மாத்திரைகள்

ஆன்லைனில் வரும் விளம்பர ஆசையே அவர்களை மாத்திரைகளை வாங்கி சாப்பிட தூண்டுகிறது. விளம்பரங்கள் சொல்வதுபோல் இந்த மாத்திரைகளை உட்கொண்டால் ஒரே மாதத்தில் 10 கிலோ வரை குறைக்க முடியும்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலக அளவில் 2.8 மில்லியன் பேர் உடல் பருமன் காரணமாக இறக்கிறார்கள் என உலக சுகாதார அமைப்பின் அறிக்கை கூறுகிறது. பலர் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருவதாகவும் கூறுகிறது. இதற்காக உடல் எடையை வேகமாக குறைக்க நினைப்பது தீர்வாகுமா..?

இன்றைய இளைஞர்களுக்கு உடல் எடையை சீக்கிரம் குறைக்க உடல் எடையை குறைக்க மாத்திரைகள்வேண்டும் என்கிற அவசரமே மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தை தூண்டுகிறது.

உடல் பருமன் கொரோனா ஊரடங்கிலிருந்தே அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஆய்வுகளின் அடிப்படையில், ஒர்க் ஃபிரம் ஹோம் போன்ற சூழல் அவர்களுக்கு எந்த உடல் உழைப்பும் இல்லாத நிலையை உருவாக்கியது. இதுவே உடல் எடை கூட முக்கிய காரணமாக இருந்தது. அதோடு வாழ்க்கை முறை மாற்றங்களும் இதற்கு மற்றொரு காரணம். இப்போது அனைவரும் அலுவலக வேலைக்கு செல்ல தொடங்கும்போது உடல் பருமன் என்பது பாடி இமேஜ் விஷயமாக மாறிவிட்டது. இதனால் அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களுக்காகவே உடல் எடையை குறைக்க வேண்டும் என்று முற்படுகின்றனர்.

”பொதுவாக உடல் எடையை குறைக்க குறைந்தது 3 மாதங்களாவது எடுத்துக்கொள்ளும். பிஎம்ஐ க்கு ஏற்ற எடையை பெற வேண்டுமெனில் 6 மாதங்கள் முதல் 1 வருடம் ஆகும். தொப்பையை குறைக்க வேண்டும் என்றாலே 3 மாதங்கள் எடுக்கும். இப்படி இருக்கும் சூழலில் ஒரே மாதத்தில் 10 கிலோ வரை குறைக்க வேண்டும் என நினைப்பது மனித உடல் வளர்ச்சிக்கு எதிரானது. அப்படி உடல் எடையை குறைக்க எந்த மருத்துவர்களும் அனுமதிக்க மாட்டார்கள்” எனக் கூறுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் பிரீத்தி.

மேலும் அவர் தொடர்கையில் “ஆன்லைனில் வரும் விளம்பர ஆசையே அவர்களை மாத்திரைகளை வாங்கி சாப்பிட தூண்டுகிறது. விளம்பரங்கள் சொல்வதுபோல் இந்த மாத்திரைகளை உட்கொண்டால் ஒரே மாதத்தில் 10 கிலோ வரை குறைக்க முடியும். ஆனால் அது ஆரோக்கியத்திற்கு எதிரானது.

ஒருவருக்கு இந்த மாத்திரையை கொடுக்கும் முன் அவரின் உடலை பரிசோதனை செய்ய வேண்டும். பிம்எம்ஐ என்ன , உடல் எடை, அவருடைய வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், நோய், அறுவை சிகிச்சை, இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் , தைராய்டு என பல பரிசோதனைகளுக்கு பின் அவருக்கு இந்த மாத்திரை பரிந்துரைக்கலாமா என முடிவு செய்ய வேண்டும். இப்படி அவரின் உடற்தகுதி தெரிந்த பின்புதான் மாத்திரைகள் தர வேண்டும்” என்கிறார்.

Also Read : அரிசி மாவுக்கு பதில் கடலை மாவை பயன்படுத்தி உடல் எடையை குறைக்க 5 ரெசிபிகள்..!

இந்த மாத்திரைகளை அதிகபட்சமாக 12 வாரங்கள் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். இவை, நீங்கள் வேலை செய்யாமல் நாள் முழுக்க அமர்ந்திருந்தாலும் இயல்பான உடல் ஆற்றலைக் காட்டிலும் வளர்ச்சிதை மாற்றத்தின் அளவு அதிகமாக இருக்கும். இதனால் உடலில் உள்ள கொழுப்பு வேகமாக கரைகிறது. அதுமட்டுமன்றி இந்த மாத்திரை உங்களுக்கு பசியை கட்டுப்படுத்துவதால் தேவையில்லாமல் சாப்பிடுவதையும் தவிர்ப்பீர்கள். எனவேதான் இந்த மாத்திரைகள் இவ்வளவு சீக்கிரம் ரிசல்ட் தருகின்றன.

மாத்திரையின் பக்கவிளைவுகள் :

இந்த மாத்திரைகளை உட்கொண்டால் பசியின்மை, ஊட்டச்சத்து குறைபாடு, வயிறு எரிச்சல், செரிமான பிரச்சனை, உடல் சோர்வு, மலச்சிக்கல், தலைவலி, தேவையற்ற மன அழுத்தம், வயிறு மந்தம், வயிற்றுப்போக்கு போன்ற பக்கவிளைவுகளை தரும். மனச்சோர்வை தரும். இதனால் சிலர் தற்கொலை கூட செய்துகொள்ள தூண்டப்படுவார்கள். இந்த பக்கவிளைவுகள் அனைத்தும் நீங்கள் எடுக்கும் மாத்திரைகளுக்கு ஏற்ப மாறுபடும்.

இதை அனைவரும் எடுத்துக்கொள்ளலாமா என்றால் நிச்சயமாக கூடாது. மருத்துவர்கள் பெரும்பாலும் உடல் எடையை குறைக்கும் மாத்திரைகளை பரிந்துரைக்க மாட்டார்கள். ஆரோக்கியமான முறையில் டயட் உடற்பயிற்சி என கொஞ்சம் கொஞ்சமாக எடையை குறைக்க முயற்சி செய்வோம். ஏதேனும் உடல்நல பாதிப்புகள் இருப்பின் அதற்கு ஏற்ப டயட் முறைகள், உடற்பயிற்சிகளை கஸ்டமைஸ்டு செய்துதான் ஊட்டச்சத்து நிபுணர்கள் எடை குறைப்புக்கு முயற்சி செய்வார்கள்.

அதேபோல் டயட் முறைகளை கொடுத்துவிட்ட பின்பும் அவ்வப்போது அவர்களின் உடல் நிலையை அறிந்துகொள்வோம். அதில் அவர்களுக்கு அதிக சோர்வு அல்லது ஏதேனும் அசௌகரியங்கள், ஒவ்வாமை இருப்பின் அந்த டயட் முறையை மாற்றி அவருக்கு ஏற்றுக்கொள்ளும் உணவு முறையை பரிந்துரைப்போம். அப்படிதான் உடல் எடையை குறைக்கவும் வேண்டும்.

இவர்கள் மாத்திரைகளை உட்கொள்ளலாம் :

எந்த டயட் முறையும் அவர்களுக்கு பலன் அளிக்கவில்லை. உடல் பருமனால் தீவிர நோய்க்கு ஆளாக இருக்கிறார்கள். உடல் பருமன் தொந்தரவுகளால் கடுமையான பக்கவிளைவுகளை அனுபவிக்கிறார்கள், அவர்களுக்கு டயட் , உடற்பயிற்சி கைக்கொடுக்காது போன்ற சூழ்நிலைகளில் மட்டுமே அவர்களுக்கு மாத்திரைகளை பரிந்துரைப்பார்கள். அப்படி மாத்திரை கொடுத்தாலும் அவர்கள் எங்கள் கண்கானிப்பில் இருப்பார்கள். அதற்கு ஏற்ற உணவுகளை பரிந்துரைப்போம். அதனால் அவர்களுக்கு பக்கவிளைவுகள் இருக்கும் என்றாலும் அவர்கள் அனுபவிக்கும் பிரச்சனைகளுக்கு இதுதான் தீர்வு எனில் வேறுவழியில்லை.

மருத்துவரின் ஆலோசனைப்படி அவரின் கண்கானிப்பில் மாத்திரைகள் எடுக்கலாமே தவிர இப்படி மருத்துவரின் பரிந்துரையின்றி ஆன்லைன் மூலம் வாங்கி சாப்பிடுவது மிகவும் ஆபத்தான முறையாகும். உயிருக்கே ஆபத்தாக முடியும். அதற்கு சான்றாக தமிழ்நாட்டிலேயே பலர் இந்த உடல் எடை குறைப்பு மாத்திரைகளை சாப்பிட்டு இறந்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

Also Read :  ரகசியமாக உடல் எடையை கூட்டும் குடிபானங்கள்..! எடை குறைப்பின்போது இதை தவிர்த்திடுங்க..!

”உடல் எடை குறைப்பு என்பது இன்று பலருக்கும் பாடி இமேஜ் விஷயமாக மாறிவிட்டது. எடை அதிகமாக இருப்பது ஆரோக்கியத்திற்கு பாதிப்பை தருகிறது எனில் குறைக்க முயற்சி செய்யுங்கள். சமூகத்திற்காக, பாடி ஷேமிங் போன்ற விஷயங்களுக்கான செய்ய முயற்சிக்காதீர்கள். ஆரோக்கியமான எடையுடன் இருக்கிறீர்கள் எனில் அது நல்ல விஷயம்தான். உங்களை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை எனில் உங்கள் உடலை நீங்கள் கொண்டாடவில்லை எனில் பிறர் சொல்லும் உடல் குறித்த விமர்சனங்கள் உங்களை பாதித்துக்கொண்டேதான் இருக்கும். நீங்கள் மற்றவர்கள் எதிர்பார்க்கும் உடலமைப்பில் இருக்க நினைக்காதீர்கள். உங்களுக்கு எது சௌகரியமாக இருக்கிறதோ அதுவே உங்கள் அழகு..! “ என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் பிரீத்தி.

First published:

Tags: Diet, Nutrition, Weight loss