ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

பெண்களை அச்சுறுத்தும் கருப்பை புற்றுநோய் : உடனே நீங்கள் செய்ய வேண்டியது என்ன..?

பெண்களை அச்சுறுத்தும் கருப்பை புற்றுநோய் : உடனே நீங்கள் செய்ய வேண்டியது என்ன..?

மாதிரி படம்

மாதிரி படம்

2018ம் ஆண்டில் மட்டும் 96,922 பெண்கள் கருப்பைபுற்றுநோயால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. மேலும் 60 ஆயிரத்து 78 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

இந்திய பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் பொதுவான ஒரு நோயாக கருப்பை புற்றுநோய் இருந்து வருகிறது. இதுகுறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால் ஒவ்வொரு ஆண்டும் இந்த புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2018ம் ஆண்டில் மட்டும் 96,922 பெண்கள் கருப்பைபுற்றுநோயால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. மேலும் 60 ஆயிரத்து 78 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

கருப்பை புற்றுநோய்

கர்பப்பை புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிந்தால் எளிதாக குணப்படுத்திவிடலாம். போதிய விழிப்புணர்வு இல்லாமல் ஆரம்ப கட்ட அறிகுறிகளை புறக்கணிப்பது தான் இந்த நோயின் வீரியத்துக்கு காரணமாக அமைகிறது. முறையற்ற பாலியல் தொடர்புகளினால் கர்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். உடலுறவின் போது ஆண்களிடமிருந்து பெண்களுக்கு செல்லும் ஹூயூமன் பாப்பிலோனா வைரஸ் எனப்படும் HPV வைரஸ் கருப்பை புற்றுநோயை ஏற்படுத்துகிறது. பலருடன் பாலியல் தொடர்பில் ஈடுபடுவது, சிறு வயதிலேயே உடலுறவு வைத்துக்கொள்வது ஆகியவை கர்பப்பை புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கின்றன.

கருப்பை புற்று நோயின் அறிகுறிகள்

பெண்களுக்கு வெள்ளைப்படுதல் இயல்பானது என்றாலும், அளவுக்கு அதிகமாக வெள்ளைப்படுதல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். வெள்ளைப்படுதலின்போது துர்நாற்றம் வீசும், சில சமயங்களில் வெள்ளைப்படுதல் கட்டியாகவும், நிறம் மாறியும் வரும். சுகாதாரமில்லாத கழிவறைகளை பயன்படுத்துதல், உடலுறவுக்கு பின்பு பெண்களுக்கு இரத்தப்போக்கு, உடலுறவின் போது வலி ஆகியவை உண்டாகும். ஆரம்ப நிலையில், கருப்பை வாய் பகுதி சற்று தடித்து இருக்கும். பிறகு படிப்படியாக கட்டியானாது பெரிதாகி, ஆழமாகவும், நீளமாவும் பரவத்தொடங்கும்.

உலக புற்றுநோய் தினம்: புற்றுநோயை பற்றி பரப்பப்படும் கட்டுக்கதைகளும்... உண்மைகளும்...!

புற்றுநோய் பரிசோதனை

பெரிய பாதிப்புகள் ஏற்படுவதற்கு முன்பு, கருப்பை புற்றுநோயின் அறிகுறிகளை கண்டால் கூட உடனடியாக மருத்துவச் சிகிச்சை மேற்கொள்வது நல்லது. தற்போது ஹெச்.பி.வி வைரஸ் தொற்று தாக்காமல் இருக்க சந்தைகளில் 2-, 4-, மற்றும் 9-HPV தடுப்பூசிகள் உள்ளன. பெண் குழந்தைகள் பருவமடைந்ததும் உரிய இடைவெளியில் தடுப்பூசியை எடுத்துக்கொண்டால் இந்த நோய் வராமல் தடுக்கலாம். 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசிகளை வழங்கும்போது அவை சிறந்த விளைவுகள் கொடுக்கின்றன.

ஒருவேளை முன்கூட்டியே உடலுறவு இருந்தால், அவர்களுக்கு இந்த தடுப்பூசிகளால் மிக மிக குறைந்த அளவிலான பலன்கள் மட்டுமே கிடைக்கும். மேலும், HPV டி.என்.ஏ சோதனை, சைட்டாலஜி பரிசோதனை, ஆரம்ப கட்ட கர்பப்பை வாய் புற்றுநோய்களை கண்டறிய அசிடிக் அமிலத்தைப் மூலம் விஐஏ (VIA) ஸ்கிரீனிங் சோதனை மூலம் கண்டறியலாம். ஸ்கிரீனிங் சோதனைகள் 25 வயதுக்கு மேலான பெண்களுக்கு மட்டுமே பரிந்துரைக்கப்படுகின்றன.

மத்திய அரசின் திட்டங்கள்

நாடு முழுவதும் பொதுவாக இருக்கும் புற்றுநோய்களை கட்டுப்படுத்த மத்திய அரசு தேசிய அளவிலான திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. தேசிய சுகாதார கொள்கையின் கீழ் NPCDCS திட்டத்தின் வழியாக கர்பப்பை வாய், மார்பகம், இருபாலினருக்குமான வாய்வழி புற்றுநோய்களை பரிசோதனை மூலம் கண்டறிந்து அதற்கான சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளலாம். HPV தடுப்பூசி UIP ( India's national immunization programme ) திட்டத்தின் கீழ் இணைக்கப்படாவிட்டாலும், டெல்லி, சிக்கிம், பஞ்சாப் மாநிலங்களில் பரிசோதனை முறையில் வழங்கப்பட்டு வருகிறது. அதேவேளையில், 2008 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசி கிடைத்து வருகிறது. 9 முதல் 15 வயது பெண்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்வதும், 25 வயதுக்கு மேலான பெண்கள் ஸ்கீரினிங் செய்து கொள்வது சிறந்தது.

உலக புற்றுநோய் தினம் 2021 : இந்தியாவில் அதிகமாக காணப்படும் மார்பக புற்றுநோய்... காரணம் என்ன?

WHO -முன்னெடுப்பு

கருப்பை புற்றுநோய் உலகளாவிய பொது சுகாதாரப் பிரச்சனையாக மாறுவதை தடுக்க 2020 ஆம் ஆண்டு உலக பொது சுகாதார நிறுவனம், இதற்கான முன்னெடுப்பை எடுத்துள்ளது. அதன்படி, 2030 ஆண்டுக்குள் கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களில், மூன்றில் ஒரு பகுதியினரின் உயிரை காப்பாற்ற வேண்டும், உறுப்பு நாடுகளில் இருக்கும் 15 வயதுக்குட்பட்ட 90 விழுக்காடு குழந்தைகளுக்கு ஹெச்.பி.வி தடுப்பூசி போடப்பட வேண்டும், 70 விழுக்காடு பெண்கள் 30 முதல் 45 வயதுக்குள் இரு முறை ஸ்கிரீனிங் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும்.

கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 90 விழுக்காட்டினருக்கு முறையான சிகிச்சை வழங்க வேண்டும் என்ற இலக்குகளை நிர்ணயித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை 99 விழுக்காடு குறையும் என உலக சுகாதார அமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Published by:Sivaranjani E
First published:

Tags: Cervical cancer, World Cancer Day