நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கருப்பு மிளகை அன்றாடம் சேர்த்து கொள்வதற்கான எளிய வழிகள்.!

கருப்பு மிளகு

நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் வியக்கத்தக்க வகையில் மிளகு செயல்படுகிறது. இது இயற்கையான ஆண்டிபயாடிக் மருந்தாகவும் செயல்படுகிறது.

  • Share this:
"10 மிளகு இருந்தால் போதும் பகைவன் வீட்டிலும் உயிர் பயமின்றி தைரியமாக சாப்பிடலாம்" என்பது நம் முன்னோர்களின் கருத்து. அந்த அளவுக்கு மகத்துவம் கொண்டது மிளகு.

மிளகில் வெள்ளை மிளகு, கருமிளகு என 2 வகைகள் இருந்தாலும் நாம் அதிகம் பயன்படுத்துவது கருமிளகு தான். நம் அனைவரது வீடுகளிலும் பொதுவாக பயன்படுத்தப்படும் மிளகானது பல மருத்துவ குணங்கள் மிக்கது. வைட்டமின் சி நிறைந்திருக்கும் கருப்பு மிளகு ஆன்டிபாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது. இதனால் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் வியக்கத்தக்க வகையில் மிளகு செயல்படுகிறது. இது இயற்கையான ஆண்டிபயாடிக் மருந்தாகவும் செயல்படுகிறது.

எந்தவொரு காயம் அல்லது வீக்கத்தால் ஏற்படும் சிரமத்திலிருந்து நிவாரணம் தந்து உதவுகிறது. கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகி நாம் வீடுகளுக்குள் முடங்கி இருக்கும் இந்த நேரத்தில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அன்றாட உணவில் கருப்பு மிளகு பயன்படுத்தும் சில எளிய வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்.

தக்காளி கருப்பு மிளகு சூப் (Tomato black pepper soup)

தக்காளி சூப்பில் நிரம்பியுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் ஆகியவை ஃப்ரீ-ரேடிக்கல் செயல்பாட்டைத் தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்க கூடிய ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கவும் உதவுகின்றன. கூடுதல் நன்மை தரும் வகையில் தக்காளி சூப்பில் கருப்பு மிளகு கலப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி பலமாகும்.

தேவையான பொருட்கள்:

தக்காளி - 2-3 (மீடியம் சைஸ்)

நொறுக்கிய கருப்பு மிளகு - 1 டீஸ்பூன்

உரித்த பூண்டு- 3 - 4

இஞ்சி- தேவையான அளவு

இலவங்கப்பட்டை- சிறிதளவு

வெங்காயம்- 25 கிராம்

எண்ணெய்- 1 டீஸ்பூன்

உப்பு- தேவையான அளவு

செய்முறை: தக்காளி, இஞ்சி, இலவங்கப்பட்டை மற்றும் நொறுக்கிய கருமிளகு ஆகியவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து கொள்ள வேண்டும். இதை குளிர வைத்து பின் இதை மிக்சியில் அரைத்து கொள்ளவும். இப்போது சிறிது எண்ணெய், பூண்டு மற்றும் நறுக்கிய வெங்காயத்தை வறுத்து, தக்காளி சேர்க்கப்பட்ட கலவையை அதில் சேர்த்து தேவையான அளவு உப்பு கலக்கவும். சிறிது நேரம் வேகவைத்து, மேலும் சிறிது நொறுக்கப்பட்ட கருப்பு மிளகு சேர்த்து சூடாக சாப்பிடலாம்.

பிளாக் பெப்பர் டீ (Black pepper tea):

கருப்பு மிளகு வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் எடையை குறைக்க உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், எடை குறைக்கவும் தினமும் காலையில் பிளாக் பெப்பர் டீ அருந்தலாம். இந்த டீ தயாரிக்க 4-5 கருப்பு மிளகு, எலுமிச்சை சாறு மற்றும் நறுக்கிய இஞ்சி தேவை. 2 கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் கருப்பு மிளகு தூள், சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் பிரெஷ்ஷாக நறுக்கிய இஞ்சி சேர்க்கவும். சுமார் 5 நிமிடங்கள் வரை நன்றாக கொதிக்க வைத்து, இந்த டீயை வடிகட்டி குடிக்கலாம்.

கருப்பு மிளகு சேர்த்த ஆயுர்வேத கஷாயம் (Black pepper kadha):

பொதுவாக kadha என்பது ஒரு ஆயுர்வேத பானமாகும். இது மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களின் கலவை, மருத்துவ நன்மைகள் நிறைந்தவை. கருப்பு மிளகு கஷாயம் என்பது பருவமழை நாளில் கிளைமேட்டை அனுபவிக்க சிறந்த பானங்களில் ஒன்றாகும். இதை தயாரிக்க இஞ்சி- 1 அங்குலம், கிராம்பு - 5, கருப்பு மிளகு- 5-6 , துளசி இலைகள்- 6, தேன்- 1/2 டீஸ்பூன் மற்றும் இலவங்கப்பட்டை- 2 அங்குல நீளம் ஆகியவை தேவை. ஒரு கப் தண்ணீரை வேகவைத்து அதில் நசுக்கப்பட்ட இஞ்சி, கிராம்பு, கருப்பு மிளகு, இலவங்கப்பட்டை உள்ளிட்டவற்றை சேர்க்கவும். தண்ணீர் கொதித்ததும், துளசி இலைகளுடன் நசுக்கப்பட்ட பொருட்களை சேர்த்து10 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டவும். இந்த கலவையில் தனி ருசிக்காக 1/2 டீஸ்பூன் தேன் சேர்க்கவும்.

உங்கள் உணவில் கருப்பு மிளகு சேர்க்க எளிய வழிகளில் ஒன்று, சாலட் மற்றும் சில வகை பானங்களில் கலப்பது. உங்கள் வழக்கமான சாலட்களுக்கு உப்பு மற்றும் கருப்பு மிளகு கலவையை கொண்டு சுவையை கூட்டலாம்.
Published by:Arun
First published: