வைட்டமின் டி (Vitamin D) அல்லது 'Sunshine' வைட்டமின் உடலில் கால்சியம் மற்றும் பாஸ்பேட்டின் அளவைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு முக்கிய ஊட்டச்சத்து ஆகும். இது எலும்புகள், பற்கள் மற்றும் தசைகளை வலுவாக்க உதவுகிறது.
UK தேசிய சுகாதார சேவைகளின் (NHS) தகவல்படி, குழந்தைகளை பாதிக்கும் ரிக்கெட்ஸ் எலும்பு குறைபாடு மற்றும் முதியவர்களுக்கு ஏற்படும் ஆஸ்டியோமலாசியா போன்ற எலும்பு குறைபாடுகளை தடுக்க வைட்டமின் டி உதவுகிறது.
வைட்டமின் D-யின் செயல்பாடுகளைக் கவனிப்பது எவ்வளவு முக்கியமோ, அதேபோல வைட்டமின் டி குறைவால் ஏற்படும் ஆரோக்கிய குறைபாடுகளை அறிந்து கொள்வதும் முக்கியம். ஏனென்றால், வைட்டமின் டி குறைபாட்டால் பல்வேறு உடல்நல பிரச்சனைகள் ஏற்படும்.
வைட்டமின் டி குறைபாட்டினால், புரோஸ்டேட் புற்றுநோய், மனச்சோர்வு, நீரிழிவு நோய் மற்றும் முடக்கு வாதம் போன்ற அபாயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதில் வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்தியாவில் பாதி மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுள்ளது தான்.
Tata 1mg Labs இன் அதிர்ச்சியூட்டும் தகவல்படி, இந்திய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 76% பேர் வைட்டமின் D குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது. இந்த ஆய்வானது இந்தியாவில் உள்ள 27 நகரங்களில் உள்ள சுமார் 2.2 லட்சத்துக்கும் அதிகமான மக்களிடம் நடத்தப்பட்டது.
ஒட்டுமொத்த ஆண்களில் 79% மற்றும் பெண்களில் 75% அவர்களின் உடலில் வைட்டமின் டி விரும்பத்தக்க அளவை விட குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. வதோதரா (89%) மற்றும் சூரத் (88%) ஊட்டச்சத்து குறைபாட்டால் அதிகம் பாதிக்கப்பட்ட நகரங்கள் ஆகும். குறைவாக பாதிக்கப்பட்ட நகரமாக டெல்லி-NCR (72%) உள்ளது.
Also Read : நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கிராம்பு.. தினமும் தூங்கும் முன் 2 சாப்பிட்டால் போதும்..!
ஊட்டச்சத்து குறைபாட்டால் அதிக இளைஞர்கள் பாதிப்பு
Tata 1mg தகவல்படி, இளைஞர்கள் அதிக அளவில் வைட்டமின் D குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 25 வயதுக்குட்பட்டவர்கள் 84 சதவிகிதமும், 25 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் 81 சதவிகிதமும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, ஆண்கள் 79 சதவீதமும், பெண்கள் 75 சதவீதமும் வைட்டமின் டி குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆய்வானது மார்ச் - ஆகஸ்ட் 2022-க்கு இடையில் சுமார் 2.2 லட்சம் மக்களிடம் நடத்தப்பட்டது.
நிபுணர்கள் கூறும் காரணம் என்ன?
டாடா 1mg, VP கருத்துப்படி: “மாறும் உணவுப் பழக்கம் மற்றும் சூரிய ஒளியை போதுமான அளவு வெளிப்படுத்தாத உட்புற வாழ்க்கை முறை ஆகியவை வைட்டமின் டி குறைபாடுக்கு காரணம். இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுவதற்கு, வைட்டமின் டி உள்ள உணவுகளான செறிவூட்டப்பட்ட தானியங்கள் மற்றும் மீன் எண்ணெய் போன்றவற்றை குறைவாக உட்கொள்வதே காரணம்.
இருப்பினும், சூரிய ஒளியின் வெளிப்பாட்டின் பருவகால மாறுபாடுகளும் ஒரு காரணமாக இருக்கலாம், குறிப்பாக குளிர்காலத்தில். உணவுப்பற்றாக்குறை உள்ள பெண்களின் திட்டமிடப்படாத கர்ப்பம், தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் வைட்டமின் டி குறைபாடு ஏற்படும்.
நாம் கட்டாயம் செய்யவேண்டியவை:
டாடா 1MG லேப்ஸின் மருத்துவத் தலைவர் டாக்டர் பிரசாந்த் நாக் கூறுவதாவது, “உடல் பருமன், ஆஸ்டியோமலேசியா அல்லது காசநோய்க்கு சிகிச்சை பெறும்போது வைட்டமின் டி அளவை தவறாமல் பரிசோதிக்க வேண்டும்.
வழக்கமான முழு உடல் பரிசோதனைகளுடன் வைட்டமின் டி அளவையும் சரிபார்க்கலாம். இதை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அல்லது வருடத்திற்கு ஒரு முறையாவது செய்ய வேண்டும்.
கைக்குழந்தைகள் மற்றும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் பெண்கள், டீனேஜர்கள் மற்றும் இளம் பெண்கள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் குறைந்த சூரிய ஒளியில் இருப்பவர்கள் வைட்டமின் டி குறைபாட்டால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும், சூரிய ஒளியில் போதுமான அளவு இருத்தல் மற்றும் வைட்டமின் டி குறைபாட்டைத் தடுக்க முட்டையின் மஞ்சள் கரு, மீன் எண்ணெய், சிவப்பு இறைச்சி மற்றும் செறிவூட்டப்பட்ட உணவுகள் போன்ற வைட்டமின் டி நிறைந்த உணவுகளை உட்கொள்ள நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
மனித தோலில் வைட்டமின் D-க்கு முன்னோடியாக செயல்படும் ஒரு வகை கொலஸ்ட்ரால் உள்ளது. சூரியனில் இருந்து வரும் UV-B கதிர்வீச்சுக்கு வெளிப்படும் போது, அது வைட்டமின் D ஆக மாறுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Vitamin D, Vitamin D Deficiency