கோவிட் தொற்று ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்குமா எலக்ட்ரானிக் சிகரெட் ? ஆய்வு

எலக்ட்ரானிக் சிகரெட்

எலக்ட்ரானிக் சிகரெட் நீராவியின் வெளிப்பாடானது ஆஞ்சியோடென்சின் கன்வெர்ட்டிங் என்சைம் 2 (ACE-2) அளவை அதிகரித்தது. ஆஞ்சியோடென்சின் கன்வெர்ட்டிங் என்சைம் அல்லது ACE என்பது ரெனின்-ஆஞ்சியோடென்சின் அமைப்பின் மைய அங்கமாகும்.

  • Share this:
சிகரெட் புகைப்பது நுரையீரல் நோய் மற்றும் கோவிட் நோய் தொற்று பரவுவதற்கான அபாயத்தை அதிகரிக்கும் என்று நமக்கு தெரியும். ஆனால் சமீபத்தில் எலிகளை பற்றிய ஒரு புதிய ஆய்வு எலக்ட்ரானிக் சிகரெட்டிலிருந்து வரும் நீராவியின் வெளிப்பாடு மேற்சொன்ன அதே விளைவுகளைக் காட்டுகிறது, குறிப்பாக நீராவியில் நிகோடின் இருக்கும் போது என்பது தெரிய வந்துள்ளது. எலக்ட்ரானிக் சிகரெட்கள் பொதுவாக நிகோடினைக் கொண்டிருக்கும் ஒரு திரவத்தை சூடாக்குவதன் மூலம் ஒரு ஏரோசோலை (aerosol) உருவாக்குகின்றன.

இதனிடையே அமெரிக்காவின் பிலடெல்பியாவில் உள்ள தாமஸ் ஜெபர்சன் பல்கலைக்கழகத்தை (Thomas Jefferson University) சேர்ந்த ஒரு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் உட்பட சில ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பான ஆய்வை நடத்தி உள்ளனர். எலக்ட்ரானிக் சிகரெட்டிலிருந்து வெளிவரும் நீராவி புகையை சுவாசித்த எலிகள் அவற்றின் நுரையீரல் திசுக்களில் வீக்கத்தை கொண்டிருந்தன மற்றும் அவற்றின் நுரையீரல் செயல்பாடு வழக்கத்தை விட வெகுவாக குறைந்தது. இதன் மூலம் குறிப்பாக நிகோடின் கலந்த நீராவியை உள்ளிழுப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பரிசோதனையின் மூலம் வெளிப்பட்டுள்ள முடிவானது மனிதர்களில் குறிப்பிடத்தக்கதாகும். ஏனென்றால் எலக்ட்ரானிக் சிகரெட் நீராவியின் வெளிப்பாடானது ஆஞ்சியோடென்சின் கன்வெர்ட்டிங் என்சைம் 2 (ACE-2) அளவை அதிகரித்தது. ஆஞ்சியோடென்சின் கன்வெர்ட்டிங் என்சைம் அல்லது ACE என்பது ரெனின்-ஆஞ்சியோடென்சின் அமைப்பின் மைய அங்கமாகும். இது உடலில் உள்ள திரவங்களின் அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. இது ஆஞ்சியோடென்சின் I என்ற ஹார்மோனை செயலில் உள்ள வாசோகன்ஸ்டிரிக்டர் ஆஞ்சியோடென்சின் II ஆக மாற்றுகிறது.



SARS-CoV-2 தொற்றானது உடலில் பரவ உயிரணுக்களின் மேற்பரப்பில் இருக்கும் ACE-2- வை பயன்படுத்துகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறி உள்ளனர். தங்களது கண்டுபிடிப்புகள் மனிதர்களின் நுரையீரலில் ACE-2 அளவைக் குறைப்பதன் விளைவைக் காண்பதற்கான காரணத்தை வழங்குவதாக ட்ரான்ஸ்லேஷனல் மெடிசினிற்கான பல்கலைகழகத்தை சேர்ந்த பவன் சர்மா குறிப்பிட்டுள்ளார். ACE-2ன் இதேபோன்ற அதிகரிப்பு காணப்பட்டால், கோவிட் -19 க்கு ஆபத்து காரணியாக நிகோடின் கலந்த நீராவி இருப்பதற்கு இது கூடுதல் ஆதாரங்களை வழங்குகிறது.

மேலும் எலக்ட்ரானிக் சிகரெட்கள் பயன்படுத்தும் மக்களுக்கு தொற்று பரவாமல் தடுப்பது மற்றும் குறைப்பது எப்படி என்பதை புரிந்துகொள்ள இது உதவும் என்றும் பவன் சர்மா தெரிவித்து உள்ளார். இது தொடர்பான பரிசோதனையின் போது பெண் அல்லது ஆண் எலிகளை ஒரு தானியங்கி அமைப்பில் இணைக்கப்பட்ட பெட்டியில் வைத்திருந்தனர். இந்த பெட்டியானது துல்லியமாக கட்டுப்படுத்தப்பட்ட அளவு எலக்ட்ரானிக் சிகரெட் நீராவியை எலிகளுக்கு வழங்கியது. மேலும் நிகோடின் கலந்த மற்றும் கலக்காத நீராவி என ஒரு நாளைக்கு இரண்டு முறை 21 நாட்களுக்கு சுமார் 30 நிமிடம் வரை எலிகளுக்கு நீராவி புகை உட்செலுத்தப்பட்டது.

High Blood Pressure | உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தொடவே கூடாத 7 உணவுகள்!

அறைக் காற்றை சுவாசித்த எலிகளுடன், எலக்ட்ரானிக் சிகரெட் நீராவியை சுவாசித்த எலிகளை ஒப்பிட்ட பொது அவற்றின் நுரையீரலில் உள்ள ACE-2 ரெசிப்டரின் அளவுகள் அதிகரித்து காணப்பட்டது. ACE-2 அதிகரிப்பானது வைரஸ் நுரையீரல் பாதையில் நுழைவதை எளிதாக்குகிறது. இதனால் தொற்று நோய்க்கான அபாயம் அதிகரிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். தவிர நீராவியில் நிகோடின் இருப்பது குறிப்பாக ஆண் எலிகளின் ACE-2 அதிகரிப்பை மேலும் உயர்த்தியது. எனினும் கோவிட் -19 தொற்றுக்கான ஆபத்து காரணிகளின் சிக்கலைப் புரிந்து கொள்ள மேலதிக ஆராய்ச்சி தேவைப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 
Published by:Sivaranjani E
First published: