பெண்களில் பலருக்கு அவ்வபோது பெண்ணுறுப்பு தொடர்புடைய பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், பெரும்பாலானவர்கள் இதுகுறித்து பேசுவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். பெண்ணுறுப்பு தொடர்பிலான பிரச்சினைகள் இயற்கையானதே என்றாலும் கூட அதுகுறித்து விவாதிப்பதற்கான தளங்கள் கிடைப்பதில்லை அல்லது நிபுணர்களிடம் ஆலோசிக்க தயங்குகின்றனர்.
மனநலன் மற்றும் உடலில் பிற உறுப்புகளின் நலன் போலவே பெண்ணுறுப்பு ஆரோக்கியம் என்பதும் மிக முக்கியமான விஷயம்தான். ஒருவேளை இதுகுறித்து பேச உங்களுக்கு தயக்கம் இருக்குமென்றால், எந்தெந்த விஷயங்களை புறம் தள்ளக் கூடாது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல்
சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட்டுள்ளதற்கான மிக முக்கியமான அறிகுறி இந்த எரிச்சல் ஆகும். சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் அவ்வபோது ஏற்படுவது மற்றும் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்படுவது ஆகியவை கவனிக்க வேண்டிய விஷயங்கள். உடனடியாக மருத்துவரை அணுகி இது தொடர்பாக ஆலோசனை பெற வேண்டும்.
பெண்ணுறுப்பில் இருந்து வழக்கத்திற்கு மாறான கசிவு
பெண்ணுறுப்பில் இருந்து வழக்கத்திற்கு மாறாக பச்சை அல்லது மஞ்சள் நிறத்தில் அடர்த்தியான திரவம் கசிவதை எப்போது கவனித்துள்ளீர்களா? இவ்வாறான கசிவு அல்லது அவ்வபோது நிறம் மாறுவதை பிரச்சினைக்கு உரியதாக கருத வேண்டும். இதுதொடர்பாக மகப்பேறு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
பாலியல் உறவு ரீதியில் பரவும் நோய்களுக்கான அறிகுறிதான் இவை. அதேசமயம், வெள்ளை நிறத்தில் ஏற்படும் கசிவு குறித்து பெரிய அளவுக்கு கவலைப்பட வேண்டாம். அது மாதவிலக்கு சுழற்சியின் ஒரு அங்கம்தான்.
மாதவிடாயின் போது அசௌகரியங்களை தவிர்க்க இந்த 6 உணவுகளை சாப்பிடுங்கள்...
மாதவிலக்கு காலம் தாண்டியும் கசிவு
மாதவிலக்கு காலம் தாண்டியும் உங்களுக்கு உதிரப் போக்கு இருக்குமானால் நீங்கள் மருத்துவரை அணுகி சிகிச்சை ஆலோசனை பெற வேண்டும். உடலுறவு வைத்துக் கொண்ட பின்னர் திட்டுகள் தென்படுவது, சிறுநீர் கழிக்கும்போது ரத்தம் கலந்து வருவது போன்ற அறிகுறிகளை மருத்துவருடன் ஆலோசிக்க வேண்டும்.
மாதவிலக்கு முடிந்த அடுத்த சுழற்சிக்குள் மீண்டும் பாதியில் உதிரப் போக்கு ஏற்படுவது, இடுப்பு பகுதியில் வலி போன்றவை கிளமிடியா என்னும் நோயின் அறிகுறிகள் ஆகும். இது பெரிதும் கவலைப்பட வேண்டிய விஷயம் இல்லை என்றாலும் பரிசோதனை அவசியம்.
சிறுநீரை அடக்க முடியாமல் பிரச்சனை
சிறுநீரை அடக்க முடியாமல் தவிக்கும் பிரச்சனையை மருத்துவத்தில் இன்காண்டினெண்ட்ஸ் என்று குறிப்பிடுகின்றனர். குறிப்பாக தும்மல் அல்லது இருமல் வரும்போது சிறுநீர் கசிவு இருக்கலாம். இது சிறுநீர் பாதை தொற்று எதிரொலியாக ஏற்படும். மருந்துகள் சாப்பிடுவதன் மூலம் இதனை குணப்படுத்த முடியும்.
பெண்ணுறுப்பில் அரிப்பு
நீங்கள் பயன்படுத்தும் சோப்பு, க்ரீம், டாய்லெட் பேப்பர், பெண்களுக்கான ஸ்பிரே போன்றவற்றால் பெண்ணுறுப்பில் அரிப்பு ஏற்படுவது இயல்பான பிரச்சினை தான். அரிப்பு உண்டாக்கும் பொருட்களை பயன்படுத்தாமல் தவிர்த்தாலே போதுமானது.
அடிக்கடி வயிற்று வலியால் துடிக்கிறீர்களா..? புற்றுநோயாக இருக்கலாம்... இந்த அறிகுறிகளை கவனியுங்கள்...
அதே சமயம், பெண்ணுறுப்பின் உள்பகுதியில் அரிப்பு ஏற்படுமானால் அது பாக்டீரியா தொற்று, சரும பிரச்சினைகள், பூஞ்சை தாக்குதல், பாலியல் ரீதியில் பரவிய நோய் போன்றவை காரணமாக இருக்கலாம். மகப்பேறு மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
பெண்ணுறுப்பு வீக்கம்
பெண்ணுறுப்பை சுற்றியுள்ள ரோமக்கால்களில் ஏற்படும் தொற்று அல்லது பாலியல் ரீதியில் பரவிய நோய் போன்றவற்றின் காரணமாக பெண்ணுறுப்பில் வீக்கம் ஏற்படலாம். சில சமயம் ரோமம் முறையாக வளரதபோது பரு அல்லது வீக்கம் போன்றவை ஏற்படக் கூடும். பெரும்பாலும் இந்த வீக்கங்கள் வலி தருவதில்லை.
ஆனால், அதுவே நீடித்து நிலையாக இருந்தாலோ அல்லது வலி இருந்தாலோ நீங்கள் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.