‘தலைவலியும், வயிற்று வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும்’ என்பார்கள். அது உண்மை தான் தலைவலி எளிதில் யாராலும் தாங்கிக்கொள்ள முடியாதது. அதுவும் ஒற்றை தலைவலி மட்டும் வந்துவிட்டால், அவ்வளவு எளிதில் உங்களை விட்டு நீங்காது. தலைவலி போல் வலி சாதாரணமானதாக இருக்காது, தலையில் யாரோ சம்மட்டியை வைத்து அடிப்பது போல் வலி உயிர் போகும். மண்டைக்குள் குத்தலும், குடைச்சலும் வந்து எந்த வேலையையும் செய்ய விடாமல் தொந்தரவு செய்யும்.
சூடாக காபி, டீ, தலைவலி தைலம், வலி நிவாரணி மாத்திரைகள், நீராவி பிடிப்பது என எதுவுமே அவ்வளவு சீக்கிரமாக ஒற்றை தலைவலிக்கு தீர்வு கொடுக்காது. உலகளவில் ஒவ்வொரு ஐந்து பெண்களில் ஒருவருக்கும், ஒவ்வொரு இருபது ஆண்களில் ஒருவருக்கும் ஒற்றை தலைவலி பிரச்சனை இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த பிரச்சனைக்கு, 35 சதவீதம் குடும்பத்தில் உள்ளவர்களின் மரபணு காரணமாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தத் தலைவலி 15 மற்றும் 25 வயதிற்குள் தொடங்கி சில ஆண்டுகளுக்குப் பிறகு படிப்படியாக குறையும் என்றும் சிலருக்கு 40 வயது வரை நீடிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
ஒற்றைத் தலைவலியின் வகைகளை கண்டறிவது எப்படி?
ஒற்றை தலைவலி மொத்தம் எத்தனை வகைகளில் உள்ளது, அதை எப்படி கண்டறிவது பற்றி விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பொதுவான மைக்ரேன்:
நெற்றியின் ஒரு பக்கத்தில் இருக்கும் தலைவலி மற்றும் துடிப்பது போன்ற உணர்வு மெதுவாகத் தொடங்கி, அதிகரித்து, அதிகபட்ச தீவிரத்தை அடைந்து, தலையை ஆட்டிப்படைத்துவிட்டே குறையும். சில சமயங்களில் குமட்டல், வாந்தி போன்ற உணர்வுகளும் தோன்றலாம். ஆனால் இவை சிறிது நேரம் ஓய்வெடுப்பதன் மூலமோ அல்லது உறங்குவதன் மூலமோ தானாகவே குறைந்துவிடும் வாய்ப்பு உண்டு. பொதுவாக 2 அல்லது 3 நாட்கள் வரை கூட நீடிக்க கூடிய இந்த தலைவலிக்கு வலி நிவாரணி மாத்திரைகள் நல்லது.
Also Read : சாதாரண அசிடிட்டி என நினைத்து புறக்கணிக்க வேண்டாம்... உயிருக்கே கூட ஆபத்தை ஏற்படுத்தலாம்..!
கிளாசிக் மைக்ரேன்:
இந்த வகை தலைவலி நெற்றிப்பொட்டில் தொடங்கி கண்கள், தாடை, பின்பக்க தலை என முதுகு வரை வலியை ஏற்படுத்தும். கிளாசிக் மைக்ரேன் ஏற்படும் போது பாதிக்கப்பட்ட நபர் கருப்பு புள்ளிகள் அல்லது விசித்திரமான உருவாங்கள் கண் முன் நகர்வது போல் காணலாம். இதன் மூலம் சில சமயங்களில், ஒரு கண்ணில் தற்காலிக பார்வை இழப்பு அல்லது இரண்டு கண்களிலும் ஒரு பகுதி பார்வை இழப்பு நேரிடலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
சிக்கலான ஒற்றைத் தலைவலி:
முதன் முறையாக சிக்கலான ஒற்றைத் தலைவலி ஏற்படும் போது, பக்கவாதம் அல்லது வலிப்பு ஏற்படுவது போன்ற அறிகுறிகள் தோன்றலாம். எனவே அறிகுறிகளின் தொடக்கத்திலேயே சிகிச்சை பெறுவது பக்கவாதம் போன்ற உயிருக்கு ஆபத்தான நிலைமைகளின் சாத்தியத்தை குறைக்க உதவும். இது மூன்றுவிதமாக பிரிக்கப்பட்டுள்ளது.
Also Read : நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் எடுக்க வேண்டிய 5 உணவுகள்- ஒரு கைட்லைன்
ஹெமிபிலெஜிக் மைக்ரேன்: இந்த வகை தலைவலியை உணரும் நபருக்கு, உடலின் ஒரு பக்கத்தில் உள்ள கால் அல்லது கை பலவீனத்துடன் இருக்கும். இந்த தலைவலி ஒரு பக்கவாதத்தை போல் இருந்தாலும், நோயாளி பொதுவாக 24 மணிநேரத்தில் குணமடைவார்.
பசிலர் மைக்ரேன்: இந்த வகை ஒற்றைத் தலைவலி என்பது ஒரு நரம்பியல் வியாதியாகும், இது இயற்கையில் நாள்பட்டது, மேலும் துடிக்கும் வலியால் வகைப்படுத்தப்படுகிறது. பெரும்பாலும், இந்த நோய் 18 முதல் 50 வயது வரையிலான நோயாளிகளுக்கு ஏற்படுகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
Also Read : வறட்டு இருமலால் அவதிப்படுகிறீர்களா..? உடனே சரி செய்ய உதவும் வீட்டு வைத்தியங்கள்..!
ரெட்டினல் மைக்ரேன்: ஒரு ரெட்டினல் ஒற்றை தலைவலி ஒளி அல்லது ஃப்ளாஷ் பிரகாசங்களை ஏற்படுத்துகிறது, இது பகுதி அல்லது மொத்த தற்காலிக குருட்டுத்தன்மையைக் உண்டாக்கும். பொதுவாக இந்த காட்சி அறிகுறிகளின் ஒரு மணி நேரத்திற்குள் தொடங்கி மூன்று நாட்கள் வரை நீடிக்கும்.
ஒற்றை தலைவலி ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள் என்னென்ன என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம்.
ஒற்றைத் தலைவலி உங்கள் உணவின் நேர மாற்றத்தால் ஏற்படலாம். எனவே நல்ல ஆரோக்கியமான உணவை, வேளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.
சரியான தூக்கம் இல்லாதர்களுக்கும் ஒற்றை தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஆழ்ந்த, அமைதியான தூக்கம் அவசியம்.
உடற்பயிற்சிதான் உடலில் உள்ள வேதிப்பொருட்களை உற்பத்தி செய்யும் தன்மை கொண்டது. இதனால் மூளை நன்கு செயல்படத் தொடங்கும். முறையான தொடர் உடற்பயிற்சி இருந்தாலே ஒற்றைத் தலைவலி அண்டாது.
Also Read : நீண்ட ஆயுளுக்கான சிறந்த காலை உணவு: நிபுணர்கள் கூறும் ஆச்சர்ய தகவல்
உடல் பருமன் ஒற்றை தலைவலியை உருவாக்காமல் இருக்கலாம், ஆனால் அதுவும் ஒரு காரணமாக அமையலாம். எனவே உடல் எடையை கட்டுப்படுத்த முயற்சிக்கலாம்.
அதிகமாகக் கவலைப்படுபவர்கள், அடிக்கடி சோர்வு அடைபவர்கள், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி ஒற்றைத் தலைவலி வரும். எனவே மனதை ரிலாக்ஸாக வைத்திருக்க கூடிய விஷயங்களில் மனதை திசை திருப்புங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Headache, Health, Migraine Headache