கொரோனாவுக்கு அடுத்தப்படியாக இந்தியாவில் குரங்கு காய்ச்சல் பீதி பரவி வரும் நிலையில், தற்போது தக்காளி காய்ச்சல் என்ற குழந்தைகளை குறிவைத்து தாக்கும் புதிய காய்ச்சல் பரவி வருகிறது.
இந்தியாவில் முதன் முறையாக கேரள மாநிலத்தில் 3 பேருக்கு குரங்கு அம்மை நோய்க்கான அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், அங்கு தற்போது 80 பேருக்கு தக்காளி காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.
இந்த வைரஸ் நோயின் காரணம், அறிகுறிகள் மற்றும் தற்காப்பு முறைகள் பற்றிய முழுமையான விளக்கத்தை இங்கே கொடுத்துள்ளோம்.
1. தக்காளி காய்ச்சல் என்றால் என்ன?
தக்காளி காய்ச்சல் என்பது கை, பாதம் மற்றும் வாய் நோய் (HFMD) என அழைக்கப்படுகிறது, இது ஒரு அரிய வைரஸ் நோயாகும், இது உடல் முழுவதும் சொறி மற்றும் கொப்புளங்களை உண்டாக்க கூடியது. உடலில் தோன்றும் கொப்புளங்கள் அனைத்தும் பார்ப்பதற்கு வடிவத்திலும் நிறத்திலும் தக்காளியை ஒத்திருப்பதால், இந்த காய்ச்சல் தக்காளி காய்ச்சல் என அழைக்கப்படுகிறது.
தக்காளி காய்ச்சலானது 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாதிக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்நோய் உயிருக்கு ஆபத்தானது அல்ல என்றாலும், மிகப்பெரிய தொற்று நோயாக கருதப்படுகிறது.
2. தக்காளி காய்ச்சலுக்கான அறிகுறிகள்:
சிவப்பு கொப்புளங்கள், தடிப்புகள், தோல் எரிச்சல் மற்றும் நீரிழப்பு ஆகியவை தக்காளி காய்ச்சலுக்கான சில பொதுவான அறிகுறிகள் ஆகும்.
இது தவிர, அதிக காய்ச்சல், உடல் வலி, மூட்டு வீக்கம், சோர்வு, வயிற்றுப் பிடிப்புகள், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்த, இருமல், சளி போன்ற பிரச்சனைகளையும் அனுபவிக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அதிகரித்து வரும் மங்கி பாக்ஸ்... இதிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பது எப்படி..?
3. கொரோனா அல்லது குரங்கு அம்மை போன்றதா?
தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் ஆவார்கள். இந்த நோய் கோவிட்-19 அல்லது குரங்கு அம்மை போன்று அதிகமாகவோ அல்லது ஆபத்தானதாகவோ இருக்குமா என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை. குறிப்பாக இந்த தொற்று குழந்தைகளிடையே அதிகம் காணப்படுவதால் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்படும் படி நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
தக்காளி காய்ச்சலால் யாரும் உயிரிழந்ததாக இதுவரை எந்த தரவுகளும் பதிவாகவில்லை. எனவே இதுவரை, தக்காளி காய்ச்சல் உயிருக்கு ஆபத்தானதாக கருதப்படவில்லை. மேலும் இதன் பெரும்பாலான அறிகுறிகள் லேசான காய்ச்சல் போலவும், சமாளிக்க கூடியவையாகவும் இருப்பதால் பொதுமக்களிடையே அச்சுறுத்தலை உருவாக்கவில்லை.
4. குழந்தைகளை எவ்வாறு பாதிக்கிறது?
சிக்குன் குனியாவை ஒத்திருக்கும் தக்காளி காய்ச்சல், குழந்தைகளின் தோலில் சிவப்பு நிற கொப்புளங்கள், சொறி போன்றவற்றை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. எனவே குழந்தைகளை கண்காணிக்கும் படியும், கூடுமான வரையில் தனிமைப்படுத்தி வைத்திருக்கும் படியும் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
மழைக்காலத்தில் "மஞ்சள் டீ" குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்...
தோல் பிரச்சனைகளை மேலும் சிக்கலாக்கும் என்பதால், கொப்புளங்களை சொறிந்துவிடவோ அல்லது தொடவோ வேண்டாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குழந்தையை சுகாதாரமான சூழலில் வைப்பதை உறுதிசெய்வதோடு, அவர்களின் சுற்றுப்புறத்தையும், அவர்களையும் சுத்தமாக வைத்திருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
5. சிகிச்சை அளிக்ககூடியதா?
தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் நல்ல சுகாதாரத்தை பராமரிப்பது முக்கியம்.ஏதேனும் அறிகுறிகள் தோன்றினால் உங்கள் மருத்துவரை அணுகுவது கட்டாயமாகும். நிறைய தண்ணீர் குடிக்கவும், ஓய்வெடுக்கவும் மற்றும் அறிகுறிகள் தீரும் வரை தனிமைப்படுத்திக் கொள்ளவும் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
6. தற்காப்பு நடவடிக்கைகள்:
தக்காளி காய்ச்சலை தவிர்ப்பதற்கான சிறந்த வழியாக வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் தொடர்பு கொள்வதைத் தவிர்ப்பது பரிந்துரைக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட நபரை தொடும் பொருட்களைத் தொட வேண்டாம் மற்றும் அவர்களின் உடைகள், பாத்திரங்கள் மற்றும் பிற பொருட்களைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.