பெண்களை எளிதாக தாக்கும் இதய நோய்! ஆய்வு சொல்வது; செய்ய வேண்டியதும்!

எத்தகைய பணி சூழலில் இருந்தாலும் பெண்கள் முதலில் அவர்களின் உடல் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது நிபுணர்களின் பார்வையாக உள்ளது.

எத்தகைய பணி சூழலில் இருந்தாலும் பெண்கள் முதலில் அவர்களின் உடல் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது நிபுணர்களின் பார்வையாக உள்ளது.

  • Share this:
பெண்களுக்கு அன்றாட வாழ்க்கையில் பல பரிமாணங்களில் பணியாற்ற வேண்டியுள்ளது. வீட்டு வேலைகள், குழந்தைகளை கவனிப்பது, பணிக்கு செல்வது, சமையல் செய்வது என தொடர்ந்து அவர்கள் இயங்கிக் கொண்டே இருக்கிறார்கள். நாள்தோறும் இந்த வேலைகளை தொடர்ந்து செய்வதற்கு மத்தியில் பண விவகாரங்களையும் கவனிக்கின்றனர். இதுபோன்ற கூடுதல் சுமைகள் பெண்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். நாள்பட்ட மன அழுத்தம் இதயம் சார்ந்த பிரச்சனைகளையும், உடல் பிரச்சனைகளையும் அவர்களுக்கு ஏற்படுத்தும்.

மற்ற பிரச்சனைகள்போல் மன அழுத்தம் உடனடியாக வெளியே தெரியாது. பக்கவிளைவுகள், உடல் சார்ந்த வேறு பிரச்சனைகளுக்கு மட்டுமே அவை வழிவகுக்கும் என்பதால் இது குறித்து பெண்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மன அழுத்தத்தால் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் உடல் பிரச்சனைகள் என்ன? இது எவ்வளவு நாட்களாக இருக்கிறது? என்பது குறித்து சுய பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளும்போது, உங்களின் உடல் சார்ந்த பிரச்சனைகள் அடுத்த கட்டத்துக்கு செல்வதில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.

பெண்கள் செய்யக்கூடிய வேலைகள் வெளியில் இருந்து பார்ப்பதற்கு மிகவும் எளிமையான ஒன்றுபோல் தெரியும். ஆனால், அந்த சூழலை நாள்தோறும் எதிர்கொள்ளும் அவர்களிடம் கேட்டுப்பாருங்கள், அதனுடைய வலி தெரியும். கொரோனா காலத்தில் இந்த பளு இன்னும் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதாவது வீட்டில் இருந்து வேலை என்பதால் பெண்கள் வீட்டு வேலைகளை செய்து கொண்டே அலுவலகப் பணிகள், ஆசிரியர் பணியில் இருப்பவர்கள் அன்றாட வேலைகளுக்கு நடுவே டிஜிட்டல் வகுப்புகளுக்கு பாடத்திட்டங்களை தயார் செய்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து பணி சார்ந்து கவனம் செலுத்தும் பெண்கள், தங்களின் உடல் நலனில் போதிய கவனம் செலுத்துவதில்லை என நிபுணர்கள் கூறுகின்றனர். எத்தகைய பணி சூழலில் இருந்தாலும் பெண்கள் முதலில் அவர்களின் உடல் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது நிபுணர்களின் பார்வையாக இருக்கிறது.

மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில் வசிக்கும் பெண்களில் பலர் பணிபுரியும் பெண்களாக இருக்கின்றனர். அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் மும்பையில் இருக்கும் நோய்வாய்பட்ட பெண்களில் 76 சதவீதத்தினரும், டெல்லியில் 59 சதவீதத்தினரும் மன அழுத்தத்தால் ஏற்பட்ட இதய நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. பெரு நகரங்களில் வசிக்கும் பெண்களில் சராசரி 58 சதவீதத்தினர் இதய நோயால் பாதிக்கப்படுவதாகவும், அவை மன அழுத்தத்தால் ஏற்படுபவை எனவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மேலும், பெண்கள் மன அழுத்தத்தை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாததால் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்வதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வெளியில் தெரியாத மன அழுத்தம் குறித்து பெண்கள் அதிக கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதாகவும், இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் உருவாகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொடர்ந்து பணி செய்யும் பெண்களை உற்சாகப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ள நிபுணர்கள், போதுமான தூக்கத்தை அவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். 7 முதல் 8 மணிநேரம் குறையாமல் தூக்கம் இருக்க வேண்டும், குறைந்தது 30 நிமிடங்களாவது நடைப்பயிற்சி உள்ளிட்ட உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும், தியானம் மற்றும் யோகாவில் கவனம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர். இவற்றுடன் ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கம், சரியான நேரத்துக்கு உணவு ஆகியவற்றை கடைபிடிக்கும்போது பெண்களுக்கு ஏற்படும் இதயம் சார்ந்த பிரச்சனைகளை தடுக்க முடியும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவ பரிசோதனை, ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை ஆகியவற்றை பெண்கள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் எனவும் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
Published by:Archana R
First published: