அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலத்தில் வெப்பம் மிக அதிக அளவில் இருக்கும். ஒவ்வொரு வருடமும் தமிழ் மாதம் சித்திரை 21 ஆம் தேதி முதல் வைகாசி மாதம் 14 ஆம் தேதி வரை கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும். சித்திரை மாதம் சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கும் போது அதிக உச்சம் பெறும் வேளையில், வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். வெயில் அதிகமாக இருக்கும் இந்த காலம் ‘அக்னி நட்சத்திரம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு கத்திரி வெயில் மே 4 ஆம் தேதியான இன்று தொடங்குகிறது. வெயிலின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் இந்த கத்திரி வெயில் மே மாதம் 28 வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெயிலை சமாளிக்க சில டிப்ஸ்
1. முக்கியமான தேவை இல்லாத பட்சத்தில் சூரியன் உச்சி வானில் இருக்கும்போது வெளியே செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்... தண்ணீரில் உப்பு மற்றும் சர்க்கரை கலந்து குடிப்பதால் உடலின் நீரிழப்பு சீர் செய்யப்படும்.
2. வழக்கமாக அருந்தும் தண்ணீரை விட அதிகமாக தண்ணீர் அருந்துங்கள். வெயிலின் வெப்பத்தால் ஏற்படும் வியர்வையால் உடலில் நீர் சத்து குறையும். ஆகையால் அவ்வப்போது நீர் அருந்திக்கொண்டே இருப்பதுதான் நல்லது.
3. காரமான எந்த உணவையும் சாப்பிட வேண்டாம். அத்துடன் அதிக மசாலாக்கள் கலந்த உணவுகளையும், எண்ணெய் பதார்த்தங்களையும் தவிர்ப்பது நல்லது.
4. அதிக அளவில் நீர்மோரை அருந்தலாம். அது போலவே நீர் சத்து அதிகமாக உள்ள இளநீர், பனை நுங்கு, தர்பூசணி பழம் ஆகியவற்றை சாப்பிடுவது நல்லது.
5. எலுமிச்சை பழத்தில் ஜூஸ் போட்டு குடியுங்கள். அது உங்கள் உடலுக்குத் தேவையான உடனடி ஆற்றலை அளிக்கும். ஆகையால் அதை அடிக்கடி குடிப்பது நல்லது.
6. வெயில் பாதிக்காமலிருக்க சன் கிளாஸ்'அணிந்துகொள்வது நல்லது. நீண்டநேரம் சூரிய ஒளியின் புறஊதாக்கதிர்கள் உடலில் படுவதால், சருமப் பிரச்னைகள் ஏற்படும். அதனால் வெயிலில் வெளியே செல்வதற்குமுன் சன்ஸ்கிரீன் லோஷனைத் தடவிக் கொள்ளலாம்.
Also see... கோடைக் காலத்தில் லெமன் ஜூஸ் பருகுவதால் இவ்வளவு நன்மைகளா?
7. கோடைக்காலத்தில், குழந்தைகள் தொடங்கி முதியவர் வரை அனைவரையும் வதைக்கும் முக்கியப் பிரச்னை வியர்க்குரு. உடலில் வியர்வைத் தங்குவதால்தான் வியர்க்குரு ஏற்படுகிறது. இதைத் தடுக்க, தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் குளிக்க வேண்டும்.
8. கோடையில் ஏற்படும் சரும வறட்சியால் பாதங்களில் வெடிப்பு ஏற்படலாம். இதைத் தவிர்க்க தினமும் இரவில் பாதங்களைக் கழுவி, சுத்தப்படுத்திவிட்டு தேங்காய் எண்ணெய் அல்லது மாய்ஸ்ட்ரைசர் கிரீமை பயன்படுத்தலாம்...
9. உடலில் ஈரம் தங்காத அளவுக்கு வியர்வையை உறிஞ்சும் பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.
10. இறுக்கமான ஆடைகள் அணியக்கூடாது. அதனால் சருமத்தில் வியர்வை தங்கி அரிப்பு போன்ற பாதிப்புகள் உண்டாகும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.