உடல் ஆரோக்கியம், ஃபிட்நெஸ், மன நலம், வலிமை, நோய் தடுப்பு, ஆற்றல் அதிகரிப்பு என்று பல விதங்களிலும் யோகா ஆசனங்கள், அனைத்து வயதினருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. எந்த வயதினராக இருந்தாலும், ஆரோக்கியம் குன்றியிருந்தாலும் கூட யோகா மூலம் உடலையும் மனதையும் பலப்படுத்த முடியும். யோகா பயிற்சி செய்வதால் கிடைக்கும் அற்புதமான பலன்களையும், நீண்ட கால நன்மைகளையும் உணர்ந்த பலரும் முறையாக யோகா பயிற்சி பெற்று தினமும் பயிற்சி செய்து வருகின்றனர். யோகா என்பது ஒரு வாழ்க்கை முறையாகவே மாற்றிக்கொண்டுள்ள பலர் உள்ளனர். மன அழுத்தத்துக்கு தீர்வு காணுவது முதல், உடலை நேர்த்தியாக அழகாக, பொலிவாக மாற்றுவது வரை பல விதங்களில் நன்மை செய்யும் யோகா, ஆண்களை பரவலாக பாதிக்கும் விறைப்புத் தன்மை குறைபாடுக்கும் தீர்வு உள்ளது. விறைப்புத் தன்மையை சரி செய்ய நீங்கள் செய்யவேண்டிய யோகாசனங்கள் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்.
நவுகாசனா (படகு ஆசனம்) :
முறையான பயிற்சி இல்லாதவர்கள் கூட, இந்த ஆசனத்தை எளிதில் செய்யலாம். இடுப்புப் பகுதிக்கு இந்த ஆசனம் வலு சேர்த்து, உறுதியாக்கும். உடலில் எடை மற்றும் இந்த நிலை இரண்டுமே இடுப்பு மற்றும் வயிற்றுப் பகுதியால் தாங்கப்படுவதால், கீழ்வயிறு, இடுப்பு, தொடை மற்றும் பெல்விக் ஆகிய பகுதிகளில் தசைகள் வலுவாகி, ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
- கால்களை முட்டியில் மடித்து கொண்டவாறு தரையில் அமர்ந்து பாதங்களை நன்றாக ஊன்றிக் கொள்ளவும்
- கைகளால் இரண்டு கால் முட்டிகளையும் கிலாஸ்ப் செய்து, முதுகு நேராக இருக்கும்படி அமரவும்
- கால்களை தரையில் இருந்து மெதுவாக மேலே தூக்கவும். முட்டிக்கு நேர்கோட்டில் இரண்டு கால்களும் முன்புறமாக எந்த சப்போர்ட்டும் இல்லாமல் நீண்டிருக்க வேண்டும்
- லேசாக பின்புறமாக சாயவும்
- இரண்டு கைகளையும் கால்களுக்கு பக்கவாட்டில் நீட்டிக் கொள்ளவும்
- உடலை வளைக்காமல், இந்த ஆசனத்தை பேலன்ஸ் செய்யுங்கள்
தண்டயமன தனுராசனம் (வில் ஆசனம்) :
உடலை வில் போன்று வளைக்கும் ஆசனம் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
தண்டுவடத்தை வலுவாக்கும், உடல் முழுவதும் நெகிழ்வுத்தன்மையை ஏற்படுத்தி தசைகளை உறுதி செய்யும் தனுசாரத்தின் மற்றொரு வகை தான் தண்டயமான தனுராசனம். ஒற்றைக் காலால் உடல் முழுவதையும் பேலன்ஸ் செய்து, மற்றொரு கால் மற்றும் இரண்டு கைகளையும் நேர்கோட்டில் நீட்டிக்கும் இந்த ஆசனத்தால் கைகள், தோள், இடுப்பு, தண்டுவடம், பின்பகுதி மற்றும் கால்கள் என்று முழுவதுமாக ஸ்ட்ரெட்ச் ஆகி, தண்டுவடம் வலுவாகும்.
also read : நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, மன அழுத்தத்தை போக்க உதவும் யோகாசனங்கள்!
- தரையில் பாதங்களை ஊன்றி நேராக நிற்கவும்
- கைகளை தலைக்கு மேலாக நேராக நீட்டவும்
- வலது காலை தரையில் ஊன்றி, இடது காலை பின்புறமாக ஸ்ட்ரெட்ச் செய்து, இடுப்பிலிருந்து நேராக நீட்டிக்கொள்ளவும்
- உடலை முன்புறமாக குனிந்து, இரண்டு கைகளையும் நேராக முன்பக்கம் நீட்டவும்
- வலது கால் தரையில் ஊன்றி இருக்க, இடது கால் முதல் தலை மற்றும் இரண்டு கைகளும், ஒரே நேர்கோட்டில் இருக்குமாறு நிற்க வேண்டும்.
மர்ஜர்யாசனம் (பூனை மற்றும் பசு):
நான்கு கால் உயிரினங்களைப் போல மூச்சு பயிற்சியும் சேர்த்து செய்யும் இந்த ஆசனத்தில், முதுகு, இடுப்பு, பின்புறம் ஆகிய பகுதிகளில் உள்ள வலியை நீக்கி, ஆண் உறுப்புக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இந்த ஆசனம், பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
- விலங்கு போல நான்கு கால்களில், கைகள் மற்றும் கால் முட்டிகளை தரையில் ஊன்றவும்
- மூச்சை ஆழமாக உள்ளே இழுத்தவாறு முதுகை வளைத்து வயிற்றுப்பகுதி தரை நோக்கி தாழ்வாகும், அதே நேரத்தில் தலையை உயர்த்திப் பார்க்க வேண்டும்.
- உள்ளிழுக்கும் மூச்சு அடி வயிறு வரை கொண்டு சென்று நிரப்ப வேண்டும், அதே நிலையில் சில நொடிகள் இருக்கவும்
- மூச்சை ஒரே சீராக வெளியேற்றி தலையைத் தாழ்த்தி, உயர்த்திய முதுகை நேராக ஆக்கவும்.
- இதே போன்ற பத்து முதல் இருபது முறை வரை செய்யலாம்
also read : விரைவில் கருத்தரிக்க உதவும் எளிய யோகாசனங்கள் இங்கே..
சலபாசனம்:
தசைகளை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உள்ளுறுப்புகளுக்கு புத்துணர்ச்சி அளித்து, நரம்புகளை வலுப்படுத்தி பாலியல் ரீதியான குறைபாடுகளை இந்த ஆசனம் நிர்வத்தி செய்யும். குப்புறப்படுத்துக் கொண்டு இந்த ஆசனத்தால் வயிற்றுப்பகுதியில் இருக்கும் கொழுப்பும் குறையும்.
- குப்புறப்படுத்துக் கொண்டு, கைகள் மற்றும் கால்களை நீட்டிக் கொள்ளவும்
- தலை, நெஞ்சுப்பகுதி மற்றும் இரண்டு கைகளையும் தரையில் இருந்து மேலே உயர்த்தவும்
- அதே போல, முட்டியிளிருந்து இரண்டு கால்களையும் தரையில் இருந்து உயர்த்தவும்
- உடல் உடலின் எடையை உங்கள் வயிற்றுப்பகுதி தாங்கி நிற்கும்
- உங்களால் இரண்டு கால்களையும் ஒரே நேரத்தில் உயர்த்த முடியவில்லை என்றால், ஒரு காலை மட்டும் மேல்புறமாக உயர்த்தலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.