அடுத்த 3 மாதங்களுக்கு கொரோனா மூன்றாம் அலை நாட்டை தாக்க வாய்ப்பில்லை : BHU பேராசிரியர் நம்பிக்கை

மாதிரிப் படம்

மூன்றாம் அலை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படும் நிலையில், தொற்றுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் வகையில், தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக தீவிரமாக நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

  • Share this:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் பரவல் கட்டுக்குள் வந்தாலும் ஒரு சில பகுதிகளில் தொற்று பாதிப்பு திடீரென அதிகரிப்பதும், பின்பு குறைவதுமாக இருக்கிறது. இன்னும் முழுமையாக கொரோனா இரண்டாம் அலை நாட்டை விட்டு விலகாத நிலையில் மூன்றாம் அலை வந்து விடுமோ என்ற அச்சத்திலேயே மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

மூன்றாம் அலை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படும் நிலையில், அதற்குள் நம் நாட்டின் மக்கள் தொகையில் பெரும்பாலானோருக்கு தொற்றுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் வகையில், தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக தீவிரமாக நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

இதனிடையே பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் (BHU) விலங்கியல் துறையில் மூத்த மரபியலாளராக உள்ள பேராசிரியர் ஞானேஷ்வர் சௌபே கூறுகையில், சமீபத்திய பகுப்பாய்வில் நாட்டில் இருக்கும் சுமார் 70-75% மக்களிடம் அடுத்த 3 மாதங்களுக்கு நீடிக்கும் அளவிற்கான ஆன்டிபாடிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இதனால் வரவிருக்கும் 3 மாதங்களில் கொரோனா மூன்றாம் அலை எழுவதற்கான சாத்தியம் இல்லை என்றும் கூறி உள்ளார். இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள பேராசிரியர் ஞானேஷ்வர் சௌபே, தொற்று பரவல் தொடர்பான கண்காணிப்பை நாங்கள் வழக்கம் போல மேற்கொண்டு வருகிறோம்.

ஆன்டிபாடி இருப்பதற்கான சோதனையில் குறிப்பாக நேர்மறை சீரம் எதிர்வினை இருப்பது அல்லது ஏற்படுவதை குறிக்கும் செரோபோசிட்டிவிட்டி 10%க்கு கீழே சென்ற பிறகு 2-வது அலை வீரியமுடன் எழுந்ததை கடந்த முறை நாங்கள் கண்டோம். எனவே இந்த முறையும் நாங்கள் ஒவ்வொரு மாதமும் தொடர் கண்காணிப்பு செய்து வருகிறோம் மற்றும் குறிப்பிட்ட நபர்களின் ஆன்டிபாடிகள் அவ்வப்போது சரிபார்க்கப்படுகின்றன.



அந்த வகையில் பார்க்கும் போது சுமார் 75 சதவீத மக்களுக்கு 3 மாதங்கள் நீடிக்கும் அளவிற்கான ஆன்டிபாடிகள் இருக்கும் நிலையில், குறைந்தது இன்னும் 3 மாதங்களுக்கு பிறகே கொரோனா மூன்றாம் அலை மக்களை தாக்க கூடும் என்று பேராசிரியர் ஞானேஷ்வர் கூறி இருக்கிறார். எனினும் அதிகளவிலான மக்கள் தற்போது கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டு வருவதால், இன்னும் 3 மாதங்களில் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு வர உள்ள மூன்றால் அலையை எதிர்க்க அது உதவும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மக்களிடம் இருக்கும் ஆன்டிபாடிகளின் அளவு குறையும் சமயங்களில் அவ்வப்போது கொரோனா தலை தூக்கும் ஆனால் இறுதியில் அது குறையும். கோவிட் -19 தடுப்பூசி போட்டு கொண்ட மற்றும் தொற்றிலிருந்து குணமடைந்த மக்கள் மூன்றாவது அலையின் போது பாதுகாக்கப்பட்ட குழுவின் கீழ் வருவார்கள் என்று அவர் கூறினார். பாதுகாக்கப்பட்ட குழுவின் கீழ் உள்ளவர்களின் இறப்பு விகிதம் மூன்றாம் அலையின் போது மிக மிக குறைவாகவே இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Heart Attack : உங்கள் தினசரி வாழ்க்கை முறையில் இந்த மாற்றங்களை செய்தால் மாரடைப்பை தவிர்க்கலாம்...

ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் ஆன்டிபாடிகளின் அளவு குறையும் போது, மூன்றாவது அலைக்கான வாய்ப்புகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், நம் 70% மக்களிடம் போதிய நோய் எதிர்ப்பு சக்தி வரும் போது கோவிட் தாக்கம் குறைவாகவும் படிப்படியாக, அதன் அதிர்வெண் குறையவும் தொடங்கும். இதன் மூலம் வைரஸை நிறுத்த முடியாது, இறப்பு விகிதத்தை குறைக்கலாம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றார். அதே போல நாட்டில் இருக்கும் ஒட்டுமொத்த மக்களும் தொற்றால் பாதிக்கப்பட்டால் கூட, இறப்பு விகிதத்தை 0.1 அல்லது 1% க்கும் குறைவாக வைத்திருக்கும் பட்சத்தில் இந்த போரில் நாம் வெற்றி பெறுவோம் என்றார்.

 
Published by:Sivaranjani E
First published: