• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • உலக புற்றுநோய் தினம் 2021 : இந்தியாவில் அதிகமாக காணப்படும் மார்பக புற்றுநோய்... காரணம் என்ன?

உலக புற்றுநோய் தினம் 2021 : இந்தியாவில் அதிகமாக காணப்படும் மார்பக புற்றுநோய்... காரணம் என்ன?

மார்பகப் புற்றுநோய்

மார்பகப் புற்றுநோய்

2020ல் 13.9 லட்சத்திலிருந்து 2025க்குள் 15.7 லட்சமாக புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது (இது கிட்டத்தட்ட 20% அதிகம்)

  • Share this:
உலகெங்கும் உள்ள நாடுகளில் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்கள்தான் என்றாலும், நமது நாட்டில் மட்டும் நிலைமை தலைகீழாக இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (ICMR - Indian Council of Medical Research) கூறியுள்ளது.

ஆம்... இந்தியாவில் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் என்பதுடன் அவர்களை அதிகம் பாதிப்பது மார்பகப் புற்றுநோய் என்பது தெரியவந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில், இது ஒரு உயிர்க்கொல்லி நோயாக மாறியிருப்பது கவலை தருவதாக உள்ளது. அக்டோபர் மாதத்தை, மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக உலகம் முழுவதும் அனுசரிக்கும் சூழலில், இந்திய அரசும் இதுகுறித்த விழிப்புஉணர்வைப் பெண்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது.

தேசிய புற்றுநோய் பதிவு திட்டம் (NCRP) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை, 2020ல் 13.9 லட்சத்திலிருந்து 2025க்குள் 15.7 லட்சமாக புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது (இது கிட்டத்தட்ட 20% அதிகம்) என்ற ஷாக்கிங்கான நியூஸை கூறியுள்ளது. இருப்பினும், ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், பொதுவான புற்றுநோய்களில் மூன்றில் ஒரு பகுதியாவது நம்மால் தடுக்கமுடியும் என்பதுதான். எல்லா வகையான புற்றுநோய்களிலும், மார்பக புற்றுநோய் (Breast cancer) இந்திய நகரங்களில், குறிப்பாக டெல்லி, பெங்களூரு மற்றும் சென்னை போன்ற பெருநகரங்களில், பெண்களில் நான்கில் ஒரு பங்கிற்கும் அதிகமாக உள்ளது.

மார்பக புற்றுநோய்க்கான காரணங்களும் அறிகுறிகளும்...

மார்பக புற்றுநோய்க்கு ஒரு குறிப்பிட்ட காரணம் இல்லை. அடிப்படையாக உயிரணுக்களின் வளர்ச்சி மற்றும் இறப்பைக் கட்டுப்படுத்தும் மரபணுக்களில் மாற்றங்கள் ஏற்பட்டு புற்றுநோயாகத் தோன்றுகிறது.

பெண்களுக்கு மார்பகங்களில் கட்டி, மாதவிடாயின் போது இயல்பைவிட அதிக ரத்தப்போக்கு, இறுதி மாதவிடாய் (post menopause) நின்ற பிறகும் ரத்தப்போக்கு ஏற்படும். மேற்கண்ட சில காரணங்களில் சிலவற்றை மாற்ற முடியாது என்றாலும், மார்பக புற்றுநோய்களில் மூன்றில் ஒரு பகுதியை உணவு மற்றும் ஒருசில நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் மோசமான அபாயங்களை தடுக்க முடியும்.உலக அளவில், மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா முதல் மூன்று இடங்களில் உள்ளது தெரியவந்துள்ளது. இதுவரை 50 வயதுக்கு மேற்பட்டோர் மத்தியில் அதிகமாகக் காணப்பட்ட இந்நோய், தற்போது 30 வயதிலேயே வருகிறது. அதிலும் டெல்லி, சென்னை, பெங்களூரு, மும்பை, திருவனந்தபுரம், புனே போன்ற மெட்ரோ நகரங்களைச் சேர்ந்த பெண்கள்தான் அதிகப்படியாக மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக அதிர்ச்சித் தகவல்களைத் தந்துள்ளது மருத்துவ ஆராய்ச்சி நிறுவன புள்ளிவிவரங்கள்.

உலக புற்றுநோய் தினம்: புற்றுநோயை பற்றி பரப்பப்படும் கட்டுக்கதைகளும்... உண்மைகளும்...!

"மார்பக புற்றுநோய்களில் 10% வரை பரம்பரை பரம்பரையாக இருக்கக்கூடும், 90% க்கும் அதிகமானவை உடல் பருமன், ஆல்கஹால், புகைபிடித்தல், ஆரோக்கியமற்ற உணவு, ரசாயனங்கள் மற்றும் ஹார்மோன்களின் வெளிப்பாடு (ஈஸ்ட்ரோஜன்), தாமதமாக மாதவிடாய் நிறுத்தம், இனப்பெருக்கம் போன்ற வாழ்க்கை முறை காரணிகளுடன் தொடர்புடையவை" என பெங்களூருவின் ஃபோர்டிஸ் மருத்துவமனையின் (Fortis Hospital) மருத்துவ புற்றுநோயியல் மற்றும் ஹீமாட்டாலஜி இயக்குநர் டாக்டர் நிதி ரைசாடா (Dr Niti Raizada) கூறுகிறார்.

பெண்கள் சிறுவயதிலேயே பூப்படைவது, 30 வயதுக்கு பிறகு நடக்கும் திருமணங்கள், அதன் தொடர்ச்சியாக நடக்கும் குழந்தைப்பேறின்மைக்கான தொடர் ஹார்மோன் சிகிச்சைகள், டெஸ்ட் டியூப் பேபி போன்ற செயற்கைக் கருத்தரிப்பு முறைகள் மற்றும் தாமதமாகும் மெனோபாஸ் போன்றவைதான் மார்பகப் புற்றுநோய் வர முக்கியக் காரணங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் உறவினர்களில், குறிப்பாக தாய் அல்லது சகோதரிக்கு மார்பகப் புற்றுநோய் இருந்தால் அந்தக் குடும்பத்துப் பெண்ணுக்கு இந்தப் புற்றுநோய் வர 10 சதவிகித வாய்ப்புகள் அதிகம் என்பது தெரியவந்துள்ளது.இந்த புள்ளிவிவரம், குரோமோசோம்களில் BRCA 1&2 என்ற மரபணுக்கள் தோன்றுவதும்கூட மார்பகப் புற்றுநோயை உருவாக்கலாம் என்றும் கூறுகிறது . உடல்பருமன், உடற்பயிற்சியின்மை, புகை மற்றும் மதுப்பழக்கம், ரத்த அழுத்தம், சர்க்கரைநோய்,உலகப் புற்றுநோய் மையம், ஒவ்வாத மேற்கத்திய உணவுப் பழக்கவழக்கங்கள், அதிகக் கொழுப்பு உணவுகள் போன்ற வாழ்க்கைமுறை மாற்றங்களையும் காரணங்களாகக் கோடிட்டுக் காட்டுகிறது .

இவ்வளவு கொடுமையான நோயை வரும்முன் கண்டறிவது எப்படி என்று தெரியவேண்டியது அவசியம். நமக்கு நாமே பரிசோதித்துக் கொள்ளும் மார்பக சுயபரிசோதனை முறையும், மருத்துவமனை சென்று பரிசோதனை செய்யும் 'மேம்மோகிராம்' (Mammogram) முறை மூலமும் மிகவும் எளிதாகப் புற்றுநோயைக் கண்டறியலாம் என்கின்றனர் பெண்கள் நல மருத்துவர்கள்.25 வயது முதல் பெண்கள், மாதம் ஒருமுறையாவது, தங்களது மார்புகளைத் தாங்களாகவே சோதனை செய்து கொள்ளும், 'சுய மார்பகப் பரிசோதனை' (Self Breast Examination) அவசியமான ஒன்றாகும். மாதவிலக்கு ஏற்பட்ட 7 முதல் 10 நாள்களுக்குள், கண்ணாடி முன் நின்று, இரு மார்பகங்களுக்கு இடையே வித்தியாசம் தெரிகிறதா என்று கண்களால் பார்த்தும், அந்தப்பக்க கையின் நான்கு விரல்களால் அழுத்தித் தேய்த்தும் சுயபரிசோதனை செய்து கொள்ளலாம். பரிசோதனையின்போது, மார்பில் கட்டி அல்லது வீக்கம், மார்பகத் தோலில் அதீத சுருக்கம், மார்பகத்தில் ரத்தக்கசிவு போன்ற வித்தியாசமான அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரின் உதவியை நாடவேண்டும்.

அதன்பிறகு `மாமோகிராம்' என்ற ஸ்கிரீனிங் டெஸ்ட், மிக முக்கியமான பரிசோதனை முறையாகும். மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும் 'மேம்மோகிராம்' உண்மையில் ஒரு எக்ஸ்-ரே டெஸ்ட் தான். ஆனால், இதில் பயன்படுத்தப்படும் குறைந்த அளவிலான கதிர்வீச்சு கொண்ட எக்ஸ்ரே கதிர்கள், மார்பகத்தில் புதிதாகத் தோன்றும் மாற்றங்களைக் கண்டறிந்துவிடும். மார்பகத்தில் கட்டிகள் இல்லாவிட்டாலும்கூட, கட்டிகள் வருவதற்கான அறிகுறிகள், கால்சியம் அளவில் மாற்றங்களை இந்த `மாமோகிராம்' பரிசோதனை காட்டிக் கொடுத்துவிடும். இதன்மூலம் நோய் வரும்முன் கண்டறிந்து சிகிச்சை கொடுக்க முடியும் என்பதே இதன் சிறப்பம்சமாகும்.

 

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: