இந்தியாவில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது முதல் தற்போது வரை 350 கோடிக்கும் மேற்பட்ட டோலோ-650 மாத்திரைகள் விற்றுத் தீர்ந்துள்ளன. மருத்துவர் அறிவுரையின்றி நொறுக்குத் தீனி போல் டோலோ மாத்திரை சாப்பிட்டால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு உயிருக்கே ஆபத்து நேரிடக் கூடும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவத் தொடங்கிய கடந்த இரண்டு ஆண்டுகளில், ஊரடங்கு, முகக்கவசம், தடுப்பூசி என்ற வார்த்தைகளுக்கு அடுத்தபடியாக அதிகமாக உச்சரிக்கப்பட்ட வார்த்தை Dolo 650-ஆகவே இருக்கும். கொரோனாவின் பொதுவான அறிகுறிகளான காய்ச்சல், தலைவலி, உடல்வலி போன்றவற்றிற்கு சிறந்த வலி நிவாரணியாக டோலோ 650ஐ மக்கள் உட்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கொரோனா பரவ ஆரம்பித்ததிலிருந்து இப்போது வரை 350 கோடிக்கும் அதிகமான மாத்திரைகள் விற்பனையாகியிருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
350 கோடி டோலோ மாத்திரைகளையும் செங்குத்தாக அடுக்கி வைத்தால், அது உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை விட 6,000 மடங்கு உயரமாகவும், உலகின் மிக உயர்ந்த கட்டடமான புர்ஜ் கலீஃபாவை விட 63,000 மடங்கு உயரமாகவும் இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
2019ஆம் ஆண்டில் கொரோனா பரவுவதற்கு முன்பு இந்தியாவில் சுமார் ஏழரை கோடி டோலோ மாத்திரைகளை விற்பனையாகியுள்ளன. 2020ஆம் ஆண்டில் 141 கோடி மாத்திரைகளும் 2021 நவம்பர் மாத நிலவரப்படி 217 கோடி மாத்திரைகளும் விற்று தீர்ந்துள்ளன.
மேலும் படிங்க: NetraSuraksha | நீங்கள் நீரிழிவு நோயுடன் வாழ்பவர் என்றால், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கண் தொடர்பான சிக்கல்கள்
அனைத்து வயதினருக்கும் டோலோ-650 மாத்திரை பரிந்துரைக்கப்படுகின்றன. காய்ச்சல், தலைவலி போன்றவற்றிற்காக மருத்துவமனைக்கு எப்போது சென்றாலும் மருத்துவர்கள் இந்த மாத்திரையைத் தான் பரிந்துரை செய்கின்றனர். இதனால், மருத்துவரை அணுகாமல் இந்த மருந்தை மக்கள் உட்கொள்ள தொடங்கி விட்டதாகவும், டெங்கு, எலிக்காய்ச்சல், மலேரியா உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல் நோய்களுக்கு மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மாத்திரையை பயன்படுத்துவது பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் கூட டோலோ-650 மாத்திரையை மருந்து கடையில் பெற்றுக் கொள்ளலாம் என்பதால், மக்கள் இதனை ரட்சகனாகவே பார்க்கத் தொடங்கிவிட்டனர் என்பதற்கு உதாரணமாக சமூகவலைதளங்களில் டோலோ-650 மாத்திரை குறித்த மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன.
மேலும் படிங்க: உஷார்..! இந்த 5 பொருட்களையும் தெரியாமல் கூட உங்கள் முகத்தில் பூசி விடாதீர்கள்!
காய்ச்சல் மனிதர்களுக்கு பல விதத்தில் உள்ளது. முதல் இரண்டு நாட்களுக்கு அதன் தாக்கம் குறைவாக இருக்கும் குறிப்பாக டெங்கு, எலிக்காய்ச்சல், மலேரியா உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்கள் போன்ற நோய்களுக்கு மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் dolo -650ஐ எடுத்துக்கொள்வது பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.
அதே போல வீடுகளில் முன்னெச்சரிக்கையாக மாத்திரைகளை வாங்கி வைத்துக்கொண்டு எப்பொழுதெல்லாம் உடலில் காய்ச்சல் வருகிறது அல்லது முன்கூட்டியே எச்சரிக்கையாக இருப்பதாக எண்ணிக்கொண்டு மாத்திரை எடுத்துக்கொள்வது போன்ற செயலில் மக்கள் ஈடுபடுகின்றனர். இதனால் கல்லீரல், சிறுநீரகம் இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு உயிருக்கே ஆபத்து நேரிடக் கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.