வசந்தி அன்று மாலை அலுவலகம் முடிந்து நேராக மருத்துவமனைக்கு வந்திருந்தார். அறிவியல் பட்டதாரி. தனியார் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிகிறார். திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. தன்னுடைய முதல் குழந்தையை கருவில் தாங்கி இருக்கிறார். சென்ற வாரம் தான் கர்ப்பகால செக்கப்பிற்காக வந்திருந்தார். . "டாக்டர்! , எனக்கு ஒரு சந்தேகம் அதற்காக தான் வந்தேன்" என்று கூறினார் வசந்தி.
"என்ன சந்தேகம் ?, கேளுங்கள் வசந்தி!" என்றேன்.
"டாக்டர் போனவாரம் செக்கப்புக்கு வந்திருந்தப்ப ரத்த பரிசோதனை எல்லாம் செய்யணும்னு எழுதி கொடுத்து இருந்தீங்க. அதுல சுகர் டெஸ்டும் இருக்கிறது . எனக்கு இப்ப 24 வயசு தான் ஆகுது. இப்பவே எனக்கு சுகர் வருமா? கட்டாயமாக சுகர் டெஸ்ட் பார்க்கணுமா?!" என்றார்.
என் பதில்:
பொதுவாக கர்ப்பிணிகளுக்கு முதல் மூன்று மாதங்களில் எடுக்க வேண்டிய பரிசோதனைகளில் சர்க்கரை டெஸ்ட் மிக மிக முக்கியமானதாகும். அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் இருந்தால் அது குழந்தையை கடுமையாக பாதிக்கும். அதுவும் கரு வளரக்கூடிய கர்ப்பத்தின் ஆரம்ப காலங்களில், சர்க்கரை நோய் இருந்தால், அது கருவின் நரம்பு வளர்ச்சி, எலும்பு வளர்ச்சி, இதயம் போன்ற பல உறுப்புகளையும் பாதிக்கலாம்.
ஏற்கனவே சர்க்கரை நோய் இருப்பது தெரியாமல் இருந்தால், கர்ப்பத்தில் ஆரம்ப கட்டத்தில் செய்யப்படும் பரிசோதனையில், முதல் முறையாக சர்க்கரை நோய் இருப்பது கண்டுபிடிக்கப்படலாம். அவ்வாறு ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடிக்கும்போது, அதற்குரிய ஊசி மற்றும் மாத்திரைகளை கொடுப்பதன் மூலம் அதை கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம்.
ஒரு சிலருக்கு முன்பு சர்க்கரை நோய் இருந்திருக்காது. ஆனால் கர்ப்பமான சர்க்கரை நோய் வரலாம். குறிப்பாக வயது அதிகம் எனில், பெற்றோருக்கு சர்க்கரைநோய் இருந்தால், கர்ப்பிணி எடை , பருமன் அதிகம் இருந்தால், முந்தைய கர்ப்பத்தில் சர்க்கரை நோய் வந்திருந்தால், கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு இருக்கும்.
கர்ப்ப காலத்தில் எடுக்கப்படும் சர்க்கரை பரிசோதனை சற்று வித்தியாசமானது. இதை குளுக்கோஸ் டாலரன்ஸ் டெஸ்ட் (glucose tolerance test) என்று கூறுவோம். அதாவது 75 கிராம் குளுக்கோஸ் நீரில் கரைக்கப்பட்டு கொடுக்கப்படும். 2 மணி நேரத்தில் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் சிறுநீரில் உள்ள சர்க்கரை அளவையும் சோதிப்போம்.
ரத்தத்தில் சர்க்கரை அளவு 140gm/ dl விட குறைவெனில் அவர்களுக்கு சர்க்கரை நோய் இல்லை என்று கொள்ளலாம்.
உலக சுகாதார நிறுவனம் இந்த குறிப்பிட்ட ரத்த பரிசோதனையை கோல்டன் ஸ்டாண்டர்ட் டிரஸ்ட் (golden standard test) என்று சான்றளிக்கிறது. இதன் மூலம் சர்க்கரை நோய் கண்டுபிடிக்கப்படும் வாய்ப்பு மிக அதிக சதவீதம் என்பதால் கர்ப்பிணிகளுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது.
எனவேதான் கர்ப்பத்தின் ஆரம்ப கட்டத்திலேயே ரத்தத்தில் ஹீமோகுளோபின் சர்க்கரை அளவு தைராய்டு போன்ற மிக முக்கியமான டெஸ்டுகள் செய்யப்படுகின்றன. ஏதேனும் பிரச்சனை வர வாய்ப்பு இருக்கிறதா? என்பதை ஆரம்பகட்டத்திலேயே தெரிந்து கொள்ளும்போது அதற்கு ஏற்றார் போல சிகிச்சை எடுத்துக் கொள்ளும்போது அது தாய்க்கும் பாதுகாப்பை கொடுக்கும்.
ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியும்போது தகுந்த உணவு கட்டுப்பாட்டில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முயற்சிக்கலாம். அத்துடன் உடற்பயிற்சி, பிறகு மாத்திரைகள், தேவைப்பட்டால் இன்சுலின் ஊசி ,என்று அதிகரித்துக் கொண்டே செல்லலாம்.
கர்ப்பம் அடைவதற்கு முன்பே சர்க்கரை அளவை சோதித்து குறைந்தது மூன்று மாதங்கள் வரை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். குறிப்பாக ஹச் பி ஏ ஒன் சி(HbA1C) எனப்படும் மூன்று மாத சராசரி சர்க்கரை அளவு 6% சதவீதத்திற்கு மேல் தாண்டக்கூடாது. அவ்வாறு கட்டுப்பாட்டில் இருக்கும்போது கருத்தரித்தால் அந்த கரு ஆரோக்கியமாக இருக்கும். அத்துடன் ஏற்கனவே சர்க்கரை நோய் இருப்பவர்கள் குழந்தைகளுக்கு திட்டமிடும் போது எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளை கர்ப்பத்திற்கு பாதுகாப்பாக இருப்பதாக மாற்றிக் கொள்ளலாம் .
கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோயை கண்டறிவதுஎவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை புரிந்து கொண்டேன். டாக்டர்! எல்லோருக்கும் பொதுவான ஒரு பரிசோதனைதான் இது என்பதையும் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி! பரிசோதனைகள் எடுத்துவிட்டு முடிவுகளோடு வருகிறேன் என்று தெளிவான முகத்துடன் விடைபெற்றார் வசந்தி.
கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மாவை தொடர்பு கொள்ள : doctorjsharma@gmail.com
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Diabetes, Pregnancy test, பெண்குயின் கார்னர்