பரவலாக கேகே என்று அறியப்படும் இந்தியாவின் பிரபல பாடகர் ஆன கிருஷ்ணமூர்த்தி குன்னத், நேற்று மே 31 அன்று மாரடைப்பால் காலமானார். கல்கத்தாவில் ஒரு நேரலை நிகழ்ச்சியில் இவர் பங்கேற்றிருந்த போது இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்ற செய்தி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாடகர் கே கேவின் வயது 53.
கொல்கத்தாவில் 5 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சியில் பாடிக்கொண்டிருந்த கே கே மேடையிலேயே அசௌகரியமாக உணர்ந்ததாகக் கூறப்படுகிறது. சில நிமிடங்களில் மயக்கம் போட்டு விழுந்து இருக்கிறார். அதன் பிறகு தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு சென்ற பொழுது மிகவும் அசௌகரியமாக இருந்ததாக தெரிவித்துள்ளார். உடனடியாக கொல்கத்தா மருத்துவ ஆய்வு மையத்திற்கு அழைத்து சென்ற பொழுது, ஏற்கனவே மாரடைப்பால் உயிர் பிரிந்துவிட்டது என்று மருத்துவர்களால் கூறப்பட்டது.
இந்தியாவின் பல மொழிகளிலும் பாடி வரும் பிரபலமான பாடகரான கே கே உயிரிழப்பு சம்பவம் உண்மை தான் என்பதை இன்னும் பலரால் உணர முடியவில்லை. அந்த அளவுக்கு மாரடைப்பு தீவிரமானதா என்று அதிர்ச்சியில் இருக்கின்றனர். குறிப்பாக திடீரென்று ஏற்படும் மாரடைப்பு எந்த அறிகுறியும் இல்லாமல் ஒரு நபரின் உயிரை பறித்துவிடுமா என்ற அச்சம் அதிகரித்துள்ளது. தமிழ் திரைப்படங்களில் பலரின் இசையில் சூப்பர்ஹிட் பாடல்களைப் பாடிய கேகேவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கே.கேவின் உயிரை பறித்த தீவிரமான மாரடைப்பு எச்சரிக்கைகள் பற்றி அனைவரும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
இதயத்திற்கு வரும் ரத்த ஓட்டத்தை ஏதேனும் ஒரு பிளாக்கேஜ் தடுப்பதால் மாரடைப்பு ஏற்படுகிறது. இதயத்திற்கு ரத்த ஓட்டம் இல்லாத போது இதயம் துடிப்பதை சட்டென்று நிறுத்தி விடும். இந்த பிளாக்கேஜ், கொழுப்பு, கொலஸ்ட்ரால் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனையால் ஏற்படும்.
உஷார்... தினசரி நீங்கள் சாப்பிடும் இந்த உணவுகள்தான் இதய நோய்க்கு காரணமாம்..!
மேடையில் பாடிக்கொண்டிருக்கும் போது அசௌகரியமாக உணர்ந்ததாக கூறிய கேகே தன்னுடைய ஹோட்டல் அறையில் மாரடைப்பால் இறந்துள்ளார். அசௌகரியம் என்பது மாரடைப்பின் பொதுவான அறிகுறியாகும். ஆனால் பொதுவாக ஒருவர் அசௌகரியமாக இருப்பது என்பது பல விஷயங்களுடன் தொடர்புடையது. உதாரணமாக உணவு செரிமானமாகவில்லை அல்லது அஜீரண கோளாறு ஆகியவை இருந்தாலும் அசௌகரியமான உணர்வு ஏற்படும். எனவே இது இதய நோய்தான் அல்லது மாரடைப்பு ஏற்படும் அபாயம் என்பதை யாரும் நினைத்துக் கூட பார்க்க மாட்டார்கள். ஆனால் மாரடைப்புக்கு வேறு சில அறிகுறிகளும் இருக்கின்றன.
கைகள், தோள்பட்டை, முதுகு, கழுத்து, தாடை மற்றும் பல் ஆகிய பகுதிகளில் வலியும் அசௌகரியமும் ஏற்படுவது மாரடைப்பின் அறிகுறிகள் ஆகும். சில நேரங்களில் மேல் வயிற்றில் வலியும் உண்டாகும்.
மேல் கூறிய பொதுவான அறிகுறிகள் தவிர்த்து, பின்வரும் அறிகுறிகள் மாரடைப்பு ஆபத்தைக் குறிக்கின்றன.
* மார்பில் தீவிரமான அழுத்தம்
* நெஞ்சுப்பகுதி இறுக்கமாக இருப்பது
* மார்பில் குத்துவது போன்ற வலி
* மூச்சு விடுவதில் சிரமம்
* தீவிரமான சோர்வு
* சில்லென்ற வியர்வை
* மயக்கம், தலைசுற்றல்
* செரிமான கோளாறு
இந்த ஒரு காரணத்தால்தான் மாரடைப்பு ஏற்படுகிறது என்று எந்த ஒரு விஷயத்தையும் குறிப்பிட முடியாது. பொதுவாக உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை ஆகிய இரண்டும் ஒருவரின் உடல் நலத்தை பாதிக்கிறது. அதிக ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால், தூக்கமின்மை மற்றும் உடற்பயிற்சியின்மை இவற்றுடன் இணைந்து மோசமான உணவுப் பழக்கம் ஆகியவை இளம் வயதினரிடையே மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது.
டைட்டாக ஜீன்ஸ் அணிவதால் கேன்சர் ஆபத்தா..? கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மை..!
மாரடைப்பால் இறந்த பாடகர் கே கே பொதுவாகவே ஊட்டச்சத்து நிறைந்த பேலன்ஸ்டு டயட் என்ற உணவு பழக்கத்தையும், தினசரி உடற்பயிற்சியையும் பின்பற்றி வந்தார். இருப்பினும் இவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதுக்கு என்ன காரணம் என்று கண்டறிய முடியவில்லை. மருத்துவர்கள் இறப்பிற்கான காரணத்தை பிரேத பரிசோதனை செய்து இன்று அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆரோக்கியமாக இருக்கும் நபர் திடீரென்று மாரடைப்பால் இருப்பது மிகப்பெரிய அதிர்ச்சி ஊட்டுவதாக இருக்கிறது. மேலும் கோவிட் பாதிப்பு நுரையீரலை மட்டுமல்லாமல் இதயத்தையும் பாதிக்கிறது. அதுமட்டுமின்றி ஏற்கனவே இருக்கும் கார்டியோவாஸ்குலர் பிரச்சினைகளின் தீவிரத்தை அதிகரிக்கிறது. எனவே கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதய பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து தற்போது நிலவி வரும் அதிகரித்த வெப்பம் காரணமாகவும் மாரடைப்பு அபாயம் அதிகரித்துள்ளது என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையோடு மட்டுமல்லாமல் அவ்வப்போது உடல்நல பரிசோதனையும் மேற்கொள்வதன் உடல் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை தெரிந்து கொண்டு நோய்களை தவிர்க்க முடியும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Heart attack