பிளாஸ்டிக் இல்லாத இடமே இல்லை, பிளாஸ்டிக் பயன்படுத்தாத பொருட்களே இல்லை என்று கூறும்படி, எல்லா இடங்களிலும் பிளாஸ்டிக்கின் பயன்பாடு நிரம்பியுள்ளது. பிளாஸ்டிக் பயன்பாடு ஒரு சில விஷயங்களை எளிதாக்கி இருந்தாலும், எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் மக்காத தன்மை காரணமாக சுற்றுசூழல் பாதிப்பு கணிசமான அளவு உயர்ந்தள்ளது. குறிப்பாக, பிளாஸ்டிக் கவர்கள் பயன்பாடு உலகம் முழுவதிலும் பூமி மற்றும் மண் வளத்தை பாதித்துள்ளது.
அது மட்டுமின்றி, கண்ணுக்கு தெரியாத அளவில், மைக்ரோ பிளாஸ்டிக் என்று ஏற்கனவே, காடு, மலை, பூமி, உணவுப்பொருட்கள் வரை எல்லா இடங்களிலும் பரவியுள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டை முடிந்த வரை குறைக்க பல விதங்களில் மாற்றுப் பொருட்களை பயன்படுத்த முயற்சி செய்யும் நிலையில், தற்போது ரத்தத்திலும் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பதாக அதிர்ச்சியூட்டும் தகவலை ஆய்வாளர்கள் கண்டரிந்துள்ளனர்.
மனித உடலில் எந்த வகையில் நச்சுகள் சேர்க்கின்றன என்று பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிளாஸ்டிக்கால் ஏற்படும் மாசுபாட்டைக் குறைக்க, இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுக்கு இங்கிலாந்தைச் சேர்ந்த காமன் சீஸ் என்ற குழுவும், ஆரோக்கியம், ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கான நெதர்லாந்து ஆர்கனைசேஷனும் நிதி வழங்கியுள்ளன.
பாதிக்கும் மேற்பட்ட இரத்த மாதிரிகளில் PET பிளாஸ்டிக் இருக்கும் தடயங்களைக் காட்டியது. இந்த வகை பிளாஸ்டிக், குளிர் பான பாட்டில்கள் தயாரிக்க பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் பாலிஸ்டிரீன் இருந்தது, உணவு பேக்கேஜிங்கிற்கு மற்றும் பல்வேறு தயாரிப்புகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
இந்த பிளாஸ்டிக் பயன்பாடுகள் எவ்வாறு மனித உடலில் ஊடுருவியது என்பது பற்றியும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. காற்று, உணவு, நீர் என்று மனிதர்களின் அடிப்படை தேவைகளின் வழியாகவும், பற்பசை, லிப்கிளாசஸ், மற்றும் டாட்டூ இங்க் ஆகியவற்றின் வழியாகவும் மனித உடலில் ஊடுருவியிருக்கலாம்.
டச்சு நாட்டு மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் என்விரான்மென்டல் இன்டர்நேஷனல் இதழில் வெளியானது. இந்த ஆய்வில் 22 வாலண்டியர்கள் கலந்து கொண்டனர். இவர்களின் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்த போது, 80% மேற்பட்டவர்களுக்கு, ரத்தத்தில் மைக்ரோபிளாஸ்டிக் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
91% இந்தியர்கள் கொரோனா தடுப்பூசிகள் தொற்றிலிருந்து பாதுகாக்கும் என நம்பிக்கை : கணக்கெடுப்பில் தகவல்
“இந்த ஆய்வின் முடிவுகள், பிளாஸ்டிக் என்பது நமது சுற்றுபுறத்தை ஊடுருவியதோடு மட்டுமல்லாமல், நம்முடைய உடலிலும் ஊடுருவத் தொடங்கியுள்ளது” என்று சயின்ஸ் மீடியா சென்டரின் விஞ்ஞானி ஆலிஸ் ஹார்டன் கூறியுள்ளார்.
மனித இரத்தத்தில், முதன் முறையாக மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பதைக் கண்டறிவது இதுவே முதல் முறை என்று Vrije Universiteit Amsterdam இன் சுற்றுச்சூழல் மற்றும் நச்சுயியல் நிபுணர் டிக் வேத்தாக் கூறியுள்ளார்.
மனித உடலில் பிளாஸ்டிக் எப்படி செயல்படுகிறது, அதை அகற்ற முடியுமா? தானாக வெளியேறுமா அல்லது உறுப்புகளில் தங்கி பாதிப்பை ஏற்படுத்துமா என்று பல கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
"நம் உடலில் பிளாஸ்டிக் இருக்கிறது என்பதற்கு இது ஒரு சான்று - மற்றும் நமக்குள் இருக்கக்கூடாது என்பதையும் உணர்த்துகிறது" என்றும் அவர் கூறியுள்ளார். அது மட்டுமின்றி, இது ஆரோக்கியத்தை எப்படியெல்லாம் பாதிக்கும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள கூடுதல் ஆராய்ச்சி தேவை என்பதையும் முன்மொழிந்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.