ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

குழந்தைகளுக்கு இப்படி ஒரு மன ஆரோக்கிய பிரச்னை இருக்கா? கண்டறிவது எப்படி? பள்ளியின் பங்கு என்ன?

குழந்தைகளுக்கு இப்படி ஒரு மன ஆரோக்கிய பிரச்னை இருக்கா? கண்டறிவது எப்படி? பள்ளியின் பங்கு என்ன?

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

வீட்டில் இருப்பதை விட ஒரு குழந்தை பள்ளியில் அதிக நேரம் இருப்பதால் குழந்தையின் வளர்ச்சியில் பள்ளிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  வாழ்வில் அனைவரும் ஒருகட்டத்தில் குறிப்பிடத்தக்க மன அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். மோசமான மன ஆரோக்கியம் வயது வித்தியாசம் இன்றி குழந்தைகள், இளைஞர்கள் என பலருக்கும் தீங்கு விளைவிக்கும்.

  பள்ளி செல்லும் சிறு குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரில் சுமார் 20 சதவீதம் பேருக்கு காணப்படும் சில வகை மனநலப் பிரச்சனைகளால் கவனக்குறைவு, எதிர்மறை மனநிலை, அறிவாற்றல் கோளாறுகள், உற்சாகம் இல்லாமை உள்ளிட்ட பல அறிகுறிகளை எதிர்கொள்கிறார்கள். ஒருகட்டத்தில் இது அவர்களது கல்வி வளர்ச்சியை மோசமாக பாதிக்கின்றன.

  வீட்டில் இருப்பதை விட ஒரு குழந்தை பள்ளியில் அதிக நேரம் இருப்பதால் குழந்தையின் வளர்ச்சியில் பள்ளிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே குழந்தைகளின் நல்ல மன ஆரோக்கியத்திற்கு பெற்றோர்களுடன் இணைந்து பள்ளிகளும் சிறப்பான பங்களிப்பை வழங்க முடியும். சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் மனநல பிரச்சினைகளை தடுப்பதற்கு அவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதற்கு பள்ளிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

  Read More : மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை மற்றும் குழந்தை வளர்ப்புக்கு இந்த 5 விஷயங்களை கடைப்பிடித்தால் போதும்.!

   குழந்தைகளுக்கு ஏற்படும் மனநல நெருக்கடியை தவிர்க்க, மனநலன் சார்ந்த கல்வியை ஆரம்ப பள்ளி ஆண்டுகளிலேயே குழந்தைகளுக்கு தொடங்க வேண்டும் என்பது பல நிபுணர்களின் கருத்தாக உள்ளது. குழந்தைகள் வளர வளர பல சவால்களை எதிர்கொள்கின்றனர். அவர்கள் இயல்பான மனநிலையில் இல்லை என்பதை துவக்கத்திலேயே அடையாளம் கண்டு கொண்டால் சிக்கல்களை தவிர்க்கலாம் என்கிறார் குழந்தைகளுக்கான நரம்பியல் நிபுணர் பூஜா கபூர்.

  இது பற்றி பேசி உள்ள இவர், குழந்தைகளின் மனநிலை சரியில்லை என்பதற்கான முக்கிய அறிகுறி கவலை. மனநிலை மாற்றத்தால் தங்களுக்குள் எழும் கவலைகளை குழந்தைகளுக்கு வெளியே சொல்ல தெரியாது. அவர்கள் மனக் கவலைகளை எதிர்கொண்டுள்ளனர் என்பது அவர்களின் இயல்பான நடத்தையில் ஏற்படும் மாற்றத்தை வைத்து தான் கணிக்க முடியும். ஆசிரியர்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கு துவக்கத்தில் இது மிகவும் நுட்பமாக இருந்தாலும், தொடர்ந்து அவர்களை கண்காணிக்கும் போது பாதிப்பு தெரியவர கூடும்.

  எனவே வெவ்வேறு மனநல கவலைகளின் ஆரம்ப அறிகுறிகள் மற்றும் தீவிர அறிகுறிகள் பற்றி முதலில் ஆசிரியர்களுக்குக் கற்பிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

  குழந்தைகளின் வளர்ச்சியில் பள்ளிகள் முக்கிய பங்கு வகிப்பதால் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி உதவியாளர்கள் பெற்றோருடன் ஒத்திசைந்து செயல்படுவது மிகவும் அவசியமாகிறது என்கிறார் டாக்டர் பூஜா கபூர். ஒரு குழந்தையின் நடத்தையில் மாற்றம் அல்லது மனகவலை இருப்பது தெரிந்தால், வகுப்பில் தனிமையை கொடுக்காமல் அந்தக் குழந்தையை ஆசிரியர் முன்வரிசையில் உட்கார வைத்து அதன் மீது ஒரு கண் வைத்திருக்க வேண்டும் என்கிறார்.

  Read More : குழந்தைகளின் நடத்தையில் ஏற்படும் திடீர் மாற்றங்களை பெற்றோர்கள் ஏன் அலட்சியம் செய்ய கூடாது தெரியுமா?

  ஒரு குழந்தை வகுப்புச் சூழலுக்கு செட்டாக சிறப்புக் கவனிப்பு தேவைப்பட்டால் ஒரு உதவியாளர் அல்லது நிழல் ஆசிரியரை அதற்காக பணியமர்த்தலாம். மேலும் குழந்தைகளிடம் நடந்து கொள்ள வேண்டிய விதம் மற்றும் செய்ய கூடாதவைகளை ஆசிரியராக இருப்பவர் அறிந்து வைத்திருப்பது அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.இதனிடையே பிரபல மனநல மருத்துவர் டாக்டர் திப்தி ரெட்டி கூறுகையில், மோதல் ஒரு பிரச்னையை தீர்க்க உதவாது மாறாக அவற்றை வேறு முறைகளில் கையாண்டு தீர்வு காண்பது சிறந்தது என்பதை சிறு குழந்தைகளாக இருக்கும் போதே மாணவர்கள் புரிந்து கொள்ள ஆசிரியர்கள் உதவ வலியுறுத்தி உள்ளார்.

  ஆரோக்கிய உணவுகளின் முக்கியத்துவம், கவலை மற்றும் மன அழுத்தம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை மாணவர்களின் மனதில் ஆசிரியர்கள் பதிய வைக்க வேண்டும். மனநலத்தின் முக்கியத்துவம் பற்றி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அதிகம் கற்பிக்க வேண்டும். ஆசிரியர்களால் எல்லா மாணவர்களையும் ஒரே நேரத்தில் கவனிக்க முடியாது என்பதால் பள்ளிகளில் ஒரு தகுதிவாய்ந்த உளவியல் நிபுணர் பணியமர்த்தப்படுவது சிறப்பான முடிவாக இருக்கும் என்று கூறினார்.

  ஒரு குறுநடை போடும் குழந்தையின் மன ஆரோக்கியம் எதிர்காலத்தில் ஒட்டுமொத சமுதாயத்தின் மீதும் தாக்கம் ஏற்படுத்தும் என்பதால் மனநலம் சார்ந்த பாடத்திட்டத்தை கற்பிப்பது, குழந்தைகளின் மனநலத் தேவைகளை நிவர்த்தி செய்ய பெற்றோர் - ஆசிரியர்கள் ஒன்றிணைவது கட்டாயமாக பார்க்கப்படுகிறது.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Kids Care, Kids Health, Parenting