அலோபேசியா அரேட்டா நோய் என்பது வெகுஜன மக்களை பாதிக்க கூடியது அல்ல என்பதால், நம்மில் பலருக்கு அதுகுறித்து அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உங்களின் நோய் எதிர்ப்பு கட்டமைப்பில் உள்ள செல்கள் என்பது மயிர் கால்கள் மீது தாக்குதல் நடத்தும். அதன் எதிரொலியாக முடி கொத்து, கொத்தாக கொட்ட தொடங்கும். இதன் எதிரொலியாக தலையில் ஆங்காங்கே வழுக்கை போன்ற வெற்றிடம் உருவாகும்.
அண்மையில் நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இந்த பாதிப்பு குறித்து பலரும் தகவல்களை தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பாக அமைந்தது. அதாவது, ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் குறித்து, நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கிறிஸ் ராக் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அலோபேசியா அரேட்டா நோயால் பாதிக்கப்பட்டுள்ள வில் ஸ்மித்தின் மனைவி குறித்து கிண்டலாக பேசினார் கிறிஸ் ராக். இதனால், கோபம் அடைந்த வில் ஸ்மித், மேடை ஏறிச் சென்று கிறிஸ் ராக்கின் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டார்.
இன்டர்நெட் உலகில், இந்த சம்பவம் தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. பெரும்பாலும் வில் ஸ்மித் செய்த காரியம் சரி தான் என்று வாதிட்டு வருகின்றனர். ஒரு சிலர் மட்டுமே, கிறிஸ் ராக் தவறு செய்திருந்தாலும் வில் ஸ்மித் பொறுமையை கடைப்பிடித்திருக்க வேண்டும் என்று சிலர் கூறி வருகின்றனர். அதே சமயம், அலோபேசியா அரேட்டா நோய் குறித்த விழிப்புணர்வு தகவல்களையும் பலர் பகிர்ந்து வருகின்றனர். அதுகுறித்துஇங்கு காண்போம்.
மனம் திறந்த சமீரா ரெட்டி :
உடல் நலன் மற்றும் மனநலன் குறித்து எப்போதும் பாஸிட்டிவ் எனர்ஜி கொண்டவராக அறியப்படும் நடிகை சமீரா ரெட்டி, மக்கள் அனைவரும் முதலில் தன்னைத் தானே நேசிக்க வேண்டும் என்று வலியுறுத்தக் கூடியவர். பார்ப்பதற்கு என்றென்றும் அழகான தோற்றத்தில் காட்சியளிக்கும் சமீரா ரெட்டிக்கும் கூட ஒரு காலத்தில் அலோபேசியா அரேட்டா நோய் இருந்தது என்று சொன்னால், அதை நம்ப முடிகிறதா?. ஆம், இது உண்மை தான். அதை இன்ஸ்டாகிராமில் அவரே நினைவுகூர்ந்துள்ளார்.
வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பின்கெட்டை பாதித்த அலோபேசியா நோய் பற்றி தெரியுமா..? முடி இழப்பு உண்டாக என்ன காரணம்..?
குறிப்பாக, இந்த நோய்க்கு எதிராக தற்போது தான் மேற்கொண்டு வரும் முன்னெச்சரிக்க்கை நடவடிக்கைகள் குறித்தும் அவர் விவரித்துள்ளார். குறிப்பாக, தமக்கு இந்த குறைபாடு இருப்பதை முதன் முதலில், கணவர் அக்ஷய் தான் கண்டறிந்தார் என்றும், அதற்குப் பிறகு சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் கூறியுள்ளார் சமீரா ரெட்டி.
இதுகுறித்த சமீராவின் இன்ஸ்டாகிராம் பதிவில், “எனது தலையின் பின்பகுதியில் 2 இன்ச் அளவுக்கு வழுக்கை தென்படுவதை எனது கணவர் அக்ஷய் கடந்த 2016ஆம் ஆண்டில் பார்த்தார். அதற்குப் பிறகு ஒரு மாதத்தில் மேலும் இரண்டு இடங்களில் அதேபோன்ற வழுக்கை தென்பட்டது. உண்மையிலேயே இந்த பிரச்சினையை எதிர்கொள்வது சிரமமாக இருந்தது.
இந்த நோய் கொண்டவர்களுக்கு உடல் ரீதியாக வேறு எந்த தொந்தரவும் இருக்காது. அதே சமயம், உளப்பூர்வமாக இதை ஏற்றுக் கொள்வது சற்று சிக்கலான காரியம். சிலருக்கு இந்த நோயை எதிர்கொள்ளவும், முடி உதிர்வை தடுக்கவும் சிகிச்சை தேவைப்படலாம். அதே சமயம், கார்டிகாஸ்டெராய்ட்ஸ் என்ற ஊசியை செலுத்திக் கொண்டால் இது சரியாகிவிடும் என்று மருத்துவர் எனக்கு அறிவுறுத்தினார். அதன்படி, முடி மெல்ல, மெல்ல வளர்ந்து விட்டது’’ என்று கூறியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.