ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

சமந்தாவிற்கு ஏற்பட்ட மயோசிடிஸ் நோயின் அறிகுறிகள் என்ன..? யாரையெல்லாம் பாதிக்கும்..?

சமந்தாவிற்கு ஏற்பட்ட மயோசிடிஸ் நோயின் அறிகுறிகள் என்ன..? யாரையெல்லாம் பாதிக்கும்..?

சமந்தாவிற்கு ஏற்பட்ட மயோசிடிஸ் நோயின் அறிகுறிகள்

சமந்தாவிற்கு ஏற்பட்ட மயோசிடிஸ் நோயின் அறிகுறிகள்

மயோசிடிஸ் நோய் ஏற்பட உறுதியான காரணம் என்ன என்பது குறித்து விஞ்ஞானிகளால் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்றாலும், சுற்றுச்சூழல் மற்றும் மரபணு இந்நோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணிகளாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

திரையுலகில் நட்சத்திரமாக மின்னும் நடிகர், நடிகைகள் பெரும்பாலும் தங்களது உடல் நல பிரச்சனைகள் குறித்து ஓப்பனாக பேசுவது கிடையாது. ஆனால் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா தனக்கு ஏற்பட்டுள்ள நோய் குறித்தும், அதற்காக சிகிச்சை பெற்று வருவதையும் சமீபத்தில் பகிரங்கமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார். மேலும் தனக்கு என்ன மாதிரியான நோய் என்பது குறித்தும் விளக்கம் அளித்திருந்தார்.

சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “சில மாதங்களுக்கு முன்பு எனக்கு மயோசிடிஸ் எனப்படும் (தசை அழற்சி) நோயால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. நோயில் இருந்து குணமடைந்த பிறகு, இதைப் பற்றி வெளியே சொல்லலாம் என எதிர்பார்த்தேன். ஆனால் நான் எதிர்பார்த்ததை விட நோயில் இருந்து குணம் பெற அதிக நாட்கள் தேவைப்படுகிறது. எப்போதும் தைரியத்துடன் இருக்க வேண்டியது இல்லை என்பதை உணர்ந்தேன். இந்த பாதிப்பை ஏற்றுக்கொள்ள மிகவும் கடினமாக உள்ளது. நான் விரைவில் குணமடைவேன் என மருத்துவர்கள் நம்பிக்கை அளித்துள்ளனர்.

உணர்ச்சி ரீதியாக, உடல் ரீதியாக என நல்ல நாட்கள், கெட்ட நாட்கள் இரண்டையும் கடந்துள்ளேன். இந்த நாளை என்னால் கையாள முடியாது என நினைத்தேன். ஆனால் அதுவும் கடந்து சென்றுகொண்டிருக்கிறது. நான் குணமடைவதற்கான நாளை நெருங்கிவிட்டேன் என்று தான் நினைத்துக்கொண்டிருக்கிறேன்” என பதிவிட்டிருந்தார்.

சமந்தா விரைவில் பூரண குணமடைய வேண்டும் என அவருடைய ரசிகர்கள், திரையுலகினர் பிரார்த்தனை செய்து வரும் நிலையில், மயோசிடிஸ் என்பது என்ன மாதிரியான நோய், அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என பல கேள்விகள் மக்களிடையே எழுந்துள்ளது.

மயோசிடிஸ் எனப்படும் தசை அழற்சி நோயின் அறிகுறிகள் என்ன, அது யாருக்கெல்லாம் வரக்கூடும், அதற்கான சிகிச்சை முறைகள் என்னென்ன என விரிவாக பார்க்கலாம்...

மயோசிடிஸ் என்றால் என்ன?

மயோசிடிஸ் எனப்படும் தசை அழற்சி நோய் என்பது, தசைகளில் ஏற்படும் வீக்கம் ஆகும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட நபரின் உடல் தசைகள் மீது நோயெதிர்ப்பு அமைப்பு நடத்தும் தாக்குலால் தசைகள் பாதிப்படையும். இது நாட்கள் செல்ல செல்ல தசைகளை வீக்கமடைய வைக்கிறது. இந்த வீக்கமானது கடைசியில் தசைகளை பலவீனமாக்குகிறது. மயோசிடிஸ் என்பது எலும்புகளை இணைக்கக்கூடிய தசைகளை தாக்கும் மயோபதி நோயாகும். இது பொதுவாக கைகள் மற்றும் தோள்கள், கால்கள், இடுப்பு, வயிறு மற்றும் முதுகுத்தண்டில் உள்ள தசைகளை பாதிக்கிறது.

மயோசிடிஸ் ஏற்பட காரணங்கள்:

மயோசிடிஸ் நோய் ஏற்பட உறுதியான காரணம் என்ன என்பது குறித்து விஞ்ஞானிகளால் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்றாலும், சுற்றுச்சூழல் மற்றும் மரபணு இந்நோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணிகளாக இருக்கலாம் என கருதப்படுகிறது. அதன்படி, வைரஸ்கள், பாக்டீரியாக்கள், புற ஊதா கதிர்வீச்சு, புகைபிடித்தல், போதை மருந்துகள், ஊட்டச்சத்து சப்ளிமெண்ட்ஸ், தூசி, வாயு அல்லது புகை ஆகியவையாக இருக்கலாம்.

Also Read : சர்க்கரை நோயாளிகள் டெங்குவின் தீவிர பாதிப்புகளை எதிர்கொள்வது எப்படி..?

மயோசிடிஸ் வகைகள் மற்றும் அறிகுறிகள்:

டெர்மடோ-மயோசிடிஸ், இன்க்லூஷன்-பாடி மயோசிடிஸ், ஜுவனைல் மயோசிடிஸ், பாலிமயோசிடிஸ் மற்றும் டாக்ஸிக் மயோசிடிஸ் என 5 வகைகள் உள்ளன.

1. டெர்மடோ-மயோசிடிஸ்:

தோல் சம்பந்தப்பட்ட டெர்மடோ-மயோசிடிஸ் ஆனது, முகம், மார்பு, கழுத்து மற்றும் முதுகில் ஊதா நிறத்திலான தடிப்புகளை ஏற்படுத்தக்கூடியது

அறிகுறிகள்:

- கரடுமுரடான தோல்

- சோர்வு

- தசை பலவீனம்

- தசை வலி

- எடை இழப்பு

- ஒழுங்கற்ற இதயத் துடிப்பு

2. இன்க்லூஷன்-பாடி மயோசிடிஸ்:

தசைகளை பாதிக்கக்கூடிய இன்க்லூஷன்-பாடி மயோசிடிஸ், பெண்களை விட அதிகமான ஆண்களை பாதிக்கிறது மற்றும் முதன்மையாக 50 வயதிற்கு மேற்பட்டவர்களை பாதிக்கிறது. முன்னங்கை, முழங்கால், தொடை தசைகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது.

அறிகுறிகள்:

- தசை பலவீனம்

- உடல் சமநிலை இழப்பு

- தசைபிடிப்பு

- தசை வலி

3. ஜுவனைல் மயோசிடிஸ்:

இந்த வகை மயோசிடிஸ் குழந்தைகளையும், ஆண்களை விட பெண்களை அதிக அளவில் பாதிக்கிறது.

- சிவப்பு மற்றும் ஊதா நிறத்திலான தடிப்புகள்

- சோர்வு, மனநிலை மாற்றம்

- வயிற்று வலி

- உட்கார்ந்து எழுவதில் சிரமம்

- தசை பலவீனம்

4. பாலிமயோசிடிஸ் மயோசிடிஸ்:

இந்த வகை நோயானது, உடற்பகுதியில் உள்ள தசைகளை தாக்கக்கூடியது.

அறிகுறிகள்:

- தசை பலவீனம் மற்றும் வலி

- வீக்கம்

- உடலை சமநிலைப்படுத்துவதில் சிக்கல்

- வறட்டு இருமல்

- கைகளில் உள்ள தோல் தடித்து போதல்

- எடை இழப்பு

5. டாக்ஸிக் மயோசிடிஸ்:

டாக்ஸிக் மயோசிடிஸ் என்பது மருந்துகள் அல்லது ரசாயனங்களால் ஏற்படக்கூடியதாக கருதப்படுகிறது.

அறிகுறிகள்:

- வலியுடன் அல்லது வலி இல்லாமல் தசை பலவீனத்தை உணர்தல்

- நடந்த பின்னர் அல்லது நின்ற பின்னர் சோர்வாக உணர்வது

- சரியாக நடக்க முடியாமல் தடுமாறுவது

- படிக்கட்டுகளில் ஏறுவதில் சிரமம்

- வீக்கம் அல்லது சுவாசிப்பதில் சிரமம்

சிகிச்சை முறைகள்:

மயோசிடிஸைத் தடுக்க எந்த வழியும் இல்லை. அதேபோல் அதனை முழுமையாக குணப்படுத்தவும் எந்தவித சிகிச்சையும் இல்லை எனக்கூறப்படுகிறது. மயோசிடிஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அவர்களின் அன்றாட அறிகுறிகளில் இருந்து காப்பதற்கான சிகிச்சை மட்டுமே அளிக்கப்படுகிறது. மயோசிடிஸால் ஏற்படும் தசை வீக்கம் குணமடையும் வரை மருத்துவர்கள் அறிகுறிகளுக்கான சிகிச்சைகள மேற்கொள்கின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் வலி மற்றும் விரைப்புத்தன்மையைக் குறைக்க உதவும் பயிற்சிகள் மருத்துவரால் பரிந்துரைக்கப்படுகிறது.

Published by:Sivaranjani E
First published:

Tags: Actress Samantha, Health issues