40 வயது கடந்த பெண்களை எச்சரிக்கும் மருத்துவர்கள்..! இதய பாதிப்புகள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக தகவல்

மாதிரி படம்

40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் ஆண்டுக்கு ஒருமுறை இதயம் மட்டுமின்றி முழு உடல் உறுப்புகளையும் பரிசோதிக்கும் வகையில் மாஸ்டர் செக்-அப் செய்து கொள்ள வேண்டும்

  • Share this:
இதயம் தொடர்பான நோய்கள் என்பது இன்று சகஜமான ஒன்றாகி விட்டது. இளைஞர்கள் கூட இப்போது இதய நோய்களுக்கு சிகிச்சை எடுத்து கொள்வதை பார்க்கிறோம். இதயம் சார்ந்த பிரச்சனைகள் வரும் வரை அதைப்பற்றி பெரும்பாலானோர் நினைப்பதில்லை. நம் உடலின் மற்ற தசைகளை போன்றது இதயம். ஆரோக்கியமான இதயத்திற்கு ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த ரத்தம் அடிப்படைத் தேவையாக இருக்கிறது. இதனிடையே சமீப காலங்களில் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட பெரிய அளவிலான மாற்றங்கள் காரணமாக, பெண்களுக்கும் இதய நோய் பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன.

பருவம் அடைவது துவங்கி மெனோபாஸ் வரை ஒவ்வொரு பருவத்திலும் பெண்களின் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். பல மாற்றங்களுக்கு உள்ளாகும் பெண்கள், தங்களது உடல்நலனில் அக்கறையாக உள்ளார்களா என்பது சந்தேகமே. ஏனென்றால் கடந்த சில ஆண்டுகளாக பெண்கள் இதயம் சார்ந்த நோய்களால் பாதிக்கப்படுவது அதிகரித்து கொண்டே வருவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

சாதாரணமாக பெண்கள் தங்களது உடல் ஆரோக்கியம் மற்றும் நோய் பாதிப்புகள் குறித்து கவலைகள் கொண்டிருந்தாலும், 40 வயதைக் கடக்கும் போது தான் பெண்கள் தங்கள் உடல்நலன் மீது அதிகம் பயம் கொள்வதாக சொல்கின்றன சில ஆய்வுகள். பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி நிறைவடையும் மெனோபாஸ் காலத்தை நெருங்கும் போது தன் உடல் பற்றிய தெளிவு இருந்தால் மட்டுமே அந்தக் காலத்தை அமைதியாக, அச்சமின்றி பெண்களால் கடக்க முடியும்.பொதுவாக, மாதவிடாய் நின்ற பிறகு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அளவு குறையும் பெண்களுக்கு கரோனரி இதய நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக நம்பப்படுகிறது.எனினும் தற்போது 50 வயதை கடந்தவர்கள் மட்டும்மல்ல 40 வயதை கடந்த பெண்கள் கூட இதய நோயால் அதிகம் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர். தற்போதெல்லாம் மாதவிடாய் முழுவதும் நிற்பதற்கு முன்பே நீரிழிவு, உடல் பருமன், மன அழுத்தம் மற்றும் குறைந்த உடல் செயல்பாடு காரணமாக ஆண்களை போலவே பெண்களுக்கும் இதய நோய் ஏற்படும் ஆபத்து அதிகரித்துள்ளது.

பெண்கள் தங்கள் பிறப்புறுப்பை சுகாதாரமாக வைத்துக்கொள்வது எப்படி?

இதய நோய் விழிப்புணர்வு இல்லாத நிலையில், கடும் அறிகுறிகள் வெளிப்படையாக தெரிந்த பின்னர் தான் பெண்கள் மருத்துவமனைக்கு வருகிறார்கள். இது அவர்களின் சிகிச்சையை பாதிக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கூடுதலாக பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பி.சி.ஓ.எஸ்) போன்ற சில நோய்களும் பெண்களுக்கு மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கின்றன. இத்தகையை சூழலில் பெண்கள் தங்கள் உடல் காட்டும் அறிகுறிகளை பற்றி அறிந்திருக்க வேண்டும்.இதயத்தில் பிரச்சனை என்றாலே திறந்த இதய அறுவை சிகிச்சை செய்து விடுவார்களோ என்ற பயம் பெண்களுக்கு இருக்கிறது. வடிகுழாய் அடிப்படையிலான சிகிச்சை(catheter based treatment) பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பல புதிய தொழில்நுட்பங்கள் உள்ள இந்த காலகட்டத்தில் இதய சம்பந்தப்பட்ட நோய்களுக்கான சிகிச்சை பெண்களுக்கு மிகவும் சிறப்பான ஒன்றாக இருக்கும் என்று கூறுகின்றனர் மருத்துவர்கள்.

40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் தங்கள் உடல் நலனில் எப்போதும் விழிப்பாக இருக்க வேண்டும். உடலில் வித்தியாசமான அறிகுறிகள் அல்லது மாற்றங்கள் ஏற்பட்டால் தயங்காமல் மருத்துவமனை சென்று பரிசோதித்து கொள்ள வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை இதயம் மட்டுமின்றி முழு உடல் உறுப்புகளையும் பரிசோதிக்கும் வகையில் மாஸ்டர் செக்-அப் செய்து கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

 
Published by:Sivaranjani E
First published: