பெரும்பாலும் வயதானவர்கள் கால் வீக்கத்தால் அவதிப்படுவதை பார்த்திருப்போம். இது வலியில்லாத வீக்கம் என்றாலும் அலட்சியமாக விடுவதும் ஆபத்து. இதற்காக அடிக்கடி ஒத்தடம் கொடுப்பது, எண்ணெய் தடவுவது என செய்தாலும் குணமாகாது. இதற்கு அவ்வபோது சிகிச்சைகள் கொடுத்துக்கொண்டே இருந்தால் மட்டுமே கட்டுப்பாட்டில் இருக்கும். மற்றொரு பக்கம் கர்ப்பிணிகளுக்கும் அடிக்கடி கால் வீக்கம் ஏற்படும். இப்படி கால் வீக்கம் உண்டாக என்ன காரணம்..? இதை எப்படி கட்டுக்குள் வைத்திருப்பது என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
கால் வீக்கத்திற்கு என்ன காரணம்..?
கால், கணுக்கால், பாதம் வீக்கம் என்பது வலி இல்லாத பொதுவான பிரச்சனையாகும். குறிப்பாக வயதானவர்களிடையே பெரும்பாலும் ஏற்படக்கூடியது. கால்களில் அளவுக்கு அதிகமாக நீர் கோர்த்துக்கொள்வதாலேயே கால் வீக்கம் ஏற்படுகிறது. இப்படி நீர் கோர்த்து கால் வீக்கம் ஏற்படுவதற்கு ’எடிமா’ (edema) என்று பெயர்.
இது இரண்டு கால்களையும் பாதிக்கும். கால்கள் மட்டுமன்றி தொடை, கணுக்கால்களிலும் நீர் கோர்த்துக்கொண்டு வீக்கம் தரும். இருப்பினும் ஈர்ப்பு விசை காரணமாக கீழ் நோக்கிய கால் மற்றும் பாதம், கணுக்காலில் வீக்கம் அதிகமாக தென்படுகிறது.
கால் வீக்கம் காரணங்கள் :
உடல் பருமன் , காலில் இரத்தம் உறைதல் பிரச்சனை, வயது முதிர்ச்சி, கால்களில் தொற்று, கால்களில் இரத்த ஓட்டம் சீராக இல்லை, காலில் காயம், காலில் அறுவை சிகிச்சை போன்ற காரணங்கள் இருப்பின் கால் வீக்கம் ஏற்படும். இடுப்பு அறுவை சிகிச்சை, புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்திருந்தாலும் கால் வீக்கம் ஏற்படும்.
இது தவிர நீண்ட நேரம் கால்களை தொங்கவிட்ட படி அமர்ந்திருந்தாலோ அல்லது நீண்ட நேரம் பயணம் செய்தாலும் கால் வீக்கம் ஏற்படும். நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தாலும் கால் வீக்கம் ஏற்படும்.
Also Read : உடல் பருமனாக இருப்பது கர்ப்பத்தை பாதிக்குமா..? மருத்துவர்களின் பதில்..!
பெண்கள் மாதவிடாய் பிரச்சனை காரணமாக ஈஸ்ட்ரோஜன் மாத்திரைகள் உட்கொண்டிருந்தாலும் கால் வீக்கம் ஏற்படும். கர்ப்பிணிகளுக்கு இரத்த ஓட்டம் சீரக இல்லை என்றாலும் கால் வீங்கும். உயர் இரத்த அழுத்தம் இருந்தாலும் கால் வீங்கும்.
நீங்கள் ஏதேனும் சிகிச்சை அல்லது உடல் நலப் பிரச்சனைகளுக்காக எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள் கூட கால் வீக்கத்திற்கு காரணாக இருக்கலாம்.
சில நேரங்களில் உங்களுக்கு தீவிர பிரச்சனைகள் இருந்தாலும் கால் வீக்கம் ஏற்படலாம். அவை..
-இதய செயலிழப்பு
-சிறுநீரக செயலிழப்பு
-கல்லீரல் செயலிழப்பு
ஆகிய பாதிப்புகள் இருந்தாலும் அதிகமான நீர் தேக்கம் காரணமாக கால்களில் வீக்கம் ஏற்படும்.
கால் வீக்கத்தை எவ்வாறு கட்டுப்பாட்டில் வைப்பது..?
நீங்கள் படுக்கும்போது காலுக்கு தலையணை வைத்துக்கொள்வது கால் வீக்கத்தை கட்டுப்படுத்தும்.
காலுக்கு சீரான இரத்த ஓட்டம் கிடைக்க மிதமான உடற்பயிற்சி செய்வது நல்லது. இதனால் தேங்கும் நீர் அழுத்தம் பெற்று மேல் நோக்கி வெளியேறும்.
உப்பு குறைவாக உட்கொள்வது நல்லது அல்லது மருத்துவர் ஆலோசனை படி உப்பை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. இதனால் காலில் நீர் கோர்த்துக்கொள்வது குறையும்.
பயணம் செய்யும்போது ஓய்வு எடுத்துக்கொண்டு சிறிது நேரம் நிற்பது , நடப்பது என செய்யலாம். அலுவலகத்தில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்வோரும் இதை பின்பற்றலாம்.
கால்களை இறுக்கும் ஆடைகளை தவிர்ப்பது நல்லது. காற்றோட்டமான லூஸான ஆடைகளை அணியுங்கள்.
உடல் எடையை குறைப்பது அவசியம்.
எப்போது மருத்துவரை அணுக வேண்டும்..?
கால் வீக்கத்தால் மூச்சுத் திணறல், நெஞ்சு வலி, இறுக்கமான உணர்வு , காய்ச்சல், கால்களில் சூடான அல்லது வெதுவெதுப்பான உணர்வு, கால்கள் வீங்கி சிவந்து காணப்படுதல் போன்றவை இருப்பின் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Home remedies, Leg Swelling