Home /News /lifestyle /

வெள்ளைப்படுதல் பிரச்சனையை சமாளிப்பது எப்படி? மருத்துவர் ஆலோசனை

வெள்ளைப்படுதல் பிரச்சனையை சமாளிப்பது எப்படி? மருத்துவர் ஆலோசனை

பெண்குயின் கார்னர்

பெண்குயின் கார்னர்

பெண்குயின் கார்னர் 24 : சில சமயங்களில் வெள்ளைப்படுதல் அதிகமாகவும் ,சிலசமயங்களில் குறைவாகவும் இருப்பதை உணரலாம். இது இயற்கையாகவே பிறப்பு பாதையை சுத்தமாக வைத்துக் கொள்வதற்காக உள்ள சுரப்பாகவும் கருதலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
ராஜி அன்று பணி முடிந்ததும் மருத்துவமனைக்கு வந்திருந்தார். உடன் அவரது தாயும் இருந்தார். ராஜியின் தாய் மிகவும் உற்சாகமாக காணப்பட்டார்." டாக்டர்!! இவளுக்கு ஒரு பிரச்சனை இருக்கு! அது பல மாதங்களாக இருந்தாலும் இப்ப அதை சரி செய்துக்கணும்னு தோணுது. திருமணத்திற்காக பாத்துக்கிட்டு இருக்கோம். கூடிய விரைவில் நிச்சயம் ஆகிடும்" என்று நிறுத்தினார். நான் ராஜியை ஏறிட்டேன்." ராஜி! என்ன பிரச்சனைன்னு சொல்லுங்க!!" என்றேன்.

ராஜி "டாக்டர்! ஒன்னும் பெரிய பிரச்சினையில்ல. ஒயிட் டிஸ்சார்ஜ் ரொம்ப இருக்கு. குறிப்பா பாத்தீங்கன்னா, பீரியட்ஸ்க்கு முன்னாடி ரொம்ப ஜாஸ்தி ஆயிடுது. அந்த சமயத்துல எனக்கு ரொம்ப அசௌகரியமா இருக்கும். சில சமயம் அரிப்பு கூட இருக்கு. இதுக்கு ஏதாவது மெடிசன் எடுக்கணுமா? என்னன்னு தெரியல. அதான் உங்க கிட்ட கேட்கலாம்னு நினைச்சேன். " என்றார்.

என் ஆலோசனை:

வெள்ளைப்படுதல் பிரச்சினை பல பெண்களுக்கும் உள்ள பொதுவான பிரச்சனை. கருப்பை வாயிலிருந்து சுரக்கும் நீர் தான் வெள்ளைப்படுதல் ஆக வெளியே தெரிகிறது. ஒரு பெண்ணின் மாதாந்திர சுழற்சியில் இந்த வெள்ளைப்படுதலும் மாறிக் கொண்டே வரும். வெள்ளைப்படுதல் மாதவிடாய்க்கு பிறகு உள்ள முதல் ஒரு வாரத்திற்கு லேசாக இருக்கும் . பிறகு படிப்படியாக அதிகரித்து இரண்டாவது வாரம் முழுவதும் கண்ணாடி போன்ற திரவ சுரப்பு இருக்கும். மூன்றாவது வாரத்திலிருந்து இது கெட்டிப்பட்டு வெள்ளையாக மாற ஆரம்பிக்கும். நான்காவது வாரத்தில் வெள்ளையாக அதிகமான சுரப்பு இருக்கும். பிறகு அடுத்த மாதத்திற்குரிய மாதவிடாய் வரும். இந்த சுழற்சி எல்லா பெண்களுக்கும் பொதுவானது .

அதனால்தான் சில சமயங்களில் வெள்ளைப்படுதல் அதிகமாகவும் ,சிலசமயங்களில் குறைவாகவும் இருப்பதை உணரலாம். இது இயற்கையாகவே பிறப்பு பாதையை சுத்தமாக வைத்துக் கொள்வதற்காக உள்ள சுரப்பாகவும் கருதலாம். இது ஒரு நோயல்ல .ஆனால் சில சமயங்களில் இது மஞ்சள் நிறமாகவோ, பச்சை நிறமாகவோ கூடுதலான நாற்றத்துடன் , தயிர் போன்று திரித் திரியாக இருந்தாலோ ஏதேனும் கிருமித் தொற்று ஏற்பட்டு இருக்கலாம். அப்படி இருப்பின் அதற்குரிய சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். பொதுவாக திருமணத்திற்கு முன்பு இதுபோன்ற பிரச்சனைகள் இறுக்கமாக காற்றோட்டமில்லாத ஆடை அணிபவர்களுக்கு அதிகமாக வரலாம்.வயிற்றில் குடல் புழுக்கள் இருந்தாலும் இந்த பிரச்சனை ஏற்படலாம்.
சுரப்பு அதிகமாக இருக்கும் பொழுது அரிப்பும் அசௌகரியமும் உண்டாகிறது.

திருமணத்திற்கு முன்பு இந்த பிரச்சினை ஏற்படும் பொழுது குடற்புழு நீக்க மாத்திரை, தொற்று நீக்கும் மாத்திரை இவற்றோடு வெளியே பூசிக்கொள்ளும் ஆயின்மென்ட் இவையே போதுமானதாக இருக்கும். வெள்ளைப்படுதல் அதிகமாக இருக்கும்பொழுது பாண்டி லைனர்ஸ் எனப்படும் சிறிய பேடுகளை உபயோகப்படுத்தலாம். அரிப்பு அதிகமாக இருக்கு இருக்கும்பொழுது அரிப்பை குறைப்பதற்கான மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்.

பெண்குயின் கார்னர் 23 : என்ன செய்தாலும் அசிடிட்டி பிரச்சினை தீரலையா..? எதிர்கால சிக்கல்களை தவிர்க்க ஆலோசனை..!

இந்த பிரச்சினை இருப்பவர்கள் முடிந்தவரை காற்றோட்டம் ஏற்படக்கூடிய ஸ்கர்ட் போன்ற உடைகளை அணிவது சரியாக இருக்கும். மலம் கழித்துவிட்டு சுத்தம் செய்யும் பொழுது முன் பக்கத்திலிருந்து நீரை ஊற்றி சுத்தம் செய்வது நல்லது. திருமணமானவர்களுக்கு பிறப்பு பாதையின் உள்ளே வைக்கக்கூடிய மருந்துகளை பரிந்துரைப்பதுண்டு.மற்றபடி மார்க்கெட்டில் இருக்கும் பல்வேறு விதமான வாசனை மிகுந்த வாஷ்களை நான் யாருக்கும் சிபாரிசு செய்வதில்லை.
ராஜிக்கு தேவையான மாத்திரைகளை எழுதிக் கொடுத்தேன் உபயோகப்படுத்த தொடங்கினார். ஒரு வாரத்திலேயே நல்ல முன்னேற்றம் இருப்பதாக குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.

மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மாவை தொடர்பு கொள்ள : doctorjsharma@gmail.com
Published by:Sivaranjani E
First published:

Tags: Vaginal Discharge, பெண்குயின் கார்னர்

அடுத்த செய்தி