கொரோனா பெருந்தொற்று சில மாதங்களாக குறைந்த நிலையில் தற்போது அதிக அளவில் பரவி வருகிறது. இதை தடுப்பதற்காக அரசு தரப்பில் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளும் எந்த அளவிற்கு மோசமானதாக இருந்ததோ அதே அளவிற்கு இந்த ஆண்டும் கொரோனா பரவலின் தாக்கம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்குக் காரணம் தற்போது பரவி வரும் ஓமைக்ரான் வகை வைரஸ் தான். இதன் பரவல் வேகம் அதிகமாக உள்ளது என்பதால், பலரை இந்த தொற்று தாக்கி வருகிறது.
இதனால் எல்லா நாடுகளிலும் முன்பை போன்று மீண்டும் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. சில நாடுகளில் வெளிநாட்டு பயணிகளை உள்ளே அனுமதிப்பதும் இல்லை. அந்த அளவிற்கு இதன் பரவல் அதிகரித்து வருகிறது. டெல்டா வகை கொரோனாவை போன்று இந்த வகை ஓமைக்ரான் எந்த அளவிற்கு உயிர் சேதகங்களை ஏற்படுத்தும் என்பதை பற்றி இன்னும் சரிவர தெரியவில்லை. எனினும், இதன் தொற்று பரவல் வேகம் டெல்டா வகையை விடவும் பல மடங்கு அதிகமாக உள்ளது.
தடுப்பூசி போட்டு கொண்டவர்களை இந்த வைரஸ் பெரிய அளவில் பாதிக்கவில்லை என்று இதுவரை கிடைத்த தரவுகளின் படி தெரிய வந்துள்ளது. மேலும், பூஸ்டர் ஊசிகளும் சிறப்பாக செயல்படுவதாக கூறுகின்றனர். கடந்த ஆண்டுகளில் கொரோனா பாதிப்பானது வயது முதியோர் மற்றும் ஏற்கனவே சில நோய்களால் பாதிக்கப்பட்டோரை அதிகம் தாக்கியது. ஆனால், இந்த வகை ஓமைக்ரான் வைரஸ் 18 வயதுக்கும் கீழுள்ளவர்களையும், கர்ப்பிணி பெண்களையும், தாய்மார்களையும் மற்றும் ஏற்கனவே சில நோய்கள் கொண்டவர்களையும் பாதிப்பதாகக் கூறப்படுகிறது.
கடந்த கொரோனா தாக்குதலுக்கு பிறகு வயதானவர்கள் அதிக அளவில் தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர். எனவே அவர்களை இம்முறை பெரிய அளவில் தாக்குவதற்கு வாய்ப்பு மிக குறைவு. மேலும், கர்ப்பிணி பெண்கள் மற்றும் சமீபத்தில் குழந்தை பெற்ற தாய்மார்கள் பலர் தடுப்பூசியை இன்னும் போட்டு கொள்ளவில்லை. எனவே, இவர்கள் தடுப்பூசி போடுவது மிக அவசியமானதாக உள்ளது. இதனால் குழந்தைக்கும் கொரோனா பாதிப்பு வராமல் தடுக்க முடியும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தொற்று அதிகரிக்கும் சமயத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனமாக்கும் இந்த 3 செயல்களை தவிருங்கள்...
கொரோனா மூன்றாவது அலை தடுப்பூசி போடப்படாத கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கும் ஒரு புதிய ஆபத்தை ஏற்படுத்த உள்ளது என இதுவரை கிடைத்த தரவுகளில் மூலம் அறியப்பட்டுள்ளது.
கடந்த வாரம், லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனையின் (LNJP) தலைமை மருத்துவரான டாக்டர் சுரேஷ் குமாரிடம் இது குறித்து கேட்டபோது, “கடந்த சில நாட்களில், 20 கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மிகவும் லேசான அறிகுறிகளைக் கொண்டிருந்தனர், ஆனால் அவை ஓமைக்ரான் வகை பாதிப்பு இல்லை" என்று குறிப்பிட்டிருந்தார்.
மூன்றாம் அலையை சமாளிக்க எல்லோரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். மற்றும் வெளியில் செல்லும்போது மாஸ்க் அவசியம் பயன்படுத்த வேண்டும். இதுவே தற்போதைய தீர்வாக உள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.