Home /News /lifestyle /

மாதவிடாய் நின்ற பின்பு பெண்களே உஷார்... 51 வயதுபெண்ணின் வயிற்றில் இருந்த 20 கிலோ கட்டி அகற்றம்..!

மாதவிடாய் நின்ற பின்பு பெண்களே உஷார்... 51 வயதுபெண்ணின் வயிற்றில் இருந்த 20 கிலோ கட்டி அகற்றம்..!

பெண்களுக்கு 45 வயதிற்கு மேல் மாதவிடாய் சுழற்சிகள் நின்ற பிறகு சினைப்பை கட்டிகள் உருவாகும் வாய்ப்பு உண்டு.

  • News18
  • Last Updated :
சென்னை அரசு தாய் சேய் நல மருத்துவமனையில்  குரோம்பேட்டையை சேர்ந்த 51 வயது பெண்ணின் வயிற்றில் இருந்த 20 கிலோ சினைப்பை கட்டியை வெற்றிகரமாக அகற்றி உள்ளனர். சினைப்பை கட்டி குறித்து பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் எச்சரித்து உள்ளனர்.

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த ரதி என்ற 51 வயது பெண், இயல்புக்கு மாறான அளவில் வயிறு உப்பிய நிலையில் நவம்பர் 6 ஆம் தேதி எழும்பூரில் உள்ள தாய் சேய் நல மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு இருப்பது சினைப்பைக் கட்டி என்றும், அது மிகவும் முற்றிய ஆபத்தான நிலையில் இருப்பதையும் உறுதி செய்தனர். ஆபரேஷன் செய்தாலும் கட்டியை முழுமையாக உடையாமல் அகற்ற முடியாது என்கிற நிலையில், டிசம்பர் 11 ஆம் தேதி முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அவருக்கு இலவசமாக ஆபரேஷன் செய்யப்பட்டது.

20 கிலோ அளவில் மிகப் பெரிதாக இருந்த சினைப்பை கட்டி வயிற்றில் உள்ள பிற பாகங்களுடன் ஒட்டி இருந்த நிலையில் மிகவும் சிரமப்பட்டு கட்டியை உடைக்காமல் பாதுகாப்பாக அகற்றியதாக தெரிவித்தார் ஆபரேஷன் செய்த மருத்துவர் சீதாலட்சுமி.

நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் “பெண்களுக்கு 45 வயதிற்கு மேல் மாதவிடாய் சுழற்சிகள் நின்ற பிறகு இது போன்ற கட்டிகள் வரும். குறிப்பாக 45 முதல் 60 வயது வரை உள்ள பெண்களுக்கு இந்த கட்டிகள் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றார்.

மேலும், ”இது போன்ற கட்டிகள் மரபு வழியாக வருபவை. எனவே, அவை வருவதை தடுக்க முடியாது. வந்த உடனே முற்ற விடாமல் இதை கவனித்து உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

இந்த கட்டிகள் வயிற்றுக்குள் இருந்தால், மாதவிடாய் சுழற்சியில் குளறுபடிகள் ஏற்படும், பசி இருக்காது, சரியாக சாப்பிட முடியாது, உணவு செரிமானம் ஆகாது, சிறுநீர், மலம் கழித்தலில் சிரமங்கள் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.இந்த அறிகுறிகள் இருந்தால், காலம் தாழ்த்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகி, உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் “ என்று கூறினார்.

பொதுவாகவே 45 வயதை கடந்த விட்டாலோ, மாதவிடாய் நின்று விட்டாலோ அதற்கு பின்பு மாதம் ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
குழந்தை பெற்ற பெண்கள் அதற்கு பின்பு வயிற்றில் ஏற்படும் தொப்பையை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் தெரிவித்தார்.

ஆபரேஷன் செய்யப்பட்ட ரதி கூறுகையில், ”6 ஆண்டுகளாக தன் வயிற்றுக்குள் இருந்த சினைப்பை கட்டியை கவனிக்காமல் விட்டதால் கடும் சிரமத்திற்கு உள்ளானதாகவும், தற்போது ஆபரேஷனுக்கு பிறகு தன்னால் சரியா சாப்பிட, நடக்க முடிகிறது” என்றார்.

மருத்துவ வரலாற்றில், 1922 ஆம் ஆண்டு வெளிநாட்டில் ஒரு பெண்ணுக்கு 142 கிலோ சினைப்பை கட்டி அகற்றப்பட்டு உள்ளதாக தெரிவித்த அவர், இதே எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான சினைப்பை கட்டிகள் அகற்றப்பட்டு உள்ளதாகவும், தமிழகத்தை பொருத்த வரை இது வரை இவ்வளவு பெரிய சினைப்பை கட்டி அகற்றப்பட்டு உள்ளதாக குறிப்புகள் இல்லை என்றும், தற்போது அகற்றப்பட்டு உள்ள 20 கிலோ கட்டியே மிகவும் பெரியது என்றும் தெரிவித்தார்.

சினைப்பை கட்டி குறித்து பெண்கள் சரியான விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொள்வதே இது போன்ற பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க ஒரே வழி.
Published by:Sivaranjani E
First published:

அடுத்த செய்தி