நாட்டில் 70 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உலகின் நீரிழிவு தலைநகரமாக இந்தியா கருதப்படுகிறது. நீரிழிவு என்பது ஒரு வாழ்க்கை முறை நோயாகும். நீரிழிவு நோய் வருவதற்கு நிறைய காரணங்கள் உண்டு. இன்சுலின் எனும் ஹார்மோன் நம் உடலில் சீராகச் சுரக்காதது அல்லது குறைவாகச் சுரப்பது அல்லது சுரந்த இன்சுலின் சரியாக வேலை செய்யாதது ஆகியவை நீரிழிவு நோய் வருவதற்கு அடிப்படை காரணம்.
எனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்நாள் மேலாண்மை தேவைப்படுகிறது. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (CDC) கருத்துப்படி, நீங்கள் முன்கூட்டியே நீரிழிவு நோயாளியாக இருந்தால், சில வாழ்க்கை முறை மாற்றங்கள் வகை 2 நீரிழிவு நோயை தாமதப்படுத்த உதவும் என தெரிவித்துள்ளது. இருப்பினும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை தாண்டி, உங்கள் நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கும் வேறுசில காரணிகளும் உள்ளன. அவற்றில் ஒரு காரணி தான் உங்கள் இரத்த வகை.
O-பிளட் குரூப் அல்லாத பிற ரத்த வகை உள்ளவர்களில் இந்த நோய்க்கான ஆபத்து அதிகம்:
கடந்த 2014ம் ஆண்டு நீரிழிவு நோய்க்கான ஐரோப்பிய சங்கத்தின் இதழான டயாபடோலோஜியாவில் வெளியிடப்பட்ட டியாபெட்டீஸ் ஆய்வில், O- ரத்த வகை கொண்டவர்களுடன் ஒப்பிடும்போது, O-அல்லாத மற்ற ரத்த வகை கொண்டவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் உருவாகும் அபாயம் அதிகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்காக, சுமார் 80,000 பெண்கள் உட்படுத்தப்பட்டனர். ரத்த வகைக்கும் டைப் 2 நீரிழிவு நோய்க்கும் இடையிலான உறவைத் தீர்மானிக்க அவர்கள் கண்காணிக்கப்பட்டனர். இவர்களில், சுமார் 3553 பேருக்கு டைப் 2 நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் O-அல்லாத ரத்த வகை உள்ளவர்களுக்கு அதிக ஆபத்து உள்ளது என்பதையும் கண்டறிந்தனர்.
இதுகுறித்து லக்சம்பர்க் சுகாதார நிறுவனத்தின் இயக்குனரும், ஆய்வின் இணை ஆசிரியருமான கை ஃபாகெராஸி கூறியதாவது, "எங்கள் கண்டுபிடிப்புகள் இரத்தக் வகை மற்றும் நீரிழிவு ஆபத்துக்கு இடையிலான ஒரு வலுவான உறவை ஆதரிக்கின்றன. O இரத்த வகை கொண்ட பங்கேற்பாளர்கள் டைப் 2 நீரிழிவு நோயை வளர்ப்பதற்கான குறைந்த ஆபத்தைக் கொண்டுள்ளனர்" என்று ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். நீரிழிவு நோயை உருவாக்கும் வாய்ப்பைத் தீர்மானிக்க பலவழிகள் இருந்தாலும், இந்த சிறிய தந்திரம் மூலம் உங்கள் நீரிழிவு அபாயத்தை நீங்கள் எளிதில் தீர்மானிக்க முடியும் என்று ஆய்வு கூறுகிறது.
B ரத்த வகை உள்ளவர்களுக்கு அதிக ஆபத்து:
ஆய்வின் படி, O பிளட் குரூப் இருக்கும் பெண்களுடன் ஒப்பிடும்போது A பிளட் குரூப் கொண்ட பெண்கள் டைப் 2 நீரிழிவு நோயை உருவாக்கும் வாய்ப்பு 10% அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. இருப்பினும், B ரத்த வகை கொண்ட பெண்கள் டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் அபாயம், O பிளட் குரூப் பெண்களை காட்டிலும், 21% அதிகம் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், உலகளாவிய நன்கொடையாளரான O நெகட்டிவ் (O-) ரத்த வகையுடன் ஒவ்வொரு கலவையையும் ஒப்பிடும் போது, B பாசிட்டிவ் (B+) இரத்த வகை கொண்ட பெண்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து 35% அதிகரித்திருந்தது என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
சூடான நீரில் மாத்திரை சாப்பிட்டால் என்ன ஆகும்..? ஆய்வின் முடிவுகள் இதோ...
B-ரத்த வகை உள்ளவர்கள் ஏன் அதிக ஆபத்தில் உள்ளனர்?
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, நீரிழிவு ஆபத்து மற்றும் இரத்த வகை ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு இன்னும் முழுமையாக அறியப்படவில்லை. ஆனால் அவர்களிடம் சில விளக்கங்கள் உள்ளன. ஆய்வின்படி, வான் வில்ப்ராண்ட் (von Willebrand) காரணி எனப்படும் இரத்தத்தில் உள்ள ஒரு புரதம் O ரத்தவகை அல்லாத நபர்களில் அதிகமாக உள்ளது. மேலும் இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை உயர்த்துகிறது. இந்த ரத்த வகைகள் டைப்2 நீரிழிவு நோயுடன் தொடர்புடையதாக அறியப்படும் பல்வேறு மூலக்கூறுகளுடன் தொடர்புடையவை என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2012ம் ஆண்டு வெளியான Gut Microbes ஆய்வில், ரத்த வகை ஒருவரின் ஒட்டுமொத்த குடல் நுண்ணுயிர் கலவையை தீர்மானிக்கிறது. மேலும் இது வளர்சிதை மாற்றத்தை பாதிக்கிறது. இது நீரிழிவு நோயில் பங்கு வகிக்கிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
டைப் 2 நீரிழிவு தொடர்பான சிக்கல்கள்
ஒருவர் டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டால், அது அவர்களின் உடல் சர்க்கரையை ஒழுங்குபடுத்தும் மற்றும் பயன்படுத்தும் முறையை பாதிக்கிறது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை உயர்த்துகிறது. இதற்கு சரியான சிகிச்சையளிக்கப்படாவிட்டால் உயிருக்கே ஆபத்தானதாக மாறிவிடும் என்று ஆராச்சியாளர்கள் கூறியுள்ளனர்.