சென்ற வாரத்தின் தொடர்ச்சியாக இந்த வாரம், இதேபோன்ற சந்தேகங்களுடன் சாராவும் , கணவரும் மருத்துவமனைக்கு வந்திருந்தனர்.
சாரா தன்னுடைய முதல் கர்ப்பத்தின் நான்காவது மாதத்தில் இருக்கிறார்.
சாராவின் கணவர், "டாக்டர்! சாரா ரொம்ப அதிகமா சாப்பிடறா டாக்டர்! அதுவும் நேத்திக்கு நைட் ஒரு மணிக்கு எந்திரிச்சு ரொம்ப பசி, ஏதாவது சாப்டே ஆகணும்னு சொல்ல, ஒரு ரெஸ்டாரண்டை கண்டுபிடிச்சு அப்புறம் ஃபுட் ஆர்டர் பண்ணி கொடுத்தேன்.
இவ்வளவு அதிகமா சாப்பிடறது நார்மலா? எல்லாருக்கும் இப்படி தான் இருக்குமா? எடை ரொம்ப அதிகமாயிடாதா?? குழந்தை வேற ரொம்ப குண்டாயிடுமோ?? அப்ப சிசேரியன் தானே ஆகும். ரொம்ப கவலையா இருக்கு டாக்டர்!
என் ஆலோசனை:
சென்ற வாரத்தில் கர்ப்பிணிகளுக்கு அதிகமாக பசி எடுப்பதற்கான காரணம் , வளரும் குழந்தை கர்ப்பப்பை மற்றும் நஞ்சுக்கொடி போன்றவற்றின் அதிகமான கலோரி தேவைக்கு ஏற்றவாறு நம்முடைய பசியும் அதிகரிப்பதால் என்று விளக்கி இருந்தேன்.
பசி அதிகமாக இருக்கும்போது எந்த உணவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை பொறுத்து எடை அதிகரிக்கும் . மாவுச்சத்து நிறைந்த உணவு பொருட்கள் குறிப்பாக அரிசி சார்ந்த உணவு வகைகளை அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும். புரதச்சத்து வாய்ந்த உணவுப் பொருட்களான, மீன் முட்டை பால் போன்றவை எடுத்துக் கொள்ளலாம். காய்கறிகள் கீரைகள் பழங்கள் போன்ற விட்டமின்களும் மினரல் சத்துகளும் நிறைந்த உணவு பொருட்களை கூடுதலாக சேர்த்துக் கொள்ள வேண்டும். எண்ணையில் பொரித்த உணவுகள், அரிசி மற்றும் மைதா போன்றவற்றில் செய்யப்பட்ட உணவு வகைகள் மற்றும் குப்பை உணவுகளை ஜங்க் புட் முடிந்தவரை குறைவான அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அத்துடன் மிதமான உடற்பயிற்சி குறிப்பாக நடை பயிற்சி ஒரு தினத்தில் குறைந்தபட்சம் ஐந்தாயிரம் அடிகளாவது நடப்பது நல்லது. ஒரே சமயத்தில் இல்லாவிட்டாலும் பகுதியாக பிரித்து நடைபயிற்சியை மேற்கொள்ளலாம்.
இது தாயினுடைய எடையை கட்டுக்குள் வைக்க உதவும்.
Also Read : கர்ப்ப காலத்தில் அதிகமாக பசி எடுப்பது நார்மலா?
குழந்தையினுடைய எடையைப் பொறுத்தவரை தாய் தந்தையரின் உடல் அமைப்பையும் எடையையும் பொறுத்தே இருக்கும் . பொதுவாக கர்ப்பிணிக்கு சர்க்கரை நோய் இருப்பின் அவர்களுடைய குழந்தைகள் மிகவும் குண்டாக பிறப்பதற்கு வாய்ப்பு உண்டு. மற்றவர்களுக்கு நேரடியாக அதிகமாக தாய் உணவு எடுத்துக் கொள்வது குழந்தையை அந்த அளவிற்கு பாதிக்க வாய்ப்பு இல்லை.
பிரசவ சமயத்தில் தான் வலியை பொறுத்து சுகப்பிரசவமா அல்லது சிசேரியனா என்பது முடிவாகும். குழந்தை எடை நான்கு கிலோவிற்கும் அதிகமாக இருந்தால் மட்டுமே நேரடியாக சிசேரியனுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே அதை நினைத்து இப்பொழுது கவலைப்பட தேவையில்லை" என்றேன்.
நன்றி கூறி இருவரும் நிம்மதியுடன் விடை பெற்றனர்.
கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மாவை தொடர்பு கொள்ள : doctorjsharma@gmail.com
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.