முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கர்ப்ப காலத்தில் சுவை மாறுபாடு இருப்பது இயல்பானதா..? இதற்கு என்ன செய்ய வேண்டும்..?

கர்ப்ப காலத்தில் சுவை மாறுபாடு இருப்பது இயல்பானதா..? இதற்கு என்ன செய்ய வேண்டும்..?

பெண்குயின் கார்னர் 74

பெண்குயின் கார்னர் 74

பெண்குயின் கார்னர் 74 | கர்ப்பிணி பெண் ஏதேனும் மாத்திரைகளை எடுத்துக் கொண்டிருந்தால் அதனுடைய பக்க விளைவாக இருக்கலாம் .அதை மட்டும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

அன்று கவிதாவும் அவர் கணவர் குமாரும் மருத்துவமனைக்கு வந்திருந்தனர் .இருவருமே பிசியோதெரபி ( physiotherapy) மருத்துவர்கள். கவிதா தன்னுடைய முதல் கர்ப்பத்தில் இருக்கிறார் . ஆலோசனை நேரத்தில் கவிதா ஒரு சந்தேகத்தை முன் வைத்தார்.

"டாக்டர்! எனக்கு இப்ப பிரக்னன்சி ரெண்டு மாசம் ஆகுது. இந்த லாஸ்ட் டூ வீக்ஸா என்னுடைய நாக்குல எப்போதுமே ஒரு கசப்பு, இல்லன்னா , புளிப்பு டேஸ்ட் இருந்துட்டே இருக்கு. நான் சாப்பிடாதப்ப கூட அந்த டேஸ்ட் இருக்கு .அதோட நான் ரெகுலரா ரொம்ப ஆசைப்பட்டு சாப்பிடற நிறைய ஐட்டம் எனக்கு சுத்தமா பிடிக்க மாட்டேங்குது.

இது ஏதாவது பிரச்சனையா? அதோட கோவிட் வந்தா, டேஸ்ட், ஸ்மெல் மாறுமே! . அது மாதிரி ஏதாவது எனக்கு இன்பெக்சன் ஆகியிருக்குமா? "

இப்போது குமார்,''ஆமா! டாக்டர்! நானும் கவிதாவை கவனிச்சேன். எப்பொழுதும் அவ விரும்பி சாப்பிடுற பாலைக்கூட இப்ப அவளால குடிக்கவே முடியல. எனக்கும் கவலையா இருக்கு. "

என் ஆலோசனை:

கர்ப்ப காலத்தில் பெரும்பாலான பெண்களுக்கு சுவை மாறுபடுகிறது அதுபோலவே நுகரும் உணர்வும் மாறுபடுகிறது .ஒரு சிலரால், நார்மலாக இருக்கக்கூடிய வாசனையே சுத்தமாக தாங்க முடியாது அல்லது அந்த வாசனை வந்தாலே அவர்களுக்கு வாந்தி வரும், அளவுக்கு தாங்க முடியாத தன்மை இருக்கலாம் ஒரு சிலருக்கு இந்த வாசனை உணர்வு மாறுவதோடு சுவையும் மாறிவிடும். அதற்கு முக்கியமான காரணம் கர்ப்ப காலத்தில் சுரக்கக்கூடிய ஹார்மோன்கள் தான்.

குறிப்பாக ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் தான் இத்தகைய மாற்றங்களுக்கு காரணமாகிறது. இந்த கர்ப்பகால ஹார்மோன்கள் வாயில் நாக்கில் உள்ள சுவை மூட்டுகளிலும் சில மாறுதல்களை ஏற்படுத்துகின்றன. அதனால் தான் கர்ப்ப காலத்தில் சுவை மாறுபடுகிறது இது கொரோனாவோ அல்லது வேறு தொற்று அல்லது நரம்பு கோளாறோ அல்ல ஆனால் ஒரு சில சமயங்களில் மருந்துகளுடைய பக்கவிளைவாக இருக்கலாம் .

கர்ப்பிணி பெண் ஏதேனும் மாத்திரைகளை எடுத்துக் கொண்டிருந்தால் அதனுடைய பக்க விளைவாக இருக்கலாம் .அதை மட்டும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லை எனில் பெரும்பாலும் கர்ப்ப காலத்தில் தோன்றக்கூடிய மாறுதல் மட்டுமே அதைக் கண்டு பயப்படத் தேவையில்லை.

அது போல தான் இந்த வாசனை உணர்வு மாறுதலும். பால் போன்றவற்றின் வாசனையை அவர்களால் தாங்க முடியவில்லை என்பதால் குடிப்பதற்கு விரும்புவதில்லை. பால் குடிக்காவிட்டால் அதற்கு பதிலாக பால் சார்ந்த பிற பொருட்கள், தயிர், நெய், வெண்ணெய், சீஸ், பன்னீர் போன்றவற்றை எடுத்துக் கொள்வதன் மூலம் தேவையான அளவு கால்சியம் சத்தும் பாலில் உள்ள மற்ற சத்துகளும் அவர்களுக்கு கிடைக்கும்

Also Read : கர்ப்ப காலத்தில் அதிகமாக சாப்பிட்டால் எடை கூடுமா..? குழந்தை பிறப்பதில் சிக்கல் வருமா.?

எனவே கர்ப்ப காலத்தில் சுவை மாறுபடுகிறது அல்லது வாசனை மாறுகிறது எனில் அதை ஒரு நோயாக கருதி பயப்படத் தேவையில்லை கர்ப்ப காலத்தில் சுரக்கக்கூடிய ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் வேலைதான் இது என்பதை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப உங்களது உணவு பழக்க வழக்கங்களை மாற்றி அமைத்துக் கொண்டாலே போதும். அந்த கஷ்டமான மாற்றங்களை எளிதாக கடந்து வந்துவிடலாம் .பொதுவாக முதல் மூன்று மாதங்களுக்கு பிறகு மாறுதல்கள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். ஒரு சிலருக்கு மட்டுமே பிரசவ காலம் வரை நீடிக்கும். பிரசவத்திற்கு பிறகு மீண்டும் அவர்களுடைய பழைய வாசனை மற்றும் சுவைஉணர்வுகள் திரும்பிவிடும்

"நன்றாக புரிந்து கொண்டோம் டாக்டர்!. மிக்க நன்றி!!" என்று விடைபெற்றனர் கவிதாவும் குமாரும்.!!

கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மாவை தொடர்பு கொள்ள : doctorjsharma@gmail.com

First published:

Tags: Pregnan, Pregnancy, Pregnancy changes, பெண்குயின் கார்னர்