ராதாவுக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. தன்னுடைய முதல் கர்ப்பத்தில் இருக்கிறார். அன்று இணையம் மூலம் ஆலோசனைக்காக நேரம் கேட்டிருந்தார் . அதற்கு ஒரு வாரம் முன்பு தான் செக்கப்பிற்காக மருத்துவமனைக்கு வந்திருந்தார். என்ன சந்தேகமாக இருக்கும்? இல்லை, ஏதேனும் புது பிரச்சினையா?" என்ற எண்ணிக் கொண்டே ஆலோசனையைத் துவங்கினேன்.
டாக்டர் போன வாரம் செக்கப்க்கு வந்தப்ப பிளட் டெஸ்ட் எல்லாம் எழுதி கொடுத்து இருந்தீங்க !. அதுல லிவர் பங்க்ஷன் டெஸ்ட்( liver function test) அப்படின்னு இருந்தது. அது கல்லீரலுக்கான பரிசோதனைனு புரிஞ்சுகிட்டேன். கூகுள்ள செக் பண்ணினேன். ஜான்டிஸ் ( jaundice)இருந்தா தான் இந்த டெஸ்ட் எடுப்பாங்களா? டாக்டர்!! எனக்கு எதுக்காக இந்த டெஸ்ட் எடுக்க சொல்லி இருக்கீங்க? எனக்கு ஜாண்டிஸ் இருக்குமா? கொஞ்சம் பதட்டமா இருக்கு". குரலில் கவலை தொனித்தது.
என்னுடைய பதில்:
கர்ப்ப காலத்தின் துவக்கத்தில் கர்ப்பத்தை உறுதி செய்த பிறகு சில அடிப்படை பரிசோதனைகளை அனைத்து கர்ப்பிணிகளுக்குமே செய்ய வேண்டும். அப்படி உள்ள பரிசோதனைகள் பெரும்பாலும் ரத்த சர்க்கரை அளவு, தைராய்டு, சிறுநீரக வேலை, கல்லீரல் வேலை மற்றும் பிளட் குரூப் ரத்த வகை போன்றவையாகும். இவை அடிப்படை பரிசோதனைகள். ஏதேனும் பிரச்சினை இருக்கிறது என்று சந்தேகப்பட்டு இந்த பரிசோதனைகளை செய்வதில்லை. எனவே இந்த பரிசோதனைகளை மருத்துவர் எழுதிக் கொடுக்கும் போது நமக்கு ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது; அதை உறுதி செய்ய தான் டெஸ்ட் எடுக்க சொல்லி இருக்கிறார் டாக்டர் என்று கவலைப்படத் தேவையில்லை. இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
ராதா சொன்னது போல கல்லீரல் பரிசோதனையில் நமக்கு மஞ்சள் காமாலை இருக்கிறதா? என்று தெரியும் . உடலில் உள்ள புரதத்தின் அளவு தெரியும் மற்றும் கல்லீரலில் வேலை செய்யக்கூடிய என்சைம் அளவும் தெரியும். இவற்றினுடைய ஒரு அடிப்படை அளவை கர்ப்பத்தின் ஆரம்பத்திலேயே பதிவு செய்து கொள்வதற்காகத்தான் இந்த டெஸ்ட் முக்கியமாக செய்யப்படுகிறது.
ஒரு சிலருக்கு கர்ப்ப வாந்தி அதிகமாக இருக்கும்போது இந்த என்சைம்கள் மாறி இருப்பதற்கு வாய்ப்புள்ளது. குழந்தை வளர வளர கர்ப்பகாலம் அதிகரிக்க அதிகரிக்க ஒரு சிலருக்கு கல்லீரல் வேலையில் சில மாற்றங்கள் உண்டாகலாம். குறிப்பாக ரத்த கொதிப்பு அதிகமாகும்போது கல்லீரல் பாதிக்கக்கூடிய ஒரு வாய்ப்பு உண்டு. அப்போது இந்த என்சைம் அளவும் அதிகமாகும் . ஏற்கனவே உள்ள அடிப்படை அளவோடு ஒப்பிடும்போது, ஏதாவது மாற்றம் இருக்கிறதா? என்பதை நாம் உறுதி செய்ய முடியும்.
ஒரு சிலர் வலிப்புக்குரிய மாத்திரைகளை எடுத்துக் கொண்டிருப்பார்கள். அந்த மருந்துகளும் கல்லீரல் வேலையை ஓரளவு அதிகரிக்கும் சக்தி கொண்டவை. எனவே அவர்களுக்கும் ஒரு அடிப்படை அளவாக இந்த எல்எஃப்டி(LFT) லிவர் பங்க்ஷன் டெஸ்ட்( liver function test) எடுக்கப்படுகிறது. கர்ப்ப காலத்தில் கல்லீரல் டெஸ்டில் சாதாரணமாக இருக்கும் அளவைவிட என்சைம்களுடைய அளவு மற்றும் புரோட்டின் அளவு கர்ப்பம் இல்லாத பெண்களுக்கு இருக்கக்கூடிய அளவைவிட குறைவாக இருக்கும்.
ஒரு சிலருக்கு கர்ப்ப காலத்தில் குறிப்பாக சில கொழுப்பு நோய்கள் பேட்டி லிவர் ( fatty liver of pregnancy ) மற்றும் ஹெபடைடிஸ் ( hepatitis) எனப்படும் தொற்று போன்றவை ஏற்பட்டாலும் கல்லீரல் வேலை பாதிக்கப்படலாம் தொற்று ஏற்படும் ஒரு சிலருக்கு மஞ்சள் காமாலையும் உண்டாகும். இன்னும் வேறு சில குறிப்பிட்ட கர்ப்ப காலத்தில் மட்டும் உண்டாக கூடிய ( cholestasis of pregnancy) கல்லீரல் நோய்களில் பைல் ஆசிட் எனப்படும் பித்த அமிலம் அதிகமாகும்.
Also Read : பெண்குயின் கார்னர் 8 : திருமண சமயத்தில் மாதவிலக்கு தள்ளிப்போக மாத்திரை எடுக்கலாமா..? மருத்துவர் விளக்கம்
எனவே ராதா இந்த அடிப்படை பரிசோதனைக்காக பயப்பட வேண்டியதில்லை . கட்டாயம் செய்து கொள்ளுங்கள். எந்த சந்தேகத்தின் பெயரிலும் இந்த பரிசோதனையை நான் பரிந்துரைக்கவில்லை. நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள். உங்களுக்கு தெளிவாக புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.
"தேங்க்யூ டாக்டர்!!! ரொம்ப கன்ஃபியூஸ் ஆயிட்டேன் எனக்கு ஜான் டிஸ் இருக்குமோன்னு டவுட் வந்துருச்சு! இப்ப தெளிவா புரிஞ்சுடுச்சு, டாக்டர்! தேங்க்யூ வெரி மச்!!" என்றார்.
அத்துடன் இணைய ஆலோசனை முடிவுற்றது.
கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மாவை தொடர்பு கொள்ள : doctorjsharma@gmail.com
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Liver Health, Pregnancy care, Pregnancy test, பெண்குயின் கார்னர்