முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கர்ப்ப காலத்தில் தலைசுற்றல் இருந்தால் சத்து இல்லை என்று அர்த்தமா..?

கர்ப்ப காலத்தில் தலைசுற்றல் இருந்தால் சத்து இல்லை என்று அர்த்தமா..?

பெண்குயின் கார்னர் 75

பெண்குயின் கார்னர் 75

பெண்குயின் கார்னர் 75 | படுக்கையில் இருந்து எழும்பும் பொழுது வேகமாக எழாமல் முதலில் படுக்கையில் உட்கார வேண்டும். பிறகு கால்களை கீழே விட்டு உட்கார வேண்டும். பிறகு எழுந்து நின்று ,பிறகு நடக்க துவங்க வேண்டும்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஹேமா அன்று தன் தாயுடன் மருத்துவமனைக்கு வந்திருந்தார். ஹேமா தன்னுடைய முதல் கர்ப்பத்தில் இருக்கிறார் . அன்று காலை மிகவும் கடுமையான தலைச்சுற்றல் இருந்ததாகவும் கீழே விழக்கூடிய தருவாயில் ஒருவாறு சமாளித்து விட்டதாகவும் ஹேமா கூறினார்.

அப்போது ஹேமாவினுடைய மாமியார் "உனக்கு உடம்பில் ஒரு சத்தும் இல்லை, அதனால்தான் இவ்வளவு தலை சுற்றல் ஏற்படுகிறது" என்று குறையாக சொல்லி இருக்கிறார் . அது ஹேமாவின் மனதை காயப்படுத்தி விட்டது.

" டாக்டர்! எனக்கு தலை சுற்றல் வருவதற்கு என்ன காரணம்?? சத்து இல்லாததுதானா? சத்து அதிகரிக்க நான் என்ன செய்ய வேண்டும் ? எனக்கு மட்டும்தான் இப்படி ஏற்படுகிறதா? " என்று ஹேமா வருத்தத்துடன் கேள்விகளை கேட்டார்.

என் பதில் :

கர்ப்ப காலத்தில் இரத்த நாளங்களில் மாற்றங்கள் ஏற்படுகிறது. ரத்த நாளங்கள் லேசாக விரிவடைந்து தளர்வதால் ரத்த அழுத்தம் கர்ப்பிணிகளுக்கு இயல்பான அளவைவிட குறைகிறது . இது ஒரு முக்கிய காரணம் . அடுத்ததாக வளரக்கூடிய குழந்தையின் எடை ,உடலின் மிகப்பெரிய ரத்த குழாய்களை அழுத்துவதால், மூளைக்குச் செல்லக்கூடிய ரத்த ஓட்டம் குறைவதால் இவ்வாறு தலை சுற்றல் ஏற்படலாம் .

அதுபோலவே கால்களில் இருந்து நம்முடைய இருதயத்திற்கு செல்லக்கூடிய ரத்த ஓட்டத்தின் வேகம் குறைவதால் மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைவதற்கும் வாய்ப்பு உண்டு. கர்ப்ப காலத்தில் ரத்த ஓட்டத்தில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களால் தான் பெரும்பாலும் தலை சுற்றல் ஏற்படுகிறது.

Dizziness During Pregnancy: Should You Be Worried? | Cloudnine Blog

இது தவிர கர்ப்ப காலத்தில் அதிகமான அளவு உணவு தேவைப்படுகிறது. வளரும் குழந்தைக்கும் சேர்த்து கலோரி தேவை அதிகமாக இருக்கிறது. அதனால் சரியான அளவு உணவு உண்ணாமல் இருந்தாலும் சர்க்கரை அளவு குறைவதால் தலை சுற்றல் ஏற்படலாம். தேவையான அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளாவிட்டால் நீர் சத்து குறைவதாலும் தலை சுற்றல் ஏற்படலாம்

அதிகமான குமட்டல் இருக்கும் பொழுதும் தலைசுற்றல் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு.

தவிர்ப்பது எப்படி?

நூறு சதவீதம் தலைசுற்றலே ஏற்படாது என்று கூற முடியாது. ஆனால், சில எளிய வழிகளை பின்பற்றுவதால் தலை சுற்றலை ஓரளவிற்கு சமாளிக்கலாம்.

1. கர்ப்ப காலத்தில் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். அதிகமான அளவு உண்ண வேண்டும் என்ற அவசியம் இல்லை. பொதுவாக நாம் உண்ணக்கூடிய உணவில் ஒரு கால் பாகம் உணவை இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை உண்ணலாம். அதுபோல வெகு நேரம் உணவு உண்ணாமல் இருப்பதும் சர்க்கரை சத்து உடலில் குறைந்து தலை சுற்றலுக்கு காரணமாகலாம் . எனவே கர்ப்பிணி பெண்களுக்கு நான் பொதுவாக கூறுவது அதிகாலை 5 மணி அளவில் ஒரு முறை பால் அல்லது பாலில் கலந்து சாப்பிடும் பொடிகளை சுடுநீரில் இட்டு குடிப்பது நல்லது.

2. அதுபோலவே நீர்ச்சத்து நிறைந்த பழச்சாறுகள் சூப்புகள் தண்ணீர் பால் நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள் காய்கறிகள் போன்றவற்றையும் இடையிடையே எடுத்துக் கொண்டே இருப்பது உடலில் நீர்ச்சத்து சரியான அளவில் இருப்பதற்கு உதவும்.

3. அதுபோல படுக்கையில் இருந்து எழும்பும் பொழுது வேகமாக எழாமல் முதலில் படுக்கையில் உட்கார வேண்டும். பிறகு கால்களை கீழே விட்டு உட்கார வேண்டும். பிறகு எழுந்து நின்று ,பிறகு நடக்க துவங்க வேண்டும் இவ்வாறு செல்லும் போது படிப்படியாக கால்களுக்கு ரத்த ஓட்டம் செல்வதோடு மூளைக்கும் தேவையான அளவு ரத்த ஓட்டம் செல்வதால் தலை சுற்றல் வருவதை தடுக்கலாம்.

Also Read : கர்ப்ப காலத்தில் சுவை மாறுபாடு இருப்பது இயல்பானதா..? இதற்கு என்ன செய்ய வேண்டும்..?

4. அதுபோல கர்ப்பிணி பெண்கள் 5 மாதங்களுக்கு பிறகு நேராக படுத்தால் குழந்தையினுடைய எடை முழுவதும் ரத்தக்குழாய்களை அழுத்தி ரத்த ஓட்டத்தை குறைக்கும் . அதனால் ஒரு பக்கமாக படுத்துக் கொள்வது நல்லது .

5. வெகு நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்கள் காலை கீழே தொங்கவிடாமல் வேறு ஒரு சிறிய நாற்காலியில் கால்களை நீட்டி வைத்துக் கொள்வது நல்லது.

6. அதுபோல தொடர்ந்து ஒரே நிலையில் உட்காராமல் சிறிது நேரம் நடப்பது சிறிது நேரம் நிற்பது சிறிது நேரம் உட்காருவது என்று நிலைகளை மாற்றிக் கொண்டே இருப்பதும் ரத்த ஓட்டத்தை உடல் முழுவதும் சீராக வைத்திருப்பதற்கு உதவும்." என்று முடித்தேன்.

இப்போது ஹேமாவின் முகத்தில் தெளிவும் நம்பிக்கையும் பளீரிட்டது. "நன்றாக புரிந்தது டாக்டர்! நீங்கள் சொன்ன முறைகளை கடைபிடித்தேன். மிக்க நன்றி!" என்று கூறி விடைபெற்றனர் , ஹேமாவும் அவருடைய தாயும்.

கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மாவை தொடர்பு கொள்ள : doctorjsharma@gmail.com

First published:

Tags: Pregnancy, Pregnancy Sickness, பெண்குயின் கார்னர்