திருமதி சாந்தாவும் அவர் கணவரும் மருத்துவமனைக்கு வந்திருந்தார்கள்.
திருமதி சாந்தாவின் மகளுக்கு 2 வருடங்களுக்கு முன் திடீரென மன நோய்க்கான அறிகுறிகள் தென்பட மருத்துவ ஆலோசனை பெற்றார். உடல்நலம் தேறி விட்டாலும் மருந்துகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டிருக்கிறார்.
திருமதி சாந்தா தான் ஆரம்பித்தார். "டாக்டர் !!!!! மகளுக்கு நல்ல வரன்கள் வருகின்றன. ஆனால் திருமணம் செய்வதற்கு தயக்கமாக இருக்கிறது. உங்களுடைய ஆலோசனையை கேட்டு பிறகு முடிவெடுக்கலாம் என்று நினைக்கிறோம் . மருந்துகள் எடுக்க ஆரம்பித்த பிறகு அவளுக்கு எதுவும் பிரச்சனை இல்லை என்றாலும் திருமணமாகி போகுமிடத்தில் சூழ்நிலை எப்படி இருக்கும் என்று தெரியாது. அதனால் பயமாக உள்ளது"
என்றார்.
எனக்கும் சாந்தா தம்பதியருக்கும் இடையே நடந்த உரையாடலை தான் கீழே கொடுத்துள்ளேன்.
பல திரைப்படங்களில் வரும் மருத்துவர்கள் "கதாநாயகிக்கு லேசாக பைத்தியம் பிடித்துள்ளது. அதற்கு வைத்தியமாக கல்யாணம் செய்து வைக்கலாம் என்று கூறுவதை பார்த்திருக்கிறோம். அது முற்றிலும் தவறானது. அதுபோன்ற சூழ்நிலையை ஒருபோதும் உருவாக்கிவிடக் கூடாது. ஏனென்றால் திருமணம் என்பதே கூடுதலான மன அழுத்தத்தைத் தரக்கூடிய மாற்றம்.
அதுவும் பெண்ணை பொருத்தவரை ஏராளமான விஷயங்களை அவள் கற்றுக் கொள்ள வேண்டும். புரிந்து நடந்து கொள்ள வேண்டும். நிறைய மனிதர்களை அறிந்துகொண்டு புதிய இடத்தில் அதற்கு ஏற்றார் போல தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். அத்துடன் கணவன் மனைவிக்கு இடையேயான தாம்பத்யம், அதைத்தொடர்ந்து கர்ப்பம் ,குழந்தை பிறப்பு, தாய்ப்பால் ஊட்டுதல் ,குழந்தை வளர்ப்பு என்று மன அழுத்தத்தின் பட்டியல் நீண்டுகொண்டே போகும்.
மனநோய்க்கான மருத்துவம் எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது குறைந்தது இரண்டு வருடங்களாவது அவருக்கு மன நோய்க்கான அறிகுறிகள் இல்லாமல் இருப்பது மிகவும் முக்கியம். பிறகு திருமணத்தை நடத்துவது சரியாக இருக்கும்.
இன்னொரு முக்கியமான விஷயம் பெண்ணுக்கு மன நோய் இருப்பின் கட்டாயமாக , மணமகனுக்கு, மற்றும் மணமகன் குடும்பத்தாருக்கும் மனநோய் மற்றும் தொடர்பான பிரச்சினைகள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் பெற்றோர் இருவருக்கும் மனநோய் இருப்பின் பிறக்கும் குழந்தைக்கு அது வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாகும்.
மன நோய்க்கான மருந்துகளை திருமணத்திற்காக நிறுத்திவிடக் கூடாது. மருந்துகளை தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு சில மன நோய்க்கான மருந்துகள் எடுத்துக்கொள்ளும் பொழுது கணவன் மனைவி உறவில் நாட்டம் இல்லாமல் போகும். எனவே திருமணத்திற்கு முன்பு மனநோய் மருத்துவரை கலந்து ஆலோசித்து மருந்துகளை தேவைப்பட்டால் மாற்றி க்கொள்ளலாம்.
மனநோய்க்கான பெரும்பாலான மருந்துகள் உடல் பருமனை அதிகரிக்கும் என்பதால் உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடற்பயிற்சியும் அவசியம். மற்றும் வருடத்திற்கு ஒரு முறை அடிப்படை இரத்தப் பரிசோதனைகளும் ஈசிஜி(ECG) பரிசோதனையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதிக திறனுள்ள மருந்துகளை எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது கர்ப்பம் அடைந்தால் கருக்குழந்தைக்கு அது பிறவி குறைபாடுகளை ஏற்படுத்தலாம். அதுபோன்ற சூழ்நிலையில் மருந்துகளை மாற்றியமைத்துக் கொள்ளலாம், அல்லது கர்ப்பத்தடை மாத்திரைகளை உபயோகித்து அவருடைய மன நோய்க்கான மருத்துவம் முடியும்வரை கர்ப்பத்தை தள்ளிப் போடலாம்.
குழந்தைக்காக திட்டமிடுபவர்கள் , மனநோய் மருத்துவரையும் மகப்பேறு மருத்துவரை சந்தித்து ஆலோசனையைப் பெற்று பிறகு திட்டமிடுவது சரியான முடிவாக இருக்கும் .
திருமண நிச்சயதார்த்தம் முன்பாகவே மாப்பிள்ளை வீட்டாருடன் கலந்து ஆலோசித்து பிரச்சினையின் தன்மையை அவர்கள் முழுமையாக புரிந்து கொண்டார்களா ?என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். திருமணத்திற்கு பிறகு தேவையில்லாத சிக்கல்களையும் மன அழுத்தத்தையும் இது தவிர்க்கும். அத்துடன் மாப்பிள்ளை வீட்டார் சரியாக புரிந்து கொள்ளும் பொழுது கூடுதலாக உதவியும் கிடைக்கும்.
மணமகள் ஏதேனும் வேலையில் இருந்தால் தொடர்ந்து அந்த வேலையில் இருப்பது மிகவும் முக்கியம். அதுபோல அவர் படித்துக் கொண்டிருந்தாலும் அவர் படிப்பை தொடர்வது மிகவும் நல்லது. அவர் வேலையில் எதுவும் இல்லை என்றால் சமூக சேவை செய்வது, பிரதிபலன் பார்க்காமல் உதவி செய்வது போன்றவற்றை செய்யலாம் ஆக்கபூர்வமான விஷயங்களில் அவர் கவனம் இருக்கும் பொழுது மன அழுத்தத்தின் அளவு குறைவாகும் . முக்கியமாக பொருளாதாரப் பிரச்சனை இல்லையெனில், மன நோய் பாதிப்புகள் குறைவதைப் பார்த்திருக்கிறோம்.
மணமகன் வீட்டார் பிரச்சினையை நன்கு புரிந்துகொண்டு உடல் நோய் போலத்தான் மன நோயும், அதை மருந்துகளால் பூரணமாக குணப்படுத்த முடியும் என்ற எண்ணத்தோடு புது மருமகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக அன்பான வார்த்தைகளும் பரிவான கவனிப்பும் சரியான மருத்துவமும், நாங்கள் இருக்கிறோம் என்ற அரவணைப்பும், நம்பிக்கையும், மனநோய் மட்டும் அல்ல, எந்த நோயையும் குணப்படுத்தும் அருமருந்தாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.
"நன்றாக விளங்கியது, டாக்டர்!!! நீங்கள் சொன்ன விஷயங்களை மனதில் வைத்து மகளுடைய திருமண ஏற்பாடுகளைச் செய்வோம். மிக்க நன்றி!!!!" விடைபெற்றனர் சாந்தா தம்பதியர்.
பி.கு : சாந்தாவின் மகளுக்காக லண்டனில் இருக்கும் மனநோய் மருத்துவர் மரு.ஸ்ரீனிவாசனிடமும் இந்த நோய் குறித்து உரையாடிய பிறகு கொடுக்கப்பட்ட பொதுவான ஆலோசனை இது.
மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மாவை தொடர்பு கொள்ள : doctorjsharma@gmail.com
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.