ஷாலுவும், சித்ராவும் இளம் யுவதிகள். இருவருமே
ஊடகத்துறையில் பணிபுரிபவர்கள். ஜீன்ஸ் கால்சட்டையும் , பொருத்தமான மேல் சட்டை மற்றும் லேசான ஒப்பனையோடு அழகாக வந்திருந்தனர். முகக்கவசம் அணிந்திருந்தனர். மாஸ்க்கையும் மீறி ஷாலுவின் நெற்றியில் இருந்த ஏராளமான பருக்கள் கவனத்தை ஈர்த்தன.
ஷாலு தான் தொடங்கினார். "மேம்!! எனக்கு முகத்துல திடீர்னு பரு அதிகமாயிடுச்சு!!! எனக்கு செல்பி எடுக்கிறது ரொம்ப பிடிக்கும். அடிக்கடி செல்பி எடுத்து பாத்துக்கிட்டே இருப்பேன். இப்ப என் முகத்தை பார்க்கிறதுக்கு எனக்கே பிடிக்க மாட்டேங்குது!!!! மேரேஜ் , ஃபிக்ஸ் ஆயிருக்கு!!. கல்யாண போட்டோஸ் எப்படி, எப்படி ,எல்லாம் இருக்கணும்னு நான் ஒரு பெரிய கனவு கண்டுட்டு இருந்தேன்
இப்ப என் கனவெல்லாம் நொறுங்கி விழுந்திருச்சு டாக்டர்! எனக்கு இது ரொம்ப மன அழுத்தத்தை கொடுக்கிறது. தூக்கமே வர மாட்டேங்குது. ஏற்கனவே ரெண்டு மூணு சிகிச்சை டிரை பண்ணியும் எதுவுமே எனக்கு கரெக்டா செட் ஆகல, எனக்கு எப்படியாவது ஹெல்ப் பண்ணுங்க" என்றார்.
அவருடைய முக கவசத்தை எடுத்தபோது உண்மையிலேயே தாமரை போன்ற அழகிய முகத்தை பொட்டு பொட்டாக ஏராளமான பருக்கள் ஆக்ரமித்திருந்தன.
திருமண புகைப்படம் என்பது வாழ்க்கையில் ஒரு முறை வருவது அதில் தான் அழகாக தோன்ற வேண்டும் என்று நினைப்பது எல்லா பெண்களுக்கும் உள்ள நியாயமான ஆசை. இது நாள் வரை அழகு நிலையத்திற்கு செல்லாதவர்கள் கூட திருமணத்திற்கு , அழகுசெய்து கொள்வர். சிலர் திருமணத்திற்கு முதல்நாள் சென்று புதிய சிகிச்சைகளை மேற்கொள்ளும்போது அது பெரிய தவறாகி, வேண்டாத பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். அழகுக்கு பதில் அலர்ஜியை உண்டாக்கும்.
அதனால் திருமணத்திற்கு முகத்தை அழகு நிலையத்தில் சென்று சரிசெய்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள்,. ஒரு மாதம் இரண்டு மாதத்திற்கு முன்பே துவங்கி விடுவது நல்லது. எந்தவிதமான சிகிச்சை நமக்கு அழகு கொடுக்கும் என்பதை முன்பே திட்டமிடுதல் சரியானது.
ஷாலுவை பொருத்தவரை என்னவாக இருக்கலாம்? திடீரென்று இத்தனை பருக்கள் வருவதற்கு என்ன காரணம்??
பருக்கள் பொதுவாக ஹார்மோன் மாறுதலினால் வரலாம். அதனால் தான் குழந்தைகள் பூப்படைந்த பிறகு பருக்கள் வர துவங்கும். முக்கியமாக சிலருக்கு மாதாந்திர சுழற்சி சமயங்களில் பருக்கள் வருவதையும் பார்க்கலாம். நீர்க்கட்டி போன்ற ஹார்மோன் பிரச்சினைகள் இருப்பவர்களுக்கும் பருக்கள் அதிகமாக இருக்கும்.
நாம் உபயோகப்படுத்தும் கிரீம்கள் பவுடர் போன்றவையும் நமக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். அத்தோடு தலையில் டை போன்ற கருப்பாக்கும் நிறமிகளை உபயோகப் படுத்தும்போது சிலருக்கு முகத்தில் கருப்பு திட்டுக்கள், பருக்கள் போன்றவை ஏற்படலாம்.
முகத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். வெளியே சென்று வந்த பின் முகத்தை சுத்தமாக கழுவி லேசான மாய்ச்சுரைசிங் க்ரீமை போட்டு முகத்தை பாதுகாக்கலாம். தலை முடி சுத்தமும் மிகவும் முக்கியம். தலையில் பொடுகு அதிகமாக இருப்பவர்களுக்கு முகத்தில் பருக்கள் , புண்கள் , போன்ற பிரச்சினைகள் அதிகமாக வரும்.
மன அழுத்தம் அதிகமாகும்போது , திருமணம் அல்லது வேலை படிப்பு தேர்வு புதிய உறவுகள் போன்றவை மன அழுத்தத்தை உண்டாக்கலாம்.
கொழுப்புச்சத்தும் மைதாவும் சேர்த்த உணவுப் பொருளை உண்ணும் பொழுது உடலில் உள்ள நச்சுப்பொருள் அதிகமாகும். அது தோலில் வெளிப்படும். இன்னும் சில பெண்களுக்கு தினசரி மலம் கழிக்கும் பழக்கம் சரியாக இருப்பதில்லை .
உறக்கம் சரிவர இல்லாமை, அத்துடன் உடனடி உணவுகள் இவற்றால் முதலில் பாதிக்கப்படுவது நம்முடைய வயிறும் தோலும் தான். அதன் வெளிப்பாடாக சிறுசிறு புண்கள் உடலின் எல்லா இடத்திலுமே வரலாம். அது முகத்தில் தெரியலாம். ஒரு சில மருந்துகளின் பக்கவிளைவாலும் இதுபோன்று ஏற்படலாம்.
காய்கறிகள், கீரைகள், பழங்கள் போன்ற இயற்கை உணவு பொருட்களை அதிக அளவு உணவில் சேர்த்துக் கொள்ளும் போது நம் உடலில் உள்ள நச்சுப் பொருளின் அளவு குறைவாகும். அதனால் தோலில் மினுமினுப்பு கூடும், பளபளப்பு ஏறும். விட்டமின்A,C,E ,போன்றவை தோலுக்கு அதிகமான அதிகமான சத்துக்களை தரக்கூடியவை.
மொத்தத்தில் 'அகத்தின் அழகு முகத்தில் தெரியும் 'என்று பழமொழி உண்டு மனதில் நினைப்பதை தான் முகம் காட்டிக் கொடுக்கும் என்று சொல்வார்கள். வேறு ஒரு பொருளில் 'நம் உள் உறுப்புகளின் சுத்தம் நம் முகத்தில் தெரிந்து விடும்' என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
ஷாலுவை பொருத்தவரை அவர் புதியதாக வாங்கி உள்ள அழகு சாதன பொருட்கள், ஒரு காரணமாக இருக்கலாம் எனவே அவற்றை சில நாட்கள் நிறுத்தி வைக்க சொன்னேன்.
அவர் தலையில் பொடுகு பிரச்சனையும் இருந்தது. அதற்குரிய தீர்வையும் கூறினேன். முகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள சோப்புகள் அல்லது ஃபேஷ் வாஷை உபயோகித்து, பின் பருக்களின் மீது தடவ வேண்டிய களிம்புகளையும் எழுதிக் கொடுத்தேன் . சில வைட்டமின் மாத்திரைகளையும் பரிந்துரைத்தேன். 10 நாட்களில் பளிங்கு முகம் பாதி சரியாகிவிட்டது .முகத்தில் தன்னம்பிக்கையும் மகிழ்ச்சியும் ஒளி விட்டது.
"இப்பொழுது மீண்டும் செல்பி எடுக்க தொடங்கிவிட்டேன் டாக்டர்! மிக்க நன்றி! என் திருமணத்திற்கு கட்டாயம் நீங்கள் வரவேண்டும். உங்களுடன் நான் உள்ள புகைப்படம் என்னுடைய திருமண ஆல்பத்தில் என்றும் இருக்க வேண்டும்" என்று ஆசையுடன் கூறினார்.
திருமணத்திற்கு சென்று வர வேண்டும் என்று மனதில் குறித்து வைத்துக் கொண்டேன்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Acne, Pimple, பெண்குயின் கார்னர்