Home /News /lifestyle /

பெண்குயின் கார்னர் 10 : திருமணத்திற்கு முன்பு இந்த தடுப்பூசியெல்லாம் கட்டாயம் போடனுமா..? மருத்துவரின் பரிந்துரை

பெண்குயின் கார்னர் 10 : திருமணத்திற்கு முன்பு இந்த தடுப்பூசியெல்லாம் கட்டாயம் போடனுமா..? மருத்துவரின் பரிந்துரை

பெண்குயின் கார்னர்

பெண்குயின் கார்னர்

எல்லா பெண்களுமே கோவிட் தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாம். திருமணத்திற்கு முன்பே எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. குழந்தைக்கு திட்டமிடல் அல்லது இடையே கர்ப்பம் அடைந்தாலும் தடுப்பூசியின் இரண்டாவது தவணையை தொடரலாம்.

பத்திரிக்கையாளர் ஹன்சா எனக்கு பழக்கமானவர். அன்று சிரித்துக்கொண்டே மருத்துவமனைக்கு வந்தார். புத்திசாலி பத்திரிக்கையாளர். தைரியமானவரும் கூட.
எப்போதும் ஏதேனும் கட்டுரைகளை எழுதுவதற்கு அல்லது சந்தேகங்களைத் தீர்ப்பதற்காக வருபவர் அன்று தனக்காக வந்திருந்தார்.

திருமணத்திற்கு முன் தடுப்பூசிகள் ஏதேனும் போட்டுக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்குமா? என்று சந்தேகம் எழுந்தது. அதனால்தான் உங்களை சந்திப்பதற்கு வந்தேன் டாக்டர்.

ஹன்சாவுக்கு திருமணத்திற்கான பேச்சுக்கள் போய்க் கொண்டிருந்தன.

டாக்டர்! திருமணத்தை நினைக்கும்போது சிறிது சந்தோஷ படபடப்பு இருக்கத்தான் செய்கிறது என்றார்.

பிரச்சனை வராமல் இருக்க தடுப்பூசி ஏதாவது இருக்கிறதா? முக்கியமாக புகுந்த வீட்டில் ?? என்று கேட்டுவிட்டு நகைத்தார்.

கோவிட் தடுப்புசி

எல்லா பெண்களுமே கோவிட் தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாம். திருமணத்திற்கு முன்பே எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. குழந்தைக்கு திட்டமிடல் அல்லது இடையே கர்ப்பம் அடைந்தாலும் தடுப்பூசியின் இரண்டாவது தவணையை தொடரலாம். தடுப்பூசி போட்டவுடன் உடனே கருத்தரித்தாலும்,. தடுப்பூசி போடும் பொழுது கர்ப்பமாக இருந்தாலும் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதை பார்க்கிறோம். எனவே அனைத்து பெண்களும் கொரானா தடுப்பூசி இதுவரை போடவில்லை என்றால் உடனே சென்று செலுத்திக் கொள்ளலாம்.



கொரானா தடுப்பூசியை பொறுத்தவரை கோவிஷீல்ட், கோவாக்ஸின் மற்றும் ஸ்புட்னிக் தடுப்பூசிகள் இந்தியாவில் போடப்படுகின்றன. தடுப்பூசியைப் பொருத்தவரை உங்களுக்கு இருக்கும் நேரத்தை பொருத்து தேர்ந்தெடுக்கலாம். வெகுவிரைவாக இரண்டு தவணைகளை முடிக்க வேண்டுமெனில் கோவாக்ஸின் மற்றும் ஸ்புட்னிக் தடுப்பூசியை தேர்ந்தெடுக்கலாம் . இரண்டு மாதங்களில் இரண்டு தவணைத் தடுப்பூசிகளையும் முடித்து விடலாம்.

கோவிஷீல்ட் தடுப்பூசி இரண்டாவது தவணை மூன்று மாதங்கள் கழித்து வரும், மற்றபடி மூன்று தடுப்பூசிகளும் சமமான எதிர்ப்பு சக்தியை கொடுக்கின்றன. தடுப்பூசி போட்ட எல்லோருக்கும் காய்ச்சல் உடல்வலி வருவதில்லை. பத்து பதினைந்து பேரில் ஒருவருக்கு வரலாம். அதனால் திருமணத்தை ஒட்டி தடுப்பூசி எடுத்துக் கொள்ளாமல் முன்பே தடுப்பூசியை போட்டுவிடுவது நல்லது. அத்தோடு திருமணத்தில் நிறைய பேர் கூடும் வாய்ப்பு மற்றும் பயணம் செய்யும் வாய்ப்பு இருப்பதால் திருமணத்திற்கு முன்பு கட்டாயம் தடுப்பூசி சரியான ப முடிவாக இருக்கும். இப்போது பொது இடங்களில் நடமாட தடுப்பூசி அவசியம் என்று வந்தது போல விரைவில் தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர லாம் என்ற கட்டுப்பாடுகள் வரலாம். அதனால் விரைந்து தடுப்பூசி செலுத்தி கொள்வது அவசியம்

பெண்குயின் கார்னர் 9: சொந்தத்தில் திருமணம் செய்யலாமா? மருத்துவரின் விளக்கம்

ரூபெல்லா தடுப்பூசி

கர்ப்ப காலத்தில் ரூபல்லா தட்டம்மை போன்ற அறிகுறிகள் ஏற்பட்டு கர்ப்ப காலம் முழுவததையும் மிகுந்த பதட்டத்தோடு கழித்த பல பெண்களை நான் பார்த்திருக்கிறேன்.

ரூபல்லா என்பதை ஜெர்மன் தட்டம்மை என்று கூறுவோம். இதுவும் ஒரு வைரஸ் நோயாகும். இந்த நோய் வந்தால் காய்ச்சல், உடல் முழுவதும் தடிப்புகள் உடல் வலி ,கண் வலி, வாந்தி போன்றவை மூன்று நாளில் இருந்து ஒரு வாரம் வரை இருக்கலாம். ஆனால் இந்த ஜெர்மன் தட்டம்மையின் பெரிய பலம் என்னவென்றால் கர்ப்பமாய் இருப்பவர்களுக்கு இந்த ஜெர்மன் தட்டம்மை பாதித்தால் நஞ்சுக்கொடி வழியே சென்று கருவில் இருக்கும் குழந்தையை பாதித்துவிடும். அதனால் கருச்சிதைவு, குறைபாடுள்ள குழந்தை குறைப்பிரசவம் போன்றவை ஏற்படலாம்.



குழந்தையின் மூளை,இருதயம், கேட்கும் திறன் கண்பார்வை என்று பல்வேறு உறுப்புகளையும் பாதித்துவிடும். அதனால் பிறக்கும் போதே குழந்தை 'கன்ஜெனிடல் ரூபெல்லா சின்றோம் 'என்ற பிறவிக் குறைபாடோடு பிறக்கலாம். நம்முடைய இந்திய நாட்டின் தடுப்பூசி திட்டத்தில் 11/2வயதில் போடப்படும் MMR ஊசியில் R என்பது ரூபல்லா தடுப்பூசியை குறிக்கும். பொதுவாக தடுப்பூசிக்கு பிறகு ரூபல்லாவுக்கான எதிர்ப்பு சக்தி நமக்கு உண்டாகிவிடும். சந்தேகம் ஏற்பட்டால் எதிர்ப்பு சக்தி இருக்கிறதா? என்பதை சோதிக்க ரூபெல்லா எதிர்ப்பணுக்களுக்கான (rubella IgG antibodies) பரிசோதனை செய்வோம். Rubella IgG positive என்று வந்தால் நமக்கு எதிர்ப்பு சக்தி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

90- 95 %வரை தடுப்பூசி எடுத்தவர்களுக்கு இந்த எதிர்ப்பு சக்தி இருப்பதை காண்கிறோம் . இருப்பினும் 5% பேருக்கு இந்த எதிர்ப்பு சக்தி உருவாகியிருக்காது. அவ்வாறு நெகடிவ் ஆக இருப்பின் அவர்கள் விரைந்து ரூபெல்லா தடுப்பூசி திருமணத்திற்கு முன்பே செலுத்திக் கொள்ளலாம். ரூபெல்லா தடுப்பூசி செலுத்திக் கொண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு கருத்தரித்தால், கருக்குழந்தைக்கு ரூபல்லாவிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.

கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி(HPV vaccine)

இது கர்ப்பப்பை வாயில் ஏற்படும் புற்று நோயை தடுப்பதற்கான தடுப்பூசி. ஹுமன் பாப்பிலோமா வைரஸ் கர்ப்ப வாயில் புண்ணை ஏற்படுத்தி நாளடைவில் அது கர்ப்பவாய் புற்று நோயாக மாறுவதற்கான காரணமாகிறது. அதனால் இந்த தடுப்பு ஊசி எடுத்துக்கொள்ளும் பொழுது முக்கியமாக தாம்பத்திய வாழ்க்கையை தொடங்குவதற்கு முன்பே எடுத்துக்கொள்ளும் பொழுது ஹெச்பிவி தொற்றில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. அதனால் திருமணத்திற்கு முன்பாக இந்த தடுப்பூசியை எடுத்துக்கொள்வது முக்கியம் இந்த தடுப்பூசியை பொருத்தவரை இதில் உள்ள ஒரு சிக்கல் இதனுடைய விலை. இரண்டு தவணைகளாக இந்த தடுப்பூசியை எடுத்துக்கொள்ள வேண்டும் தடுப்பூசி போட்டு குறைந்தது 15 நாட்களில் அதனுடைய முழு எதிர்ப்பு சக்தியை பெறலாம்



ஹன்சா ஏற்கனவே கோவிட் தடுப்பூசியை இரண்டு தவணைகள் முடித்திருந்தார். அவருக்கு ருபெல்லா பரிசோதனை செய்ததில் எதிர்ப்பு சக்தி பாசிட்டிவ் என்று வந்திருந்தது அதனால் ரூபெல்லா தடுப்பூசி அவருக்கு தேவை இல்லை.

பிறகு கர்ப்பவாய் புற்றுநோய் பற்றிய ஆலோசனையில் கர்ப்பவாய் புற்று நோய்க்கான தடுப்பூசி இரண்டு தவணைகள் எடுத்துக் கொள்வதென்று முடிவு செய்தோம்.

ஹன்சாவை போல நீங்களும் திருமணத்திற்கு தயாராகிறீர்களா?

பட்டுப் புடவையும் நகையும் அணிந்துகொண்டு ஒரு அழகு பட்டாம்பூச்சியாய் நீங்கள் நிம்மதியாக குடும்ப வாழ்க்கையைத் துவங்க முக்கியம் தடுப்பூசிகள்.

தடுப்பூசிகளை தவறாமல் எடுத்துக்கொள்ளுங்கள்.
Published by:Sivaranjani E
First published:

Tags: Marriage Plan, Vaccine, பெண்குயின் கார்னர்

அடுத்த செய்தி