அன்று, சபிதா பானு மருத்துவமனையில் வந்து காத்திருந்தார். முகத்தில் குழப்பத்துடன், லேசான பதட்டமும் தெரிந்தது. சபிதாவை முதன்முறையாக சந்திக்கிறேன். ஊடகத்துறையில் பணிபுரிபவர். திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது.
சபிதாவே ஆரம்பித்தார். டாக்டர் உங்கள் யூடியூப் வீடியோஸ் எனக்கு ரொம்ப பிடிச்சி இருந்தது. அதனால தான் உங்களை பார்க்க வந்தேன். பிரச்சனை என்னன்னா நாங்க இப்போ பேபிக்காக பிளான் பண்றோம். என்னுடைய ஹஸ்பண்ட் நல்லவர். ஆனால் ஒரே ஒரு தவறு. ரொம்ப சிகரெட் பிடிக்கிறாரு..
அது உடம்புக்கு கெடுதின்னு சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறாரு! இன்னொரு பக்கம் , சமீபத்தில , மறைமுகமாக, சிகரெட் புகையால, கர்ப்பத்திலிருக்கும் குழந்தைக்கு நிறைய பிரச்சனைகள் வர வாய்ப்பிருக்குனு படிச்சேன். . எனக்கு மன உளைச்சலா இருக்கு. இப்ப கன்சீவ் ஆனா, பேபிக்கு சிகரெட் புகையால் குறைபாடு வந்துடுமோன்னு பயம் இருந்துகிட்டே இருக்கு. ஆனால் அவர் , " இதெல்லாம் நம்ப முடியாதுன்னு சொல்றாரு!
இது எந்த அளவுக்கு உண்மை டாக்டர்?! ஹஸ்பண்ட் சிகரெட் பிடிக்கிறதுனால , குழந்தைக்கு ஏதாவது பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு இருக்கா? அப்படி பிரச்சனை வரும்னா என்ன மாதிரியான பிரச்சனை வரும்? அதை எப்படி தடுக்கிறது?
என் கணவர் சிகரெட் பிடிக்கிறத நிறுத்திட்டா உடனே பேபி ட்ரை பண்ணலாமா? இல்ல... கொஞ்ச நாள் நாங்க வெயிட் பண்ணனுமா? எனக்கு இது பத்தி நீங்க கொஞ்சம் தெளிவா சொல்லணும், டாக்டர்! என்றார்.
என் ஆலோசனை :
சிகரெட்டில் உள்ள பல்வேறு வேதிப்பொருட்கள் முக்கியமாக 'நிக்கோடின்' கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையை பாதிக்க கூடிய சக்தி உள்ளது.
மறைமுக புகைப்பிடித்தலால் ஏராளமான பிரச்சனைகள் வருவதால் தான், பொது இடங்களில் புகைபிடிப்பதை பல்வேறு நாட்டு அரசுகளும் மக்களுடைய நன்மையை கருதி தடை செய்துள்ளன.
கணவன்- மனைவி ஐடி துறையில் இரவு நேரப்பணி... இதனால் கருத்தரிப்பதில் தாமதமாகுமா..?
உலகின் பல பகுதிகளில் நடந்த ஆய்வுகளில் சிகரெட் புகையால், பெரும்பாலும் நேரடியாக கர்ப்பிணி பெண்ணே புகைக்கும் பொழுது கருச்சிதைவு, குறைந்த எடை உள்ள குழந்தை, குறைமாத பிரசவம், கர்ப்ப காலத்தில் ரத்தப்போக்கு ஏற்படுதல் மற்றும் குழந்தைக்கு பிறவி குறைபாடாக முக அமைப்பில் மாறுதல்கள் போன்றவை ஏற்படுவதை நிரூபித்துள்ளன. அதுபோலவே மறைமுக புகைப்பிடித்தலிலும் (செகண்டரி ஸ்மோக்கிங்) இது போன்ற பாதிப்புகள் குழந்தைக்கு ஏற்படலாம். ஆனால் இந்த ஆராய்ச்சிகளில் குறிப்பிடத்தக்க பாதிப்புகளை ஒரு சில மட்டுமே காட்டுகின்றன.
அதனால்தான் சபிதா!!!,உங்கள் கணவர் இது நம்பக் கூடியதாக இல்லை என்று கூறுகிறார்.
ஆனால் பல ஆராய்ச்சிகளும் கூறுவது என்னவென்றால், இந்த மறைமுக புகை பிடித்தல் கர்ப்பிணிப் பெண்ணிற்கும் அவர் வயிற்றில் வளரும் கருவிற்கும் பல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். மேலும் நீண்ட கால பிரச்சனைகளையும் கூட , குழந்தைக்கு ஏற்படுத்தலாம். குறிப்பாக திடீரென, ஒரு காரணமும் அறியாமல் குழந்தை இறந்து போவது, ஆஸ்த்மா போன்ற மூச்சு திணறல் பிரச்சினைகளையும் மறைமுக புகைப்பிடித்தல் குழந்தைக்கு ஏற்படுத்தலாம் என்று கூறுகின்றன.
ஜங்க் ஃபுட் சாப்பிட்டால் குழந்தையின்மை ஏற்படுமா..? மருத்துவர் விளக்கம்
அதனால் கணவர் புகைபிடிப்பதை முடிந்த அளவுக்கு குறைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக வீட்டில் இருக்கும் சமயங்களில் புகைபிடிப்பதை கட்டாயம் நிறுத்த வேண்டும் . கணவரைப் பொருத்தவரை சிகரெட் பழக்கத்தை முழுமையாக நிறுத்தி விட்டால், எந்த விதமான காலக்கெடுவும், கர்ப்பம் அடைவதற்காக தேவையில்லை. ஆனால் மூன்று மாதங்கள் வரை தாமதித்து பிறகு கர்ப்பத்திற்கு முயற்சி செய்வது நல்லது.
பொதுவாக இந்த புகையின் நிக்கோடின் தாக்கம் 24 மணி நேரத்திலேயே நீங்கிவிடும் . புகை பிடிப்பது என்பது அவர்களுக்கு மட்டுமல்ல அவர்களுடைய குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கெடுதியை உண்டாக்கலாம்.
எனவே சபிதா உங்கள் கணவரை அழைத்து வாருங்கள் , அவரிடமும் இந்த உண்மைகளை கூறும் பொழுது நிச்சயம் சிகரெட் பிடிப்பதை நிறுத்துவார் , என்று கூறினேன். சபிதாவும் அதை ஆமோதித்தார்.
மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மாவை தொடர்பு கொள்ள : doctorjsharma@gmail.com
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.