"Oxford-AstraZeneca" தடுப்பூசி புதிய கொரோனா வைரஸுக்கு எதிராக செயல்படும் : இங்கிலாந்து அறிக்கை..

மாதிரி படம்

அங்கீகரிக்கப்பட்ட ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளைப் போலவே திறம்பட செயல்படுவதாகவும், 95% நோயாளிகளைப் பாதுகாப்பதாகவும், மருத்துவமனை சிகிச்சை தேவைப்படும் கடுமையான நோய்களைத் தடுப்பதில் 100% பயனுள்ளதாகவும் இருக்கும்

  • Share this:
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகா ஆகியவை இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசி (Oxford-AstraZeneca Vaccine), தற்போது மக்களை மிகவும் அச்சுறுத்தி வரும் உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராக செயல்படும் என இங்கிலாந்து ஊடகம் கடந்த 28-ஆம் தேதி அறிக்கை வெளியிட்டுள்ளது.

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துள்ள ஆக்ஸ்போர்டு சமீபத்தில் உருவாக்கிய தடுப்பூசி, வரும் டிச.31-ஆம் (வியாழக்கிழமை) தேதிக்கு முன்னர் இங்கிலாந்தில் ஒப்புதல் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது புதிய வகை வைரஸால் மிகவும் பாதிக்கப்படக் கூடிய குழுக்களுக்கு விரைவில் வழங்குவதை துரிதப்படுத்தும் என தெரிகிறது. இது குறித்து ஒரு மூத்த அரசாங்க அதிகாரி தி சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு தெரிவித்ததாவது, "கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க முதலில் 12 முதல் 15 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்கப்படும்.

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிக்கான ஒப்புதல் என்பது வசந்த காலத்தில் அதை பெறுவது நல்லது என்று அர்த்தம். கொரோனா வைரஸின் புதிய உருமாற்றம் பழையதை முந்தியுள்ளது மற்றும் இங்கிலாந்தில் மக்களை பரவலாக பாதித்துள்ளது என்று அவர் எச்சரிக்கை விடுத்தார். மேலும் சமீபத்திய கொரோனா பாதிப்பு புள்ளிவிவரங்கள் நல்ல அறிகுறியாக தெரியவில்லை. ஆனால் MHRA-வின் (Medicines and Healthcare Products Regulatory Agency) வழிகாட்டுதலின்பிடி ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை விரைவில் வழங்கும் என்று அரசாங்க வட்டாரம் தெரிவித்துள்ளது.மேலும் இது குறித்து அஸ்ட்ராஜெனெகாவின் தலைமை நிர்வாகி பாஸ்கல் சொரியட் கூறியதாவது, இந்த தடுப்பூசி ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளைப் போலவே திறம்பட செயல்படுவதாகவும், 95% நோயாளிகளைப் பாதுகாப்பதாகவும், மருத்துவமனை சிகிச்சை தேவைப்படும் கடுமையான நோய்களைத் தடுப்பதில் 100% பயனுள்ளதாகவும் இருக்கும் என்று புதிய தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளதாகக் கூறினார்.

இங்கிலாந்தில் தற்போது பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸால் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில் இந்த கொடிய வைரஸின் புதிய பரவக்கூடிய உருமாற்றத்திற்கு எதிராக ஆக்ஸ்போர்டு தடுப்பூசி பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் முதல் சோதனைகளில், இது ஒட்டுமொத்தமாக 62% பயனுள்ளதாக இருப்பது கண்டறியப்பட்டது.

இருப்பினும் முதலில் ஒரு குழுவுக்கு தற்செயலாக அரை டோஸ் கொடுத்ததால் அவர்கள் முதலில் 90% பாதுகாக்கப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் இது பற்றி சொரியட் கூறியதாவது, இரண்டு டோஸ் சோதனைகளுக்கு பிறகு நாங்கள் வெற்றிகரமான தடுப்பூசி ஃபார்முலாவை கண்டறிந்துள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்தார். மேலும் இது குறித்த தகவல்களை என்னால் சொல்ல முடியாது. இதனை நாங்கள் ஒரு கட்டத்தில் அதிகாரபூர்வமாக வெளியிடுவோம்," என்று கூறியுள்ளார்.

covid vaccine

கொரோனா வைரசுக்கு எதிரான போரை மாற்றும் ஒன்றாக ஆக்ஸ்போர்டு தடுப்பூசி செயல்படும் என இங்கிலாந்து அரசாங்கம் கருதுகிறது. ஏனெனில் இதை ஒரு குளிர்சாதன பெட்டியிலும் சேமித்து வைக்கலாம் மற்றும் ஒரு ஷாட் 2 பவுண்டுகள் வரை மட்டுமே செலவாகும். அதுவே ஃபைசர் மருந்து மைனஸ் 70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைக்கப்பட வேண்டும் மற்றும் ஒரு டோஸுக்கு 15 பவுண்டுகள் வரை செலவாகும். கொரோனாவின் புதிய உருமாற்றத்தால் இங்கிலாந்தில் தொற்றுநோய்களின் எண்ணிக்கையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் அந்நாட்டின் பெரும்பகுதி கடுமையான ஊரடங்கு நிலைமைகளின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த நிலையில், புத்தாண்டின் தொடக்கத்தில் ஒரு புதிய தடுப்பூசி பயன்படுத்தப்படுவதற்கான நல்ல செய்தி விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக்ஸ்போர்டு தடுப்பூசி விரைவில் கிடைக்கக்கூடும் என்ற செய்தி மக்களுக்கு ஒரு ஊக்கமாக இருக்கும். இங்கிலாந்து அரசாங்கம் சுமார் 100 மில்லியன் டோஸ் தடுப்பூசிக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் மார்ச் மாத இறுதிக்குள் சுமார் 40 மில்லியன் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிக்கு கட்டுப்பாட்டாளர் ஒப்புதல் அளித்தவுடன், அரங்கங்கள் மற்றும் மாநாட்டு இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பெரிய அளவிலான தடுப்பூசி மையங்கள் ஜனவரி தொடக்கத்தில் தொடங்க தயாராக இருப்பதாக இங்கிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் தடுப்பூசியை பெறுவதற்கான ஒரே வழி, அரசு நிதியளிக்கும் தேசிய சுகாதார சேவை (NHS) மூலம் நிறுவப்பட்ட நெட்வொர்க்குகள் தான். இந்த தடுப்பூசியை பெற பல நோயாளிகள் கோரிக்கை வைத்து வருவதாகவும் அந்நாட்டின் பலவேறு தனியார் கிளினிக்குகள் தெரிவித்து வருகின்றன. மேலும் தடுப்பூசியை பெறுவதற்காக நோயாளிகள் ஆயிரக்கணக்கான பவுண்டுகள் வழங்கிய போதிலும், அவர்கள் சிறுது காலம் காத்திருக்க வேண்டும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
Published by:Sivaranjani E
First published: