கடந்த 30 ஆண்டுகளில் உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களின் எண்ணிக்கை இருமடங்கு உயர்வு : அதிர்ச்சி தகவல்

காட்சி படம்

சுமார் 184 நாடுகளில் 100 மில்லியனுக்கும் அதிகமான 30 முதல் 79 வயதுடைய மக்களிடமிருந்து எடுக்கப்பட்ட இரத்த அழுத்த அளவீடுகளை சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு ஆய்வு செய்தது.

  • Share this:
உலகளவில் உயர் இரத்த அழுத்த பிரசச்னையுடன் வாழும் மக்களின் எண்ணிக்கை கடந்த 30 ஆண்டுகளில் இருமடங்காக அதிகரித்துள்ளதாக தி லான்செட் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. குறிப்பாக இந்த நோய் அதிகரிப்பின் பெரும்பகுதி குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் நிகழ்கிறது என்றும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மூன்று தசாப்தங்களாக சுமார் 184 நாடுகளில் 100 மில்லியனுக்கும் அதிகமான 30 முதல் 79 வயதுடைய மக்களிடமிருந்து எடுக்கப்பட்ட இரத்த அழுத்த அளவீடுகளை சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு ஆய்வு செய்தது.

அந்த கணக்கெடுப்பின்படி, கடந்த 1990ம் ஆண்டில் 331 மில்லியன் பெண்கள் மற்றும் 317 மில்லியன் ஆண்கள் உயர் இரத்த அழுத்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதுவே 2019ம் ஆண்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 626 மில்லியன் பெண்கள் மற்றும் 652 மில்லியன் ஆண்களாக உயர்ந்தது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் 2019 ஆம் ஆண்டில் உலகளவில் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களில் பாதி பேருக்கு அவர்களின் நிலை பற்றியே தெரியாது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

அதிலும் பாதிக்கும் மேற்பட்ட பெண்கள் (53 சதவீதம்) மற்றும் ஆண்கள் (62 சதவீதம்) இந்த பிரச்சனைக்கு சிகிச்சை கூட பெற்றுக்கொள்ளவில்லை என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். இது குறித்து UK, ஆய்வின் மூத்த ஆசிரியரும் லண்டன் இம்பீரியல் கல்லூரியின் பேராசிரியருமான மஜித் ஏசாதி கூறியதாவது, "பல தசாப்தங்களாக உலகில் மருத்துவம் மற்றும் மருந்தியல் சார்ந்த முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், உயர் இரத்த அழுத்த மேலாண்மையில் உலகளாவிய முன்னேற்றம் இன்னும் மெதுவாகவே உள்ளது. மேலும் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் பெரும் குறைபாடுகளுடன் சிகிச்சை வழங்கப்படுவதோடு, உயர் இரத்த அழுத்தம் உள்ள பெரும்பாலான மக்களுக்கு சிகிச்சையே அளிக்கப்படவில்லை" என்று கூறினார்."எங்கள் பகுப்பாய்வு உயர் வருவாய் உள்ள நாடுகளில் மட்டுமல்ல, நடுத்தர வருவாய் உள்ள நாடுகளிலும் உயர் இரத்த அழுத்தத்தைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பதில் நல்ல நடைமுறையை வெளிப்படுத்தியுள்ளது," என்று ஏசாதி கூறினார். இருப்பினும், சில நடுத்தர வருமான நாடுகளில் காணப்படும் சிகிச்சை மற்றும் கட்டுப்பாட்டு விகிதங்களில் பெரிய முன்னேற்றங்கள் காட்டுகின்றன என்று ஆசிரியர்கள் குறிப்பிட்டனர். உலகளாவிய சுகாதார பாதுகாப்பு விரிவாக்கம் மற்றும் முதன்மை பராமரிப்பை வலுப்படுத்துதல் உயர் இரத்த அழுத்த பராமரிப்பை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

உயர் இரத்த அழுத்த பிரச்சனை ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் 8.5 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகளுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. இது பக்கவாதம், இஸ்கிமிக் இதய நோய், பிற வாஸ்குலர் நோய்கள் மற்றும் சிறுநீரக நோய்களுக்கான முன்னணி ஆபத்து காரணியாக இருக்கிறது. இரத்த அழுத்தத்தைக் குறைப்பது பக்கவாதங்களின் எண்ணிக்கையை 35-40 சதவிகிதம், மாரடைப்பு விகிதத்தை 20-25 சதவிகிதம் மற்றும் இதய செயலிழப்பு பிரச்சனையை சுமார் 50 சதவிகிதம் குறைக்கலாம் என்றும் ஆய்வில் கூறப்படுகிறது.

 ஹைப்பர்டென்ஷன் என்பது சிஸ்டாலிக் இரத்த அழுத்தமான 140 மில்லிமீட்டர் பாதரசம் (mm Hg) அல்லது அதற்கு மேற்பட்டது எனவும், டயஸ்டாலிக் இரத்த அழுத்தம் 90 மிமீ எச்ஜி அல்லது அதற்கு மேற்பட்டது எனவும், அல்லது உயர் இரத்த அழுத்தத்திற்கு மருந்து எடுத்துக்கொள்வது என்று வரையறுக்கப்படுகிறது. இதய தசையின் சுருக்கத்தின் போது தமனிகளில் உள்ள அழுத்தத்தின் அளவு சிஸ்டாலிக் அழுத்தம் என்று அழைக்கப்படுகிறது. இதய தசை துடிப்புகளுக்கு இடையில் இருக்கும்போது வரும் இரத்த அழுத்தம் டயஸ்டாலிக் அழுத்தம் என்றும் அழைக்கப்படுகிறது.

ஆய்வில் பங்கேற்றவர்களில் அவர்களின் நாடு, வருடம் மற்றும் வயதிற்கு ஏற்ப உயர் இரத்த அழுத்தம் 140/90 மிமீ எச்ஜிக்கு கீழ் உள்ளவர்கள், உயர் இரத்த அழுத்தத்திற்கான மருந்துகளை எடுத்துக்கொள்பவர்களை கணக்கிட்டு, அதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தின் பரவலை மதிப்பிடுவதற்கும், முந்தைய நோயறிதலைக் கொண்ட உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களின் விகிதத்தை மதிப்பிடுவதற்கும் மாடலிங் பயன்படுத்தப்பட்டது. உலகளவில் உள்ள பெரியவர்களில் உயர் இரத்த அழுத்த பாதிப்பு கடந்த 30 ஆண்டுகளில் பெரிய அளவில் எந்த மாற்றமும் ஏற்படாமல் உள்ளது. அதிலும் 1990 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் உலகளாவிய பெரியவர்களில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் உயர் இரத்த அழுத்தத்துடன் வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Also read : உயிரை பறிக்கும் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்க நீங்கள் செய்யும் இந்த தவறுகள்தான் காரணம்..!

அதுவே, அதிக வருவாய் உள்ள நாடுகளில் விகிதங்கள் கடுமையாக குறைந்துவிட்டன. ஆனால் பல குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் (LMICs) குறிப்பாக ஓசியானியாவில் அதிகரித்துள்ளது அல்லது பாதிப்பு எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கனடா மற்றும் பெரு ஆகிய நாடுகளில் கடந்த 2019 ஆம் ஆண்டில் உயர் இரத்த அழுத்தத்துடன் வாழும் மக்கள் மிகக்குறைந்த விகிதத்தில் அதாவது 4ல் 1 என்ற அளவில் இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்சனையால் பாதிக்கப்படும் பெண்களை பொறுத்தவரை, தைவான், தென் கொரியா, ஜப்பான் மற்றும் மேற்கு ஐரோப்பாவின் சில நாடுகள் மற்றும் சுவிட்சர்லாந்து, ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் மிகக் குறைந்த இரத்த அழுத்த பாதிப்பு விகிதங்களைக் கொண்டுள்ளன. அதே நேரத்தில் எரித்திரியா, பங்களாதேஷ், எத்தியோப்பியா மற்றும் சாலமன் தீவுகள் ஆண்களில் மிகக் குறைந்த பாதிப்பு விகிதங்களைக் கொண்டிருந்தன.

Also read :  டைப் 2 நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகளும்… இன்றே தவிர்க்க வேண்டிய உணவுகளும்…

மற்றொரு உச்சத்தில், 2019 இல் பராகுவே மற்றும் துவாலுவில் பாதிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தது. தவிர, அர்ஜென்டினா, பராகுவே, தஜிகிஸ்தான் மற்றும் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள பல நாடுகளில் பாதிக்கும் மேற்பட்ட ஆண்களுக்கும் பாதிப்பு இருந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். 1990 முதல் பெரும்பாலான நாடுகளில் சிகிச்சை மற்றும் கட்டுப்பாடு மேம்பட்டுள்ளது. குறிப்பாக கனடா, ஐஸ்லாந்து மற்றும் தென் கொரியா போன்ற அதிக வருமானம் கொண்ட நாடுகளில் பெரிய முன்னேற்றங்கள் காணப்பட்டுள்ளன. இருப்பினும், துணை-சஹாரா ஆப்பிரிக்கா மற்றும் ஓசியானியா, நேபாளம் மற்றும் இந்தோனேசியாவில் எல்எம்ஐசி-களில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது.இது குறித்து WHO, சுவிட்சர்லாந்தின் ஆய்வின் இணை ஆசிரியர் லீன் ரிலேகூறியதாவது, "உலகின் ஏழ்மையான நாடுகளில் நீடிக்கும் குறைந்த கண்டறிதல் மற்றும் சிகிச்சை விகிதங்கள், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சப்-சஹாரா ஆப்பிரிக்கா, ஓசியானியா மற்றும் தெற்கு ஆசிய நாடுகளில் வாஸ்குலர் மற்றும் சிறுநீரக நோய்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். எனவே, ஆரம்ப சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் உலகளாவிய சுகாதாரக் காப்பீட்டின் ஒரு பகுதியாக உயர் இரத்த அழுத்தத்தைக் கண்டறிந்து சிகிச்சையளிக்கும் இந்த நாடுகளின் திறனை மேம்படுத்துவது துரிதப்படுத்தப்பட வேண்டும்," என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த ஆய்வானது, உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ள மக்களில் இரத்த அழுத்தம் பாதிப்பு, நோய் கண்டறிதல், சிகிச்சை மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றுடன் ஒப்பிடக்கூடிய முதல் மதிப்பீடுகளை வழங்குகையில், சில நாடுகளில், குறிப்பாக சஹாரா ஆப்பிரிக்கா, ஓசியானியா மற்றும் துணை நாடுகளில் தரவு பற்றாக்குறையால் மக்கள் மேலும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published: