கொரோனா வைரஸ் பரவலின் ஆரம்ப காலத்தில் ஊரடங்கு போடப்பட்ட பின்னர் படிப்படியாக தொழில் துறைகள், போக்குவரத்து, உணவகங்கள் ஆகியவை திறக்கப்பட்டன. குறிப்பாக பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற உத்தரவிடப்பட்டன. இதனால், கொரோனா வைரஸ் தொற்றுநோய் உலக மக்களின் தினசரி வாழ்க்கையை சற்று மாற்றியுள்ளது. முகக்கவசங்கள், கையுறைகள், முக கவர்கள், சானிடைசர்கள் ஆகியவை ஒருவரின் அத்தியாவசிய தேவைகளின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டன. அதுமட்டுமல்லாது, பொது இடங்களில் சமூக விலகல் என்பது கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய ஒன்றாக மாறியுள்ளது.
ஏனெனில் கொரோனா பாதித்த ஒருவரிடம் இருந்து வெளியாகும் வைரஸ் காற்றின் மூலம் பரவும் தன்மை கொண்டது. எனவே, வைரஸ் பரவலை தடுக்க பொதுவெளியில் மக்கள் 6 அடி இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என கூறப்பட்டது. அதன்படி, உணவகங்கள், கடைகள், மால்கள் என பொதுஇடங்களுக்கு செல்லும் மக்கள் 6 அடி இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டனர். ஆனால் தற்போதைய ஆய்வு ஒரு புதிய தகவலை தெரிவித்துள்ளது. அதாவது உணவகங்களுக்கு ( RESTAURANT) சென்று சாப்பிடும் நபர்கள் பேசாமல் சாப்பிட்டால் கொரோனா வைரஸ் பரவலை குறைக்கலாம் எனக் கூறியுள்ளனர்.
கொரோனா வைரஸை 6 மீட்டரை தாண்டியும் பரவலாம் என்று முடிவு செய்ததால் மக்கள் உணவகங்களில் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் உணவகத்தில் உட்புற இடங்களில் அமர்ந்து சாப்பிடும், வாடிக்கையாளர்களிடையே ஒரு ‘காற்று பகிர்வு’ வைக்கப்பட வேண்டும் அல்லது தொற்று பரவாமல் இருக்க வாடிக்கையாளர்களை தனி அறைகளில் அமர வைக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில், தென் கொரியாவின் ஜியோன்ஜூவில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிட்ட மக்கள் கொத்தாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டது குறித்த ஆய்வுக்குப் பிறகு இந்த பரிந்துரைகளை ஆராய்ச்சியாளர்கள் முன்வைத்துள்ளனர்.
இந்த ஆய்வு சி.சி.டி.வி காட்சிகள், தொடர்பு தடமறிதல் நேர்காணல்கள் மற்றும் மொபைல் போன் இருப்பிட தரவுகளை ஆராய்ந்த பின்னர் இது முடிவுக்கு வந்தது. அதில் ஒரு நோயாளி வெறும் ஐந்து நிமிடத்தில் 6.5 மீட்டர் தொலைவில் இருந்த பொது பாதிக்கப்பட்டுள்ளார். மற்றொரு நோயாளி 15 நிமிட வெளிப்பாட்டிற்குப் பிறகு 4.8 மீட்டர் தொலைவில் (social distance) பாதிக்கப்பட்டார்.
அவர்கள் இருவரும் கொரோனா பாதித்த ஒரு நோயாளியுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை. இருப்பினும், அதே உணவகத்தில் அவர்களுக்கு அருகில் வைக்கப்பட்ட மேசைகளில் அமர்ந்திருந்த மற்ற நபர்களுக்கு இந்த நோய்த்தொற்று பரவவில்லை.
ஜிம்மிற்கே போகாமல் உடல் எடையைக் குறைக்க வேண்டுமா..? அதுக்கு இந்த ஒர்க் அவுட் செய்தால் போதும்..!
இதையடுத்து சீலிங்கில் பொருத்தப்பட்ட ஏர் கண்டிஷனர்களால் உருவாக்கப்பட்ட காற்றோட்டம் மூலம் வைரஸ் ஒரு நீண்ட தூரத்திற்கு எவ்வாறு பரவியிருக்கலாம் என்பதைப் புரிந்துகொள்வதற்கான ஒரு பகுதியாக ஆய்வுகள் நடத்தப்பட்டன.
அதிலிருந்து, தும்மல், இருமல் மற்றும் பேசுவதன் மூலம் பரவும் சுவாச துளிகளுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்ப்பதற்கு குறைந்தபட்சம் ஒன்று முதல் இரண்டு மீட்டர் சமூக இடைவெளி தேவை என்று நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. கொரியாவில் நடந்த நிகழ்வுகள் மூலம், உணவகத்தில் சீலிங் வகை ஏர் கண்டிஷனர்கள் பொருத்தப்பட்டிருப்பதால் நீர்த்துளிகள் அதிக தூரம் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.
இது குறித்து கொரிய மருத்துவ அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, “பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து நேரடி காற்றோட்டம் இருந்தால் இரண்டு மீட்டருக்கும் அதிகமான தூரத்தில் கூட நீர்த்துளிகள் மூலம் வைரஸ் பரவுதல் ஏற்படலாம்” என தெரிவித்துள்ளது.எனவே, இந்த தொற்று நோயைக் கட்டுப்படுத்த கொரோனா வைரஸுக்கான தடுப்பு, தொடர்பு தடமறிதல் மற்றும் தனிமைப்படுத்தல் உள்ளிட்டவற்றில் புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் தேவை என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உட்புற உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளில் உள்ள மேஜைகள் பிரிக்கப்பட வேண்டும் அல்லது இரண்டு மீட்டருக்கு மேல் இடைவெளி விட்டு வைக்கப்பட வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைத்துள்ளனர். கூடுதலாக, உணவகங்கள் போன்ற உட்புற அமைப்புகளில், முகக்கவசங்கள் உணவு சாப்பிடும் போது மட்டுமே அகற்றப்பட வேண்டும் என்றும் சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் அணிய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். அதே நேரத்தில் உணவு சாப்பிடும் போது பிறருடன் உரையாடல் மற்றும் உரத்த பேச்சு அல்லது கூச்சல் தவிர்க்கப்பட வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.