பெர்ரிக்கள், காய்கறிகள், மீன், முழு தானியங்கள் மற்றும் ராப்சீட் ஆயில் உள்ளிட்டவற்றை கொண்ட நோர்டிக் டயட் (nordic diet) மிகவும் ஆரோக்கியமான, சுவையான மற்றும் நிலையான டயட்டாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நோர்டிக் டயட் என்பது நோர்டிக் நாடுகளில் கிடைக்கும் உள்ளூர் உணவுகளில் கவனம் செலுத்தும் ஒரு டயட் முறை ஆகும்.
நார்வே, டென்மார்க், சுவீடன், பின்லாந்து மற்றும் ஐஸ்லாந்து உள்ளிட்ட நாடுகளும், டென்மார்க் நாட்டை சேர்ந்த பிரதேசங்களான கிரீன்லாந்து, பரோயே தீவுகள், பின்லாந்தை சேர்ந்த ஓலாண்ட் மற்றும் நார்வே நாட்டை சேர்ந்த சான் மேயன் , சுவால்பாத் தீவுகளும் நோர்டி நாடுகளின் அமைப்புக்குள் இருக்கின்றன. இந்நிலையில் கோபன்ஹேகன் பல்கலைக்கழகம் நடத்திய புதிய ஆய்வு ஒன்றில், குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் அளவு போன்ற இதய நோய்களின் அபாயத்தையும் நோர்டிக் டயட் குறைக்கும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர். 'கிளினிக்கல் நியூட்ரிஷன்' என்ற இதழில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. கோபன்ஹேகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நோர்டிக் டயட் அதிக எடை கொண்டவர்களுக்கும் கூட குறைந்த கொழுப்பு, குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் ரத்தக் கட்டிகளின் அபாயத்தைக் குறைத்தல் போன்ற குறிப்பிடத்தக்க ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும் என்று கண்டறிந்துள்ளனர்.
புதிய ஆய்வு முடிவு குறித்து பேசிய கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்து, உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு துறை பிரிவின் தலைவரான லார்ஸ் ஓவ், இது ஆச்சரியமாக இருக்கிறது, ஏனென்றால் பெரும்பாலான மக்கள் ரத்த சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் மீதான நேர்மறை விளைவுகள் எடை இழப்புக்கு மட்டுமே காரணமாகிறது என்று நம்புகிறார்கள். ஆனால் இங்கே இது அப்படி இல்லை என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம் என கூறியுள்ளார்.
ஃபின்லாந்து, நார்வே, ஸ்வீடன் மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுடன் சேர்ந்து, 50 வயதுக்கு மேற்பட்ட 200 பேரின் ரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது. இவர்கள் அனைவருமே அதிக பிஎம்ஐ அளவு கொண்டவர்கள். எனவே நீரிழிவு மற்றும் இதய நோய்க்கான அதிக ஆபத்தை கொண்டவர்கள். இவர்கள் 2 குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். ஒரு குழுவிற்கு நோர்டிக் டயட் பரிந்துரைகளின்படி உணவுகளை வழங்கப்பட்டது. மற்றொரு குழுவினர் தங்கள் வழக்கமான டயட்டை கடைப்பிடிக்க கேட்டு கொள்ளப்பட்டனர்.
6 மாத கண்காணிப்புக்குப் பிறகு 2 குழுவினரையும் பரிசோதித்த போது நோர்டிக் டயட்டை பின்பற்றாதவர்களை விட இந்த டயட்டை பின்பற்றிய த குழுவினரின் ஆரோக்கியம் கணிசமாக மேம்பட்டிருந்தது. குறைந்த கொழுப்பு அளவுகள், ரத்தத்தில் நிறைவுற்ற மற்றும் நிறைவுறா கொழுப்பு இரண்டின் ஒட்டுமொத்த அளவுகள் மற்றும் குளுக்கோஸின் சிறந்த அளவு என அனைத்தும் நன்றாக இருந்தது. இதுபற்றி கூறி உள்ள ஆராய்ச்சியாளர்கள் ‘நோர்டிக் டயட் குழுவினரை நாங்கள் நிலையான எடையுடன் வைத்திருந்தோம். அதாவது அவர்கள் உடல் எடை குறைந்தால் இன்னும் அதிகம் சாப்பிடும்படி அவர்களிடம் கேட்டோம். எடை குறையாமல் இருந்தாலும் அவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் காண முடியும் என்பதை கண்டறிந்தோம்’ என்றனர். எனினும் நோர்டிக் டயட்டால் அடிக்கடி ஏற்படும் எடை இழப்பு டயட்டின் ஒட்டுமொத்த ஆரோக்கிய நன்மைகளுக்கு மிகவும் முக்கியமானது என்று ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.