ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்பும் மக்களிடையே சமீப ஆண்டுகளாக வீகன் டயட் ஒரு ட்ரெண்டாக இருந்து வருகிறது. வீகன் டயட் என்பது வழக்கமான சைவ உணவு பழக்கத்தோடு பால் மற்றும் பனீர், தயிர், சீஸ், நெய் போன்ற பால் சார்ந்த பொருட்கள், விலங்குகளிடமிருந்து பெறப்படும் முட்டை, எண்ணெய் போன்ற உணவுகளையும் தவிர்க்கும் டயட் முறையே வீகன்.
இதய நோய் அபாயத்தை குறைப்பது, உடல் எடையை பராமரிப்பது மற்றும் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைப்பது, நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவது உட்பட பல ஆரோக்கிய நன்மைகளை இந்த டயட் முறை கொண்டுள்ளது. இருப்பினும் சிலர் இந்த வீகன் டயட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்று மிக தீவிரமாக பின்பற்றுகிறார்கள். எப்படி என்றால் முற்றிலும் சமைக்காமல் சாப்பிட கூடிய மூல தாவர உணவுகளை (raw plant foods) மட்டுமே சாப்பிடுகிறார்கள். உதாரணமாக சமைக்கப்படாத முளைக்கட்டப்பட்ட தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை உணவாக எடுத்து கொள்கிறார்கள்.
இப்படிப்பட்ட டயட்டை பின்பற்றுபவர்கள் சமைப்பதால் உணவுகளில் உள்ள முக்கிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் நொதிகளை இழக்க நேரிடுகிறது என்று கூறுகின்றனர். மேலும் சமைக்காத மூல தாவர உணவுகளை மட்டுமே சாப்பிடுவதால் தங்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் இன்னும் மேம்படும் என்று நம்புகிறார்கள். ஆனால் சுத்த சைவ உணவுகளை சமைக்காமல் அப்படியே பச்சையாக சாப்பிடும் பழக்கத்தை தொடர்ந்து பின்பற்றுவது நன்மைக்கு பதிலாக பல தீமைகளை ஏற்படுத்தும் என புதிய ஆராய்ச்சி கூறுகிறது.
காரணம் என்ன..?
சமைத்த உணவுகளை விட பச்சையாக அப்படியே சாப்பிட கூடிய சில உணவுகள் ஆரோக்கியமானதாக இருக்கலாம் என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஏனென்றால் சமைத்து சாப்பிடுவதால் உணவுகளில் உள்ள சில முக்கிய ஊட்டச்சத்துக்களை நாம் இழக்க நேரிடலாம். உதாரணமாக பிரஸ்ஸல் ஸ்ப்ரெளட்ஸ் மற்றும் ரெட் கேபேஜ் உள்ளிட்டவை சமைப்பதால் அதில் இருக்கும் தயாமின் கன்டென்ட் சுமார் 22% வரை இழக்கப்படுகிறது. இந்த Thiamine நம் நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும் வைட்டமின் பி1-ன் வடிவமாகும். சில காய்கறிகள் சமைக்கும் போது ஊட்டச்சத்துக்களை இழக்கும் அதே நேரம் மற்றவை சமைக்கும் போதும் ஊட்டச்சத்துக்களை இழக்காமல் இருக்கின்றன.
Also Read : எடை குறையணுமா? இந்த பழக்கத்தை கட்டாயம் மாத்தணும்!
காய்கறிகளின் செல் சுவர்களில் சில ஊட்டச்சத்துக்கள் பிணைக்கப்படுவதே இதற்கு காரணம். சமைப்பது என்பது செல் சுவர்களை உடைத்து, ஊட்டச்சத்துக்களை வெளியிட மற்றும் உடலால் எளிதில் உறிஞ்ச அனுமதிக்கிறது. உதாரணமாக கீரைகளை சமைக்கும் போது அதில் உள்ள கால்சியத்தை நம் உடலால் எளிதில் உறிஞ்சி கொள்ள முடியும். அதே நேரம் தக்காளியை சமைப்பதால் அவற்றின் வைட்டமின் சி உள்ளடக்கம் 28% வரை குறைகிறது மற்றும் அவற்றின் லைகோபீன் உள்ளடக்கம் 50%-க்கும் அதிகமாகிறது என ஆய்வு கூறுகிறது.
கேன்சர், இதய நோய் உள்ளிட்ட நாட்பட்ட நோய்களுக்கான குறைந்த அபாயத்துடன் தொடர்புடையது இந்த லைகோபீன். சமைத்த பிறகு அதிக ஊட்டச்சத்து மிக காய்கறிகளில் மஷ்ரூம்ஸ் , கேரட், ப்ரோக்கோலி, காலே மற்றும் காலிஃபிளவர் உள்ளிட்டவை அடங்கும். மேலும் சமைக்கபட்ட காய்கறிகள் நம் உடலுக்கு அதிக ஆன்டி-ஆக்ஸிடன்ட்களை வழங்குகின்றன. இவை ஃப்ரீ ரேடிக்கல்ஸ் எனப்படும் தீங்கு விளைவிக்கும் மூலக்கூறுகளுக்கு எதிராகப் போராட கூடியவை.
அதே போல சில காய்கறிகளில் பீட்டா கரோட்டின், லுடீன் மற்றும் லைகோபீன் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் சமைத்த பின் அதிகமாக உள்ளது. தாவர அடிப்படையிலான உணவுகளை தொடர்ந்து எடுத்து கொள்பவர்களுக்கு வைட்டமின் மற்றும் மினரல்ஸ் குறைபாடுகள் பொதுவானவை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஏனென்றால் முக்கிய வைட்டமின்ஸ் & மினரல்ஸ் அதிக அளவில் உள்ள பல உணவுகள் இறைச்சி மற்றும் முட்டை போன்ற விலங்கு உணவுகளிடமிருந்து கிடைக்கின்றன.
வைட்டமின் பி 12, வைட்டமின் டி, செலினியம், துத்தநாகம், இரும்பு மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளிட்டவற்றுக்கு மூளை மற்றும் நரம்பு செல்களின் கட்டமைப்பு, வளர்ச்சி மற்றும் உற்பத்தி ஆகியவற்றில் முக்கிய பங்கு உண்டு. குறிப்பாக Raw Vegan Diet-ஐ பின்பற்றுபவர்களுக்கு வைட்டமின் பி12 குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைட்டமின் பி12 குறைபாடானது பார்வை கோளாறுகள், மஞ்சள் காமாலை, வாய் புண்கள், மனச்சோர்வு மற்றும் பிற மனநிலைக் கோளாறுகள் உட்பட பல கோளாறுகளுடன் தொடர்புடையது.
ALSO READ : டயட்டில் அரிசி சாதமா..? இனி வேண்டாம் என்ற பேச்சுக்கே இடமில்லை - நிபுணர்கள் அட்வைஸ்!
சமைக்காமல் எடுக்கப்படும் வீகன் டயட் இதய நோய், பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்க கூடும் ஹோமோசைஸ்டீன் அளவை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதையும் ஆய்வு கண்டறிந்துள்ளது. அதே போல 45 வயதிற்குட்பட்ட பெண்களில் 30% பேர் சுமார் 3 வருடங்களுக்கும் மேலாக சமைக்காத பச்சை சைவ டயட்டை பின்பற்றியதால் மாதவிடாய் சுழற்சியில் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதையும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். தாவர அடிப்படையிலான உணவை பின்பற்றுவது ஆரோக்கியமான விஷயம் என்றாலும் கவனமுடன் பின்பற்றாவிட்டால் உடல்நலத்திற்கு பெரிய ஆபத்துகளை ஏற்படுத்த கூடும் என்பதே ஆய்வாளர்களின் எச்சரிக்கை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Vegan diet