Home /News /lifestyle /

அம்மை நோய்க்கு முறையான மருத்துவ சிகிச்சை அவசியமா..? வீட்டு வைத்தியங்கள் செய்வது சரியா..? மருத்துவர் விளக்கம்..!

அம்மை நோய்க்கு முறையான மருத்துவ சிகிச்சை அவசியமா..? வீட்டு வைத்தியங்கள் செய்வது சரியா..? மருத்துவர் விளக்கம்..!

அம்மை நோய்

அம்மை நோய்

அம்மை நோய் என்பது ஒரு வகை வைரஸ் தொற்று. இது காற்றின் மூலமாகவோ அல்லது பாதிக்கப்பட்டவரின் உடமைகளை பயன்படுத்துவதாலும் வேகமாக பரவுகிறது.

எந்த பருவகால மாற்றம் வந்தாலும் அதோடு சேர்ந்து வைரஸ் தொற்றுகளையும் , நோய்களையும் கொண்டு வரும். காரணம் அந்த வைரஸுகள் அந்த தட்ப வெப்பம் மற்றும் தகவமைப்புக்குள் மட்டுமே வாழக்கூடியதாக இருக்கும். எனவே அது மனிதர்களை தாக்கி நோய்களை உண்டாக்குகிறது. எனவேதான் எப்போதும் வைரஸ் தொற்றுகள், நோய் கிருமிகளை எதிர்த்து போராட நோய் எதிர்ப்பு சக்தி அவசியம் என்பார்கள். அதுமட்டுமன்றி அந்த அந்த பருவ நிலைக்கு ஏற்ப உணவு முறை பழக்கத்தையும் மாற்றிக்கொள்ள வேண்டும்.

அந்த வகையில் இப்போது நமக்கு வெயில் காலம் என்பதால் அது சார்ந்த நோய்களை நமக்கு உண்டாக்கும். அப்படி அதிகமாக வெயில் காலத்தில் பலரையும் தாக்கக் கூடியது அம்மை நோய். இது பெரியவர்களை காட்டிலும் குழந்தைகள், இளம் பருவத்தினரை அதிகமாக தாக்கும்.

நம் இந்திய வீடுகளில் அம்மை நோய் வந்துவிட்டாலே அது தெய்வம் குத்தம், மாரியாத்தா உக்கிரமாக வந்துவிட்டாள் என கூறி வேப்பிலையை வீட்டை சுற்றி கட்டுவதும் , மஞ்சள் தெளிப்பதும் , அவர்களை தனியாக படுக்க வைப்பதும் என வீட்டில் உள்ள பெரியவர்களே அதற்கான சிகிச்சைகளை பார்த்துவிடுவார்கள்.
அதுமட்டுமன்றி அந்த அம்மை நோய் போகும் வரை வீட்டில் எந்த விசேஷங்களையும் செய்ய மாட்டார்கள். நல்ல உணவுகளை சமைத்து சாப்பிட மாட்டார்கள். தாளிப்பு வாசம் கூட வரக்கூடாது என்பார்கள். அவர்கள் வீட்டிற்கும் யாரும் செல்ல மாட்டார்கள். விசேஷங்களுக்குக் கூட உறவினர்கள் அவர்களை அழைக்க மாட்டார்கள். அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மாட்டார்கள்.

இவ்வாறெல்லாம் செய்வது நல்லதா, மூட நம்பிக்கைக்குறிய செயலா , மருத்துவ சிகிச்சைகள் அவசியமா என சிலர் கேட்பதுண்டு. அவர்களின் சந்தேகத்தை போக்கவே சென்னையை சேர்ந்த குவாலிட்டி க்யூர் கிளீனிக்கின் நிறுவனர் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மா விளக்கம் தருகிறார்.



அம்மை நோய் என்றால் என்ன..?

அம்மை நோய் என்பது ஒரு வகை வைரஸ் தொற்று. இது காற்றின் மூலமாகவோ அல்லது பாதிக்கப்பட்டவரின் உடமைகளை பயன்படுத்துவதாலும் வேகமாக பரவுகிறது. இது அதிகபட்சமாக 5 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கும். இதுவும் கிட்டத்தட்ட கொரோனா தொற்று போன்றதுதான் என்கிறார் ஜெயஸ்ரீ.

”நம் முன்னோர்கள் இதை மாரியாத்தாள் என சொல்லி வீட்டுச் சிகிச்சைகள் அளிப்பதற்கு பின்பு மருத்துவம் சார்ந்த அறிவியலும் உள்ளது. இன்று நாம் கொரோனா பரவுகிறது மாஸ்க் அவசியம், தனிமை அவசியம் என எவ்வளவு சொன்னாலும் சிலர் கேட்பதில்லை. ஆனால் கடவுள் மீதான பயமும், பக்தியும் அவர்களை கட்டுப்படுத்தும். அப்படித்தான் முன்னோர்கள் இந்த நோயின் பரவலைக் கட்டுப்படுத்த கடவுள் நம்பிக்கையை மக்கள் நலனுக்காக தினித்துள்ளனர். அதுதான் இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகிறது.

”எப்படி கொரோனாவுக்கு மாஸ்க் அவசியமோ அதேபோல்தான் காற்றில் பரவக் கூடிய அம்மை நோய்க்கும் மாஸ்க், தனிமைப்படுத்துதல் அவசியம். எனவேதான் வீட்டில் அம்மை நோய் வந்துவிட்டால் அவர்களை தனிமைப்படுத்துவார்கள். தீட்டு என சொல்லி அவர்கள் வீட்டிற்கு யாரும் செல்லக் கூடாது என்பார்கள். அவர்கள் பின்பற்றும் அத்தனையும் வைரஸ் பரவலை தடுப்பதற்காக செயல்.



அதேபோல் வேப்பிலை என்பது ஆன்டி-செப்டிக் பண்பு நிறைந்தது. எனவேதான் அதை பாதிக்கப்பட்டவர்களின் படுக்கைக்கு கீழ் வைப்பது , வீட்டை சுற்றிலும் கட்டுவது என செய்வார்கள். முக்கியமாக வீட்டின் முன் வேப்பிலை கட்டி வைப்பதற்குக் காரணம் மற்றவர்கள் அவர்கள் வீட்டிற்குள் வந்துவிடக் கூடாது. வீட்டில் அவர்களுக்கு அம்மை நோய் உள்ளது என்பதை உணர்த்துவதுதான். இன்றைக்கு எப்படி கொரோனா வந்தால் தனிமைப்படுத்தப்பட்ட வீடு என நோட்டீஸ் ஒட்டுகிறார்களோ அப்படித்தான் இதுவும்” என்கிறார் மருத்துவர் ஜெயஸ்ரீ.

கோடையில் உடல் நீர்ச்சத்தை தக்க வைக்கும் தண்ணீர் நிறைந்த பழங்கள் : தினம் ஒன்று சாப்பிடுங்கள்...

எனவே இந்த நோய்க்கு வீட்டு சிகிச்சையே போதுமானது. முறையான தனிமைப்படுத்தலும் , உணவு முறையுமே போதுமானது. அந்த வகையில் அவர்கள் பின்பற்றுவதே சரியான மருத்துவ முறைதான் என்கிறார். பொதுவாக இந்த அம்மை நோய் என்பது குழந்தைகளையே அதிகமாக தாக்கும். காரணம் அவர்கள் பள்ளிகளில் பரிமாற்றம் செய்துகொள்வது, அதிக வியர்வை, வெயில் போன்ற அனைத்து காரணிகளும் அந்த வைரஸுக்கு ஏற்ற சூழலாக இருக்கும். அதேபோல் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைவாக இருக்கும்.

அம்மை நோயில் அதிகபட்சமாக தட்டம்மை, சின்னம்மை மற்றும் பெரியம்மை என மூன்று அம்மை நோய்கள் வரும். அடுத்ததாக சிலருக்கு ருபெல்லா வரலாம்.

வெயில் காலம் தானேனு அளவுக்கு அதிகமாக மோர் குடிக்காதீங்க... மீறினால் இந்த பிரச்சனைகளை சந்திப்பீங்க..!

இதில் தட்டம்மை என்பது உமிழ்நீர் சுரப்பில் கொப்புளங்கள் வந்து தாடை வீங்கும். சின்னம்மையில் சிறு சிறு கொப்புகளங்கள் வரும். பெரியம்மையில் பெரிய பெரிய கட்டிகளாக வரும். இந்த மூன்று அம்மை நோயிலும் காய்ச்சல் பொதுவானதாக இருக்கும். காய்ச்சல் அதிகபட்சம் 3 நாட்கள் இருக்கும். பின் கொஞ்சம் கொஞ்சமாக அம்மையும் மறைந்துவிடும்.



எப்போது இது ஆபத்தாக மாறும்..?

”காய்ச்சல் அதிகமாக இருந்தாலோ அல்லது நீண்ட நாட்கள் இருந்தாலோ மருத்துவ சிகிச்சை தேவைப்படும். மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து மாத்திரைகளை உட்கொண்டு அதேசமயம் வீட்டு வைத்தியங்களையும் எப்போதும்போல் பின்பற்றி வந்தால் குணமாகிவிடும் என்கிறார்.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அடிக்கடி உடல் நலன் பாதிக்கப்படுவது ஏன்..?

அம்மை நோய் இப்போது அதிகமாக யாரையும் தாக்குவதில்லை. காரணம் 2 வயதை எட்டுவதற்கு முன்பே தட்டம்மை தடுப்பூசிகள் போட்டுவிடுவதால் அம்மை நோய் பரவல் குறைந்துவிட்டது. அப்படி மீறி வந்தால் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு முதல் காரணமாக இருக்கலாம்” என்கிறார்.

அம்மை நோய் வந்துவிட்டால் அல்லது வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்..?

  • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெளியே சென்று வந்தால் வீட்டிற்குள் நுழையும் முன் கை கால்களை கழுவ வேண்டும். உடுத்திய ஆடையை உடனே மாற்றிவிட வேண்டும். முடிந்தால் குளித்துவிடுவது நல்லது.

  • மாஸ்க், சானிடைசர்கள் பயன்படுத்துதல் நல்லது. கைக்கழுவுவதும் அவசியம்.

  • மருத்துவரின் அலோசனை பெற்று பூஸ்டர் தடுப்பூசிகள் போட்டுக்கொள்வது நல்லது. நோய் எதிர்ப்பு சக்தி குறையாமல் பார்த்துக்கொள்வதும் அவசியம்.

  • அதிகமாக வெயில் நேரத்தில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.

  • காரசாரமான உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். செரிமானத்தை குறைக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக லிக்குவிட் உணவுகள், விரைவில் செரிமானிக்கக் கூடிய உணவுகள், நீர்ச்சத்து கொண்ட காய்கறிகள், பழங்கள், கீரைகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும். இறைச்சி உணவுகள் அதிகமாக உண்பதை தவிர்பது நல்லது.

  • நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதிக தண்ணீர் குடிப்பது அவசியம்.


  •  

     
Published by:Sivaranjani E
First published:

Tags: Chicken Pox, Summer

அடுத்த செய்தி