• HOME
 • »
 • NEWS
 • »
 • lifestyle
 • »
 • உலக புற்றுநோய் தினம் : ஆண்களுக்கு ஏற்படும் பொதுவான புற்றுநோய்களைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..!

உலக புற்றுநோய் தினம் : ஆண்களுக்கு ஏற்படும் பொதுவான புற்றுநோய்களைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..!

புற்றுநோய்

புற்றுநோய்

ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோயால்  9.6 மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட இறப்புகள் ஏற்படுகிறது.

 • Share this:
  புற்றுநோய் (Cancer) இன்று உலகையே அச்சுறுத்திவரும் மிக முக்கியமான நோய். புற்றுநோய் நம்மை பலவீனப்படுத்தும் நோயாகும். இது உடலின் எந்தவொரு உறுப்பு அல்லது திசுக்களிலும் தொடங்கி அசாதாரணமாகவும் கட்டுப்பாடில்லாமலும் அவற்றின் வழக்கமான எல்லைகளுக்கு அப்பால் வளர்ந்து பிற உறுப்புகளுக்கு பரவுகிறது. ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோயால்  9.6 மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட இறப்புகள் ஏற்படுகிறது.

  மார்பகம், பெருங்குடல், நுரையீரல், கர்ப்பப்பை வாய் மற்றும் தைராய்டு புற்றுநோய் (Breast, Colorectal, Lung, Cervical, and Thyroid cancer) ஆகியவை பெண்களுக்கு ஏற்படும் மிகவும் பொதுவான வகை புற்றுநோயாகும். நுரையீரல், புரோஸ்டேட், பெருங்குடல், வயிறு மற்றும் கல்லீரல் புற்றுநோய் (Lung, Prostate, Colorectal, Stomach, and Liver cancer) ஆகியவை ஆண்களுக்கு ஏற்படும் மிகவும் பொதுவான வகை புற்றுநோயாகும். உலக புற்றுநோய் தினம்  ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

  புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஒருபுறம் உலகெங்கும் நடந்து வந்தாலும் பலரும் நமக்கெல்லாம் கேன்சர் வாராது என்று அசால்டாக சுற்றி வருகின்றனர், குறிப்பாக ஆண்கள். நோய்க்கு ஆண்/பெண் பேதமெல்லாம் தெரியாது, கேன்சர் என்பது அனைவருக்கும் பொதுவானதுதான். இந்த கட்டுரையில் ஆண்களை அதிகம் தாக்கும் புற்றுநோய் குறித்து காண்போம்.  ஆண்களைப் பாதிக்கும் மிகவும் பொதுவான புற்றுநோய்கள் : 

  நுரையீரல் புற்றுநோய் (Lung cancer):

  புகைபிடித்தல் நுரையீரல் புற்றுநோயின் முதன்மை ஆபத்து காரணி என்றாலும், புகைபிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களையும் இது தாக்கும். பொதுவாகவே இந்த நுரையீரல் புற்றுநோய் ஆபத்தான புற்றுநோயாகும். புகைப் பழக்கம், பாஸிவ் ஸ்மோக்கிங் இரண்டும் நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்தும். இதனோடு, ஆஸ்பெஸ்டாஸ், ரேடான், ஆர்சானிக் வாயு போன்றவையும் நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது. மூச்சுத் திணறல், மார்பு வலி, வறட்டு இருமல் அல்லது மூச்சு குழாய் பகுதியில் ஏற்படும் பிரச்சனைகளால் சில சிக்கல் ஏற்படும். இது நுரையீரல் புற்று நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். அது மட்டுமின்றி இருமும்போது இரத்தம் வந்தால் சற்றும் தாமதிக்கக்கூடாது. அதேபோல் மார்பு மற்றும் தோள்பட்டையில் தொடர்ச்சியாக வலி இருப்பதும் நுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகள்தான்.

  புரோஸ்டேட் புற்றுநோய் (Prostate cancer):

  சிறுநீரகப் புற்றுநோய் வகைகளில் அதிகமாக ஆண்கள் இந்த புரோஸ்டேட் புற்றுநோய்க்குத்தான் ஆளாகின்றனர். ஆரம்ப காலங்களில் இந்தப் புற்றுநோய் வயதான ஆண்களிடம் மட்டுமே தென்பட்டது. ஆனால், சமீபகாலமாக முறையற்ற பழக்கங்கள், மேற்கத்திய உணவுகளின் தாக்கம், சுகாதாரமற்ற வெளிப்புற உணவுகள் உள்ளிட்ட காரணங்களால் 40, 50 வயது ஆண்களிடமே தென்படத் தொடங்கியிருக்கிறது. மேற்கத்திய நாடுகளில் உள்ள ஆண்களை ஒப்பிடுகையில் இந்திய ஆண்களில் இந்தப் புற்றுநோய் விகிதம் குறைவு எனினும் இந்த விகிதம் கணிசமாக உயர்ந்து வருவது கவலை அளிக்கும் விஷயம்.

  ஆண்கள் தங்கள் சிறுநீர்ப் பாதையில் எரிச்சல், அரிப்பு... என ஆணுறுப்பில் எவ்வித பிரச்னை ஏற்பட்டாலும் தகுந்த பரிசோதனை எடுத்துக்கொள்வது நல்லது. மேலும் 35 வயதிற்கு மேல் தாண்டினாலே பி.எஸ்.ஏ இரத்தப்பரிசோதனை எடுத்துக்கொள்வது மிக நல்லது. ஆரம்பகாலத்திலேயே இந்த புரோஸ்டேட் புற்றுநோய் கண்டறியப்பட்டால் நிச்சயம் அதை சரிசெய்யலாம். அதற்கென பிரத்யேக சிகிச்சை முறைகள் இன்று பெருகி உள்ளன.  மார்பக புற்றுநோய் (Breast Cancer):

  ஆண்களைக் காட்டிலும் மார்பகப் புற்றுநோய் பெண்களை அதிகமாகத் தாக்குவதால் அது பெண்களுக்கே உரிய நோயாக சித்தரிக்கப்பட்டுவிட்டது. பெண்களுக்கான விழிப்புணர்வுகள் அதிகம் இருக்கும் நிலையில் ஆண்களுக்கு ஏனோ பெரிதாக கவனம் அளிக்கப்படவில்லை. இதனால் ஆண்கள் தங்களுக்கு வராது என அலட்சியமாக இருந்துவிடக் கூடாது. மார்பகப் புற்றுநோயின் முதல் அறிகுறி மார்பகங்களில் கட்டி. நீங்கள் உடற்பயிற்சி செய்பவரானால், கடுமையான பயிற்சியின் மூலம் வளர்ந்த கொழுப்பு என்று நினைத்துக்கொள்ளலாம். ஆனால் அது கொழுப்பா அல்லது கட்டியா என உறுதி செய்வது அவசியம்.

  ஏனெனில் மார்பகக் கட்டிகள் பெரும்பாலும் வலியை ஏற்படுத்தாது. மென்மையாக இருக்கும். ஒருவேளை புற்றுநோய் பரவத் தொடங்கினால் அக்குள்களில் அதிக வியர்வை, கழுத்து எலும்புகளில் வீக்கம் போன்ற அறிகுறிகள் தெரியும். "மார்பகப் புற்றுநோயால் ஆண்கள் பாதிக்கப்படுவதன் பின்னணியில், மரபு ரீதியான காரணங்கள்தான் முதன்மையானவையாக இருக்கின்றன. தவிர, புகைப்பழக்கம், மதுப்பழக்கம், சிறுவயதிலேயே அதீத கதிரியக்கத்துக்கு உட்படும் சூழல் போன்ற சில காரணிகளும் பட்டியலில் இருக்கின்றன.

  பெருங்குடல் புற்றுநோய் (Colorectal cancer):

  அனைத்து நோய்களையும் போலவே பெருங்குடல் புற்றுநோயை தொடக்கத்திலேயே கண்டுபிடித்துவிட்டால், குணப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் அதிகமாக உள்ளது. ஆனால் விசித்திரம் என்னவென்றால், கோலன் கேன்சர் சிறிது சிறிதாக வளர்ந்து கேன்சர் என்னும் அளவை எட்ட 10 முதல் 15 ஆண்டுகள் எடுத்துக்கொள்கின்றன. 50 வயதுக்கு மேற்பட்டோர் ஆண்டுக்கொரு முறை பெருங்குடல் புற்றுநோய் சோதனை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், தங்கள் குடும்பத்தில் முன்னோர்களுக்கு இந்த நோய் இருப்பின் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  உடல் பருமன், புகைபிடித்தல் மற்றும் அழற்சி குடல் நோய் ஆகியவை தனிநபர்களுக்கு இந்த புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும். பெருங்குடல் புற்றுநோயின் குடும்ப வரலாறு, உடல் செயலற்ற தன்மை, வயது, நார்ச்சத்து நிறைந்த உணவை குறைவாக உட்கொள்வது மற்றும் பதப்படுத்தப்பட்ட மற்றும் இறைச்சிகளை அதிகமாக உட்கொள்வது போன்ற காரணிகள் இந்த புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும்.  கல்லீரல் புற்றுநோய் (Liver cancer):

  பாலூட்டி இனத்தின் உடலின் முக்கிய உறுப்புகளில் ஒன்று கல்லீரல். கல்லீரலில் தான் புரத தொகுப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. நாம் உண்ணும் உணவே உயிர் வேதியியல் செரிமான நிகழ்வுக்கு முக்கியமானதாக உள்ளது. இது வயிற்றின் வலது மேற்பகுதியிலும், உதரவிதானத்திற்கு அடியிலும் அமைந்துள்ளது. கல்லீரல் புற்றுநோயின் அறிகுறிகள் மஞ்சள் காமாலை, பசியின்மை, வயிற்று வலி ஆகியவை ஆகும்.

  ஆல்கஹால் உட்கொள்வதைக் கட்டுப்படுத்துதல், தவறாமல் உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கியமான உணவை உட்கொள்வது, உடல் எடையை நிர்வகிப்பது மற்றும் ஹெபடைடிஸ் பி மற்றும் சி வைரஸ்கள் பாதிக்கப்படாமல் உங்களைப் பாதுகாத்துக் கொள்வது போன்ற தடுப்பு நடவடிக்கைகள் கல்லீரல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும். ஏறக்குறைய மூன்று மணிநேர இடைவெளியில் ஐந்து அல்லது ஆறு சிறிய உணவை உண்ண வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அவ்வாறு செய்வதன் மூலம், உங்கள் உடல் போதுமான ஊட்டச்சத்துக்கள், புரதங்கள் மற்றும் கலோரிகளைப் பெறுகிறது. இது குமட்டல் போன்ற உங்கள் கல்லீரல் புற்றுநோய் சிகிச்சை தொடர்பான பக்க விளைவுகளை குறைக்கும்.

  புற்றுநோய் பாதிப்புள்ள குடும்பப் பின்னணி இருப்பவர்கள் முன்னெச்சரிக்கையோடு இருத்தல் அவசியம். குறிப்பாக, நெருங்கிய பெண் உறவுக்கு, அதாவது தாய் அல்லது சகோதரிகளுக்கு புற்றுநோய் இருந்திருந்தால், நீங்களும் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம். இப்படியானவர்கள், உடலில் தெரியவரும் எந்தவொரு வேறுபாட்டையும் உதாசீனப்படுத்தக் கூடாது.

   

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sivaranjani E
  First published: