பெண்களுக்கு 40 வயதுக்கு மேற்பட்ட காலத்தில் மாதவிலக்கு முற்றிலுமாக நின்று போவதையே மெனோபாஸ் என்று உலக சுகாதார நிறுவனம் வரையறுத்துள்ளது. அதாவது தொடர்ச்சியாக 12 மாதங்களுக்கு மாதவிலக்கு ஏற்படவில்லை என்றால் மட்டுமே பெண்கள் மெனோபாஸ் அடைந்ததாக அர்த்தம்.
சராசரியாக மேற்கத்திய நாடுகளில் பெண்கள் 51ஆவது வயதில் மெனோபாஸ் அடைகின்றனர். ஆனால், இந்தியாவில் இந்த நிலையை எட்டும் பெண்களின் சராசரி வயது 46.2 ஆக உள்ளது.
மெனோபாஸ் என்பது பெரும் விஷயமா..?
உடல் உஷ்ணம், எரிச்சல், மன அழுத்தம், கவலை, தூக்கமின்மை, உடல் எடை கூடுதல் மற்றும் மரபு ரீதியான பிரச்சினைகள் போன்ற பக்க விளைவுகளுடன் தான் மெனோபாஸ் ஏற்படுகிறது. தொடர்ச்சியாக சிறுநீர் பாதை தொற்று ஏற்படுவது, பிறப்புறுப்பில் வறட்சி நிலவுவது, பாலியல் வேட்கை குறைவது மற்றும் பெண்ணுறுப்பு வறட்சி காரணமாக பாலுறவு கொள்ளும்போது வலி போன்ற தொந்தரவுகளும் ஏற்படுகின்றன.
இதுகுறித்து ரோஸ்வால்க் ஹெல்த்கேர் மற்றும் ஃபோர்டிஸ் லா பெம்மீ நிறுவனத்தில் மகப்பேறு மருத்து நிபுணராக பணிபுரியும் ஷெல்லி சிங் கூறுகையில், “மெனோபாஸ் காரணமாக ஏற்படும் நீண்ட கால பாதிப்புகளில் ஒன்று எலும்புகளின் தேய்மானம் ஆகும். ஈஸ்ட்ரோஜன் உற்பத்தி குறைவதன் காரணமாக இவ்வாறு நிகழுகிறது. இதன் எதிரொலியாக எலும்பு முறிவு, கார்டியாக் அரெஸ்ட், அல்சைமர் போன்ற நோய்களும் ஏற்படும்’’ என்று தெரிவித்தார்.
கடந்த காலங்களில் இந்த பக்க விளைவுகள் எல்லாம் வயோதிகத்தின் ஒரு அங்கம், இதெல்லாம் இயற்கையானது என்ற சமரசத்தோடு பெண்கள் வாழ்ந்து வந்தனர். ஆனால், இப்போதெல்லாம் அதிகரித்த விழிப்புணர்வு மற்றும் ஆரோக்கியமான வாழ்வியல் மாற்றங்கள் மூலமாக இதற்கு தீர்வு கண்டு வருகின்றனர்.
மெனோபாஸ் தொந்தரவுகளை சரி செய்வதற்கான வாய்ப்புகள் என்ன?
ஹார்மோன் மாற்று தெரஃபி, ஹார்மோன் அல்லாத தெரஃபி, பெண்ணுறுப்பில் க்ரீம் மற்றும் லூப்ரிகண்ட் அப்ளை செய்வது, ஊட்டச்சத்துகளை எடுத்துக் கொள்வது, கால்சியம், வைட்டமின் டிபோன்ற சத்து மாத்திரைகளை உண்பது மற்றும் ஆரோக்கியமான உணவு, உடல் எடை பரிசோதனை, தினசரி உடற்பயிற்சி போன்ற வாழ்வியல் மாற்றங்கள் மூலமாக இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்று மருத்துவர் ஷெல்லி சிங் குறிப்பிட்டர்.
Also read : பிரசவத்திற்குப் பின் பிட்டாக இருக்க வேண்டுமா? இந்த உடற்பயிற்சியை செய்யுங்கள் போதும்!
எனினும், ஹார்மோன் மாற்று தெரஃபி நல்ல சிகிச்சை முறைதானா என்று பார்க்க வேண்டியுள்ளது. இந்த சிகிச்சையை மேற்கொண்டால் ஸ்டிரோக், ஹார்ட் அட்டாக், மார்பக புற்றுநோய் மற்றும் உடல் எடை கூடுதல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. ஆனால், இவை உண்மைதானா என்று ஆராய வேண்டியுள்ளது.
இதுகுறித்து மருத்துவர் ஷெல்லி சிங் விளக்கம் அளிக்கையில், “இந்த கேள்விகளை நோயாளிகள் அடிக்கடி எங்களிடம் முன்வைக்கின்றனர். கடந்த 1960களில் மெனோபாஸ் தொந்தரவுகளுக்கு துரிதமான முறையில் தீர்வு தரக் கூடியதாக இந்த ஹார்மோன் மாற்று சிகிச்சை இருந்தது.
எனினும் மகளிர் சுகாதாரம் குறித்து அமெரிக்காவில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதில் 50 முதல் 70 வயதுக்கு உட்பட்ட மெனோபாஸ் அடைந்த பெண்களை கொண்டு 10 ஆண்டுகளுக்கு ஆய்வு செய்து, அதன் முடிவுகள் 2002ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டன. இதன்படி குறிப்பிட்ட ஒற்றை ஹார்மோன் சிகிச்சை காரணமாக மலக்குடல் புற்றுநோய் வருவதாக கண்டறிந்தனர். அதேபோல இதய நோய்கள், ஸ்டிரோக், மார்பக புற்றுநோய் போன்றவற்றுக்கான அபாயங்கள் அதிகரிக்கின்றன’’ என்று தெரிவித்தார்.
ஆனால், இந்த ஆய்வு முடிவுகள் குறித்த செய்தி தீயாக பரவிய நிலையில், இதனால் அச்சமடைந்த பெண்கள் ஹார்மோன் தெரஃபி செய்து கொள்வதை தவிர்த்து வருகின்றனர். எனினும், மெனோபாஸ் தொந்தரவுகளை எதிர்கொள்ள குறுகிய காலத்திற்கு இந்த சிகிச்சையை எடுத்துக் கொண்டால் எந்த பாதிப்பும் இல்லை என்பதை பலரும் கவனத்தில் கொள்ளவில்லை.
Also read : ஆரோக்கியமற்ற இந்த உணவு பொருட்களுக்கு கட்டாயம் “நோ” சொல்லுங்க..!
இறுதி முடிவு என்ன?
60 வயதுக்கு உட்பட்ட பெண்கள் மற்றும் மெனோபாஸ் அடைந்து 10 ஆண்டுகளுக்கு உள்ளான பெண்களுக்கு ஹார்மோன் தெரஃபி சிகிச்சை அளிப்பதால் எந்தவித பாதிப்புகளும் கிடையாது. இதுகுறித்து மருத்துவர் ஷெல்லி சிங் கூறுகையில், “மெனோபாஸ் காலத்தில் ஏற்படும் உடல் உஷ்ணம், பெண்ணுறுப்பு வறட்சி, இதய நோய் போன்றவற்றை ஹார்மோன் தெரஃபி மூலமாக தவிர்க்க முடியும்.
அதேபோல பெண்களின் பாலுறவு நடவடிக்கையும் மேம்படும். அதே சமயம், எந்தவொரு அளவீடும் எல்லோருக்கும் பொருந்தாது என்பதையும் கவனிக்க வேண்டும். ஒவ்வொரு பெண்ணும் ஆய்வு செய்யப்பட்டு, அவரது மருத்துவ வரலாறு பரிசீலனை செய்யப்பட்டு, அவர்களுக்கான சிகிச்சை வரையறுக்கப்பட வேண்டும். சில பெண்களுக்கு ஹார்மோன் தெரஃபி ஒத்து வராது’’ என்று கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hormonal Imbalance, Menopause