முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / சரும நோய்களுக்கு பயன்படுத்தக் கூடிய மருந்துகள் மதுவுக்கு அடிமையாவதை கட்டுப்படுத்தலாம் - ஆய்வில் தகவல்.!

சரும நோய்களுக்கு பயன்படுத்தக் கூடிய மருந்துகள் மதுவுக்கு அடிமையாவதை கட்டுப்படுத்தலாம் - ஆய்வில் தகவல்.!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

மது அளவை குறைக்க வேண்டும் என்று விரும்புகின்ற நபர்களை மேலும் ஊக்கப்படுத்துவதாக இந்த மருந்து அமையும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

அளவுக்கு அதிகமாக மது அருந்துவது எண்ணற்ற உடல்நல பிரச்சினைகளை கொண்டு வந்து சேர்க்கிறது. மிக முக்கியமாக சிறுநீரகம் மற்றும் கல்லீரலின் செயல்பாடுகளை இது வெகுவாகப் பாதிப்பதுடன், நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைய தொடங்குகிறது. மதுவுக்கு அடிமையாகும் ஒவ்வொரு நபரும் சமூகத்தில் இருந்து தனித்து விடப்படுகின்றனர் மற்றும் மனம் உடைந்தவர்களாக காட்சியளிக்கின்றனர்.

மது அடிமைத்தனத்தை போக்குவதற்கு எண்ணற்ற மருந்துகள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், அதையெல்லாம் முற்றிலும் வழக்கத்திற்கு மாறான புதிய சிகிச்சை முறை இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொதுவாக சரும பிரச்சினைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் கூட மது அடிமைத்தன பிரச்சினைக்கு தீர்வளிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஒரேகான் மருத்துவ மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் இதர ஆய்வு நிறுவனங்களின் மூலமாக இந்த ஆய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வாளர்களில் ஒருவராகிய ஏஞ்சலா ஓஸ்பர்ன் இது குறித்து கூறுகையில், “இதுபோன்றதொரு மருந்தை நான் இதற்கு முன்பு கண்டதில்லை’’ என்றார்.

மதுவுக்கு அடிமையான நபர்கள் இந்த மருந்தை உட்கொண்ட பிறகு, சராசரியாக அவர்கள் எடுத்துக் கொள்ளும் மதுவின் அளவு பாதிக்கும் கீழாக குறைந்திருக்கிறது என்று தெரியவந்துள்ளது. அதாவது நாளொன்றுக்கு 5 முறை மது அருந்தினால் இப்போது அது 2 முறையாக குறைந்திருக்கிறதாம்.

முன்னதாக கடந்த 2015ஆம் ஆண்டில் இந்த ஆய்வு நடவடிக்கை தொடங்கப்பட்டது. சொரியாசிஸ், சொரியாடிக் ஆர்திரைடிஸ் போன்ற நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்ற ‘அப்ரிமிலாஸ்ட்’ என்ற மாத்திரையை கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முடிவில், மது வேட்கையை கட்டுப்படுத்தக் கூடிய மூளையின் செயல்பாட்டை இந்த மருந்து தூண்டுகிறது என்பது தெரிய வந்தது.

முதலில் விலங்குகளுக்கு இந்த மருந்தை கொடுத்து பரிசோதனை செய்தனர். பின்னர், மனிதர்களில் 51 நபர்களுக்கு இந்த மருந்தை 11 நாட்கள் கொடுத்து ஆய்வு மேற்கொண்டனர். இதில் நல்ல மாற்றம் தென்பட தொடங்கியது.

இதுகுறித்து ஆய்வாளர்களில் ஒருவரான பார்பரா மேசன் கூறுகையில், “அப்ரிமிலாஸ்ட் மாத்திரை எடுத்துக் கொள்ளும்போது மது அருந்தும் பழக்கம் பெருமளவில் குறைகிறது. ஆய்வில் பங்கேற்பவர்கள் இந்த மருந்துக்கு முழு ஒத்துழைப்பு தருகின்றனர். மது அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இது மிக சிறப்பான மருந்தாகும்’’ என்று கூறினார்.

Also Read : ஆல்கஹால் அதிகம் உட்கொள்வதால் உடலில் எலக்ட்ரோலைட் குறைபாடு உண்டாகுமா..?

மது அளவை குறைக்க வேண்டும் என்று விரும்புகின்ற நபர்களை மேலும் ஊக்கப்படுத்துவதாக இந்த மருந்து அமையும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மது அருந்துவதால் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள அதே வேளையில், எந்தவித சிகிச்சையும் வேண்டாம் என்று மறுத்து வருகின்ற நபர்களைக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது. இதில் மது அருந்தும் வேட்கை அவர்களிடம் வெகுவாக குறைந்தது தெரிய வந்தது.

First published:

Tags: Alcohol, Alcohol consumption, Drug addiction